என் மலர்tooltip icon

    மிதுனம்

    சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026

    அன்பான மிதுன ராசியினரே

    வருட கிரகங்களில் மிக முக்கிய கிரகமான சனிபகவான் தற்போது கோட்ச்சாரத்தில் உங்கள் ராசிக்கு பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தனது மூன்றாம் பார்வையால் 12ம்மிடமான அயன சயன விரய ஸ்தானத்தையும் ஏழாம் பார்வையால் 4ம்மிடமான சுக ஸ்தானத்தையும் பத்தாம் பார்வையால் 7ம்மிடமான களத்திர ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார்.

    மிதுன ராசிக்கு அஷ்டமாதி பதி மற்றும் பாக்கியாதிபதியான சனிபகவான் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சில நல்ல பலன்களை ஏற்படுத்தி தந்துவிடும்.பொதுவாக குரு வீட்டில் சனியோ சனி வீட்டில் குருவே இருப்பது சிறப்பான அம்சமாகும். நீங்கள் எந்த வயதினராக இருந்தாலும் உங்கள் வயதிற்கும், தகுதிக்கும் திறமைக்கும், பூர்வ புண்ணிய பலத்திற்கும் ஏற்ப பலன் பெறும் காலம் வந்து விட்டது.

    தொழில் ஸ்தான சனியின் பொதுவான பலன்கள்

    9ம்மிடத்தில் சனி பகவான் நின்ற போது ஆரம்பித்த தொழில் பெரும் விருட்சமாகி கனி கொடுக்கும் காலம் வந்துவிட்டது. தொழிலை இழுத்து முடிவிட்டு வேறு வேலைக்கு சென்று விடலாமா? என்று நம்பிக்கை இழந்து இருந்தவர்கள் வாழ்வில் செட்டிலாகி விடும் நேரமாகும். ஒரு மனிதனை சமூதாயத்தில் தலை சிறந்த மனிதனாக உயர்த்திக் காட்டுவது தொழில் தான். தொழில் சிறப்பாக இருந்தால் எல்லாம் தேடி வரும். தொழிலில் பெரிய சாதனையை பெற்றுத் தரும் வாய்ப்புகள் தேடி வரும். வாழ்க்கையே போராட்டமாக இருந்தவர்களுக்கு சீரான தொழில் வளர்ச்சியால் மன நிம்மதியான வாழ்க்கை அமையும். அன்றாடம் கூலி வேலை செய்து சம்பாதித்தவர்கள் சொந்த தொழில் செய்து பெரும் வருமானம் ஈட்டும் நேரம் வந்து விட்டது. வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களின் வாழ்க்கை தரம் உயரும் . வருமான வரி கட்டக் கூடிய அளவிற்கு தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தன வரவு சிறக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்.

    உங்கள் தேவைகளை பட்டியலிட்டு ஒவ்வொன்றாக நிறைவேற்றுவீர்கள். இதுவரை முடங்கி கிடந்த, தடைபட்ட அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு சிறு முயற்சியில் வெற்றி வாய்ப்பை தேடித்தரும். புதிய சொத்துக்கள் சேர வாய்ப்புள்ளது. புதிய சொத்துக்கள் வாங்கும் முன்பு முக்கிய பத்திரங்களை படித்துப் பார்ப்பது அவசியம். வாடகைக்கு போகாமல் இருந்த அசையாச் சொத்துக்களுக்கு புதிய வாடகைதாரர் கிடைப்பார்கள்.

    சொத்துகளின் மதிப்பு உயரும். விரும்பிய உயர் கல்வி வாய்ப்பு சிறு தடைக்குப் பிறகு சாதகமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வுடன் கூடிய பணி மாற்றம் ஏற்படும். அரசு வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு பணி நியமன ஆணை கிடைக்கும். வேலை பார்த்த இடத்தில் இருந்து வந்த பிணக்குகள் சீராகும். இதுவரை நிரந்தர வேலை இல்லாதவர்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு கம்பெனி செலவில் வெளிநாடு சென்று பணிபுரியும் சந்தர்ப்பம் கிட்டும்.

    திடீர் பதவி, புகழ், கெளரவம் கிடைக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மேன்மையான காலம். அதிகாரப் பதவிகள் தேடி வரும். அரசியலில் கருத்து ஒற்றுமை ஏற்படும். கட்சி மேலிடம் உங்களுக்கு முக்கியத்துவமும், பதவியும் கொடுக்கும். புனித நீராடல், புனித ஸ்தல யாத்திரை சென்று வாய்ப்பு கிடைக்கும். இஷ்ட, குல, உபாசனை தெய்வ வழிபாடு பலிதமாகும். பூர்வீக சொத்துக்களை பிரிப்பதில் ஏதாவது கருத்து வேறுபாடு இருந்தால் இப்பொழுது சரியாகிவிடும். பொதுக் காரியங்களில் ஈடுபட்டு உங்களின் செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள். ஆலயத் திருப்பணிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். அந்தணர்கள், சிவனடியார்களுக்கு தான, தர்மங்கள் கொடுத்து ஆனந்தம் அடைவீர்கள் சிலருக்கு இன்சூரன்ஸ், பாலிசி முதிர்வு தொகை, உயில் சொத்து கிடைக்கும். புத்திர பாக்கியத்தில் நிலவிய தடைகள் அகலும்.

    முன்றாம் பார்வை பலன்கள்

    சனி பகவானின் 3ம் பார்வை ராசிக்கு 12ம்மிடமான விரய அயன, சயன ஸ்தானத்தில் பதிகிறது. செலவுகள் கட்டுக்கு அடங்காமல் இருக்கும். செலவுகளை கட்டுப்படுத்தி சேமிப்பை உயர்த்துவது எப்படி என்பதை சனி பகவான் புரிய வைப்பார். நேரத்திற்கு உண்டு, உறங்க முடியாமல் கடுமையாக உழைக்க நேரும். வெளிநாட்டு குடியுரிமையில் நிலவிய சட்ட சிக்கல்கள் சீராகும். பங்குச் சந்தை முதலீடுகள் உங்களை நிலை தடுமாற வைக்கும். இந்த காலகட்டத்தில் பங்குச் சந்தை, ரேஸ், லாட்டரி போன்ற அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வம் குறைப்பது நல்லது. வரவு இல்லாமல் இருந்தால் கூட பரவாயில்லை.

    முதலுக்கே மோசமாக முடியும் என்பதால் கவனம் தேவை. உற்றார், உறவினர்கள் நண்பர்களுக்கு ஜாமீன் போட்டால் கடன் தொகைக்கு நீங்களே பொறுப்பு ஏற்க நேரும். ஊருக்கு தெரியாமல் இருந்த உங்களின் உல்லாச வாழ்க்கை குற்றவாளி கூண்டில் நிறுத்தும். உங்களின் கவனக்குறைவான செயல்களால் மறைமுக எதிரிகள் உருவாகலாம். நம்பிக்கையானவர்களே முதுகில் குத்த நேரம். நெருக்கமானவர்களே உங்களுக்கு எதிராக திரும்பும் வாய்ப்பு இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

    உறவினர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. உடலில் இடது கண், பாதங்களில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் தக்க மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுதல் வேண்டும். குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதை அனுமதிக்கக் கூடாது. தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

    ஏழாம் பார்வை பலன்கள்

    தொழில் ஸ்தான சனியின் 4ம் பார்வை சுக ஸ்தானத்திற்கு இருப்பதால் தொழில் நிமித்தமான பயணம், அலைச்சல் மிகுதியாகும். தடைபட்ட வீடு, வாகனம் யோகம் தற்போது கிடைக்கப்பெறும். பல வங்கி ஏறியும் வீடு கட்ட கடனுதவி கிடைக்காததால் வீடு கட்டும் முயற்சியை ஒத்தி வைத்த உங்களுக்கு வீட்டு கடன் இப்பொழுது வீட்டுக் கதவை தட்டும். வீட்டுக் கடன் கிடைத்து வீடு கட்டும் பணி துரிதப்படுத்தப்படும். ஜனன கால ஜாதகத்தில் சாதகமான தசா புத்தி நடந்து கொண்டு இருந்தால் உங்களின் எண்ணங்கள், திட்டங்கள் நிறைவேறும்.

    சனியின் பார்வை 4ம்மிடத்தில் இருப்பதால் பழைய வீட்டை வாங்கினால் பொருள் விரையம் குறையும். பழைய வாகனத்தை கொடுத்து விட்டு சற்று விலை உயர்ந்த புதிய வண்டி வாங்கும் வாய்ப்பு கிட்டும். ஒரு சிலருக்கு பெரும் தொகை கிடைக்கும். தங்கம் வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்கள் வீட்டில் சேரும். வீட்டிற்கு தேவையான அதிநவீன பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாய் வழி நெருங்கிய உறவினர்களுடன் விருந்து உபசாரங்களில் கலந்து கொள்வீர்கள். பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் படிப்பில் அதிக கவனம் செலுத்தி பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதுடன் ஆசிரியர்களின் பாராட்டையும் பெறுவீர்கள். பள்ளி, கல்லூரி கலை நிகழ்சிகளில் கலந்து பரிசுகளும், பதக்கங்களும் பெறுவீர்கள். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனைகள் புதுத்தெம்பையும், புத்துணர்வையும் கொடுக்கும்.

    பத்தாம் பார்வை பலன்கள்

    சனியின் 10ம் பார்வை 7ம்மிடமான களத்திர ஸ்தானத்தில் பதிகிறது. சனி தான் பார்த்த வீட்டின் வேலையை தாமதப்படுத்தி தான் நடத்துவார் என்பதால் வரன் சார்ந்த மனக்குழப்பம் இருக்கும்.கணவன், மனைவிக்கு சிறு கருத்து வேறுபாடு வந்து மறையும். பல நேரங்களில் சம்பந்திகள் சண்டையாகவும் மாற வாய்ப்பு உள்ளது. உறவினர்கள், நண்பர்களுக்கு பண உதவி செய்தால் திரும்ப வராது. அதுவே கணவன் மனைவி கருத்து வேறு பாடுக்கு காரணமாக அமையும். தொழில் கூட்டாளிகள் டையே முறையான ஒப்பந்தம் இட்டு தொழில் நடத்த வேண்டும். ஒரு சிலர் பூர்வீகச் சொத்தை விற்று புதிய சொத்து வாங்குவார்கள். பணப் புழக்கம் சரளமாக இருக்கும். சீட்டு, ரேஸ், பங்குச் சந்தை மூலம் வருமானம் பெருகும். புதிய தொழில் கிளைகள் உருவாக்க ஏற்ற காலம். அரசியலில், மிகப் பெரிய பதவிகளும் பொறுப்புகளும் தேடி வரும். சேவை மனப்பான்மையுடன் இருந்தால் தேர்தல் வெற்றி உங்களுக்கே. சமூக அந்தஸ்து மிகச் சிறப்பாக நல்ல பெயரை பெற்றுத் தரும். மிகப் பெரிய தொழில் நிறுவனங்களை நடத்தி வருபவர்கள் தொழிலுக்கு தேவையான இன்சூரன்ஸ் செய்து கொள்வது நலம். குலதெய்வ அருள் கிடைக்கும். கூப்பிட்ட குரலுக்கு குல தெய்வம் வந்து நிற்கும். வீடு அல்லது தொழில் நிறுவனத்தில் குல தெய்வத்தின் படம் வைத்து வழிபட்டால் வெற்றி வாய்ப்பு மேலும் அதிகரிக்கும்.

    திருமணம்

    7ம் இடத்திற்கு சனி பார்வையால் தடைபட்ட காதல் திருமண முயற்சிகள் கைகூடும். பலர் காதல் வயப்படுவார்கள். சிலர் மதம் மாறிய அல்லது குலம் மாறிய திருமணம் செய்வார்கள். மூத்த சகோதர, சகோதரிகளுக்கு திருமணமாகமல் லயன் கிளியர் ஆகாமல் இருநத இளவட்டங்களுக்கு ரூட் கிளியர் ஆகிவிடும். மண முறிவு ஏற்பட்டவர்களுக்கு இரண்டாம் திருமணம் நடக்கும். சிலருக்கு வரன் பற்றிய முடிவு எடுக்க முடியாமல் மன குழப்பம் இருக்கும்.

    பெண்கள்

    நாட்டின் கண்களான மிதுன ராசி பெண்களுக்கு வாழ்க்கை தரம் உயரும். புதிய தொழில் உத்தியோக வாய்ப்புகள் தேடி வரும். இதுவரை யோசிக்காத வகையில் விவேகமாக சிந்தனை செய்து தொழிலை வளப்படுத்துவீர்கள். தாய்வழிச் சொத்தில் முழுமையான பங்குகள் கிடைக்கும். புதிய நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.

    வீடு, மனை, வாகனம், திருமணம், மகப்பேறு போன்றவற்றின் மூலம் நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும்.மருத்துவச் செலவுகள் குறையும். பிள்ளைகளால் உறவினர்களிடம் மதிப்பு கூடும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும்.வாழ்க்கை துணையின் அன்பு அதிகரிக்கும்.அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

    பரிகாரம்

    சனிக்கிழமைகளில் சிவ வழிபாடு நல்ல பலன் தரும். வசதி இருப்பவர்கள் உடல் நலம் குன்றியவர்களுக்கு மருத்துவ உதவி செய்யலாம்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×