என் மலர்
மிதுனம் - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்
மிதுனம்
2025 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்
ஒன்பதாம் இடத்தில் ராகு பொன்பொருள் குவியும் பாரு!
மிதுன ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான், 26.4.2025 அன்று 9-ம் இடத்திற்கு வரப்போகிறார். அதே நேரத்தில் கேது பகவான் உங்கள் ராசிக்கு வெற்றிகள் ஸ்தானமான 3-ம் இடத்திற்கு வருகிறார். பாக்கிய ஸ்தானத்திற்கு வரும் ராகுவால் பலவித வழிகளிலும் உங்களுக்கு நன்மைகள் வந்துசேரும். இந்த நேரத்தில் ராகு, சகல பாக்கியங்களையும் உங்களுக்கு வழங்குவார்.
9-ம் இடத்திற்கு வரும் ராகுவால் ஒப்பற்ற நற்பலன்கள் வரப்போகிறது. 1½ ஆண்டு காலங்கள் அங்கு சஞ்சரிக்கும் ராகுவால் தொழில் வளர்ச்சி திருப்தி தரும். பெற்றோரின் வாயிலாகவும், நண்பர்கள் வாயிலாகவும் போதுமான பொருளாதாரம் கிடைக்கும்.
புனித பயணங்கள் அதிகரிக்கும். கற்றவரும், மற்றவரும் பாராட்டும் விதத்தில் ஒரு நல்ல காரிமொன்றை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சம்பள உயர்வின் காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று அயலூரில் பணிபுரியும் சூழல் உருவாகும்.
3-ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் முன்னேற்றத்தில் இருந்த முட்டுகட்டைகள் அகலும். பிள்ளைகளாலும், பிறராலும் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். பாகப்பிரிவினைக்கு இதுவரை சம்மதிக்காத உடன்பிறப்புகள் இப்பொழுது சம்மதிப்பர். உங்களுக்குரிய பங்கு கைக்கு கிடைத்தாலும் அந்த இடத்தை விற்றுவிட்டு புதிய இடம் வாங்குவதிலேயே குறிக்கோளாக இருப்பீர்கள். வருமானம் வருவதில் தடை இருக்காது.
குரு சாரத்தில் ராகு சஞ்சாரம் (26.04.2025 முதல் 31.10.2025 வரை)
பூரட்டாதி நட்சத்திரக் காலில் குரு சாரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் பொழுது, கல்யாண வாய்ப்புகள் கைகூடும். கடல் தாண்டி சென்று பணிபுரியும் வாய்ப்பு உண்டு. புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புனித பயணங்கள் அதிகரிக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கொண்டு செயல்பட்டு மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். சொத்துக்கள் வாங்குவதும் விற்பதும் கைவந்த கலையாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீரென இடமாற்றம் வரலாம்.
சூரிய சாரத்தில் கேது சஞ்சாரம் (26.4.2025 முதல் 27.6.2025 வரை)
உத்ரம் நட்சத்திரக் காலில் சூரிய சாரத்தில் கேது சஞ்சரிக்கும் போது, இக்காலத்தில் நிம்மதி கொஞ்சம் குறையலாம். நேசித்தவர்களிடம் கூட யோசித்து பேசும் சூழ்நிலை உருவாகலாம். குடும்பத்தில் அமைதி குறையும். குடும்பத்தில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்பட்டால் தான் ஒற்றுமை நீடிக்கும். பிறரை நம்பி எந்த பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். சொல்லை செயலாக்கி காட்ட முடியாது. அரசு வழி சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும். துணிவும், தன்னம்பிக்கையும் குறையும்.
சுக்ர சாரத்தில் கேது சஞ்சாரம் (28.6.2025 முதல் 5.3.2026 வரை)
பூரம் நட்சத்திரக் காலில் சுக்ர சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். இடமாற்றம், வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் மட்டுமின்றி தொழில் மாற்றமும் உருவாகலாம். விலகி கொள்வதாக அச்சுறுத்திக் கொண்டிருந்த பங்குதாரர்களை விலக்கி விட்டு, தொழிலில் புதிய பங்குதாரர்களை சேர்த்துக்கொள்ள முன்வருவீர்கள். சுபச்செலவு அதிகரிக்கும். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்போடு உத்தியோகத்தில் புதிய இடத்தில் சேர முயற்சிப்பீர்கள்.
சனிப்பெயர்ச்சி காலம்
6.3.2026 அன்று மீன ராசிக்கு சனிப்பெயர்ச்சியாகி செல்கிறார். உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சனி வரும் பொழுது கர்ம ஸ்தானம் பலப்படுகிறது. எனவே பெற்றோரின் உடல் நலத்தில் கவனம் தேவை. ஆரோக்கிய சீர்கேடுகளும், மருத்துவச் செலவும் உண்டு. அதே நேரத்தில் தொழில் வளர்ச்சியில் இருந்த இடையூறு அகலும்.
புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு அனைத்து வழிகளிலும் அனுகூலம் கிடைக்கும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும் நேரம் இது. பொருளாதாரம் ஏற்ற இறக்கமாக இருக்கும்.
குருப்பெயர்ச்சி காலம்
ராகு- கேது பெயர்ச்சி காலத்தில் குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. வருகிற 11.5.2025 அன்று குரு பகவான், மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அப்போது அதன் பார்வை பலத்தால் பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். பிள்ளைகளின் முன்னேற்றம் கண்டு பெருமைபடுவீர்கள். தடைப்பட்ட திருமணம் தானாக நடைபெறும் வாய்ப்பும் உண்டு. பங்காளி பகை மாறும்.
இதுவரை உங்கள் மீது பாசம் காட்டாத பெற்றோர் இப்பொழுது பாசம் காட்டுவர். பணத்தேவை பூர்த்தியாகவும் வழிவகுத்து கொடுப்பர். குடும்ப முன்னேற்றம் கூடும். அக்டோபர் 8-ந் தேதி குரு பகவான், அதிசாரமாக கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அப்போது அதன் பார்வை பலத்தால் உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.
மிதுனம்
ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்8.10.2023 முதல் 25.4.2025 வரை
மிதுன ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான், அக்டோபர் 8-ந் தேதி முதல் 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். அதே நேரம் கேது பகவான் 4-ம் இடத்திற்கு வருகிறார். ஒன்றரை ஆண்டுகாலம் இந்த இடத்தில் இருந்தபடியே ராகு-கேது இருவரும் நட்சத்திரப் பாதசாரங்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குவார்கள்.
10-ம் இடத்தில் சஞ்சரிக்கப்போகும் ராகுவால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். தொழிலில் இருந்த தடைகள் அகலும். கொடுக்கல்- வாங்கல் சுமுகமாகும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து ஆச்சரியப்பட வைக்கும். 'வேலைக்கு செல்வதா? அல்லது தொழில் செய்வதா?' என்று குழம்பியவர்களுக்கு தெளிவு பிறக்கும். 'செய்யும் தொழிலை விரிவு செய்ய, போதுமான மூலதனம் கிடைக்கவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, அதற்கான வாய்ப்பு உருவாகும். ஒரு சிலருக்கு தள்ளிப்போன பதவி உயர்வு கிடைக்கப்பெறும்.
சுக ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால், ஆரோக்கியத்தில் அடிக்கடி அச்சுறுத்தல்ஏற்படும். தகுந்த ஓய்வு, உடல்நலத்தை சீராக்கும். பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரையான போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பயணங்கள் அதிகரிக்கும்.
குரு மற்றும் சனி வக்ர காலம்
8.10.2023 முதல் 20.12.2023 வரை மேஷ ராசியிலும், 25.9.2024 முதல் 22.1.2025 வரை ரிஷப ராசியிலும் குரு வக்ரம் பெறுகிறார். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வக்ரமடைவது நன்மைதான். திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். குடும்ப முன்னேற்றம் கூடும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
8.10.2023 முதல் 24.10.2023 வரை மகர ராசியிலும், 10.7.2024 முதல் 5.11.2024 வரை கும்ப ராசியிலும் சனி வக்ரம் பெறுகிறார். இந்த காலகட்டத்தில் வியாபாரம் வெற்றி நடைபோடும். வீடு மாற்றம் நன்மை தரும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். வெளிநாடு செல்லும் முயற்சி அனுகூலமாகும். உத்தியோகத்தில் இடமாற்றம், இலாகா மாற்றம் உறுதியாகலாம்.
சனிப்பெயர்ச்சி காலம்
20.12.2023 அன்று கும்ப ராசிக்கு சனி பகவான் செல்கிறார். அவர் பாக்கிய ஸ்தானத்திற்கு வருவதால் உங்களுடைய அஷ்டமத்துச் சனி விலகிவிட்டது. எனவே குறுக்கீடு சக்திகள் அகலும். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும். பொதுவாழ்வில் மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். தனவரவு திருப்திகரமாக இருக்கும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.
குருப்பெயர்ச்சி காலம்
1.5.2024 அன்று ரிஷப ராசிக்கு குரு செல்கிறார். அவரது பார்வை உங்கள் ராசிக்கு 4, 6, 8 ஆகிய இடங்களில் பதிகிறது. நீங்கள் எந்தத் துறையில் ஈடுபட்டிருந்தாலும் அதில் மாற்றம் உண்டு. வரும் மாற்றம் நல்ல மாற்றமாகவே அமையும். வீடு, மனை சேர்க்கை உண்டு. கட்டிய வீட்டை பழுதுபார்க்கும் சூழல் சிலருக்கு ஏற்படும். சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும் நேரம் இது.
பெண்களுக்கான பலன்கள்
ராகு- கேது பெயர்ச்சியின் விளைவாக எண்ணற்ற மாற்றங்களைச் சந்திக்கப் போகிறீர்கள். குடும்ப ஒற்றுமை பலப்படும். தொழில் முன்னேற்றம் உண்டு. கடன் சுமை குறையும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பெயரிலேயே சொத்து வாங்கும் யோகம் வாய்க்கும். பணிபுரியும் பெண்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
வளர்ச்சி தரும் வழிபாடு
பத்தாமிடத்து ராகுவால் தொழில் வளம் மேலோங்கவும், நான்காம் இடத்து கேதுவால் நலங்கள் யாவும் வந்து சேரவும், திருமால் - திருமகள் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.
மிதுனம்
ராகுகேது பெயர்ச்சி பலன்கள் - 2023
12.4.2022 முதல் 30.10.2023 வரை
பதினொன்றில் ராகு/ ஐந்தாமிட கேது
தன்னம்பிக்கை நிறைந்த மிதுன ராசியினரே ராகு/கேதுக்கள் 11, 5ம் இடத்திலும் குருபகவான் 10,11ம் இடத்திலும் சனி பகவான் 8.9 ம் இடங்களில் சஞ்சரிக்கிறார்கள்.
லாப ராகுவின் பலன்கள்: பொதுவாக 11ம் இடத்தில் நிற்கும் அனைத்து கிரகங்களும் நன்மையை மட்டுமே செய்யும் என்பது ஜோதிட விதி. அதுவும் கோட்சாரத்தில் அசுப கிரகங்கள் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது சுப பலன்கள் இரட்டிப்பாகும். ஏனெனில் 11ம் இடம் என்பது உப ஜெய ஸ்தானம். 11ம் இடம் என்பது லாபஸ்தானம். எனவே திடீர் தனலாபத்தில் மிதப்பீர்கள். அந்தப் பணம் தொழில் மூலமாக கிடைக்குமா? பூர்வீகச் சொத்திலிருந்து கிடைக்கும் பங்கு பணமா அல்லது அதிர்ஷ்ட பணமா அல்லது பிள்ளை இல்லாச் சொத்தா? என்பது ஜனன கால ரீதியான தசா புக்தியைப் பொறுத்தது.
இதுவரை பொருளாதாரத்தில் மிகத் தாழ்வான நிலையில் இருந்தவர்கள் கூட சரளமான பணப்புழக்கம் இருக்கும். ஒருவருக்கு அதிர்ஷ்டத்தை வழங்க ராகு முடிவு செய்துவிட்டால் அதனை யாராலும் அணை போட்டு நிறுத்த முடியாது. அனைத்து கிரகப் பெயர்ச்சிகளும் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் மிதுன ராசியினரின் காட்டில் அடை மழை தான். சனி பகவான் மகரத்தை விட்டு நகரும் போது அஷ்டமச் சனியின் பாதிப்பு முழுமையாக குறைந்து பாக்கிய பலன்கள் துளிர் விடும். குருபகவான் 10ம் இடமான தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறப்போகிறார். இவ்வாறு மிதுனராசியினருக்கு ராகுவால் நடக்கும் சுப பலன்கள் ஏராளம். இங்கே விவரிக்கப்பட்டுள்ள பலன்கள் சாதாரணம். ராகு மேஷ ராசியில் உள்ள நட்சத்திர பாதங்களான கிருத்திகை, பரணி, அசுவினி நட்சத்திரங்களில் மூலம் ராசியை கடக்கிறார்.
12.4.2022 முதல்14.6.2022 வரை ராகுவின் கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள்:சூரியனின் நட்சத்திரமான கிருத்திகை மிதுனத்திற்கு மூன்றாம் அதிபதி.சூரியன் ராகு சேர்க்கை கிரகண தோஷ அமைப்பு என்றால் சூரியன் உங்களுக்கு சகாய ஸ்தானாதிபதி என்பதால் சகோதர, சகோதரிகளின் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கும். கடன் அடைக்க உதவுவார்கள். பலருக்கு இடமாற்றம் செய்ய நேரும். ஒரு சிலருக்கு கைவிட்டுப் போன சொத்து அல்லது வேலை கிடைக்கும். கைமறதியாக வைத்த முக்கிய ஆவணங்கள் கண்ணில் தென்படும். சிலர் உயில் எழுதலாம் அல்லது உயிலில் திருத்தம் செய்யலாம். மனைவி வழிச் சொத்தை உயில் மாற்றம் செய்வதில் மாமனாரிடம் இருந்த எதிர்ப்புகள் அகலும்.மனக்குழப்பம் மன சஞ்சலம் அகலும். ஆத்ம ஞானம் பெருகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். முயற்சிப் பலிதம் உண்டாகும். ஒரு சிலருக்கு சிறு அறுவை சிகிச்சைக்கு பிறகு செவித்திறன் சரிசெய்யப்படும். சிலருக்கு அரசு உத்தியோகம் அல்லது அரசின் உதவிகள் கிடைக்கும்.
15.6.2022 முதல் 20.2.2023 வரை ராகுவின் பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள்:சுக்ரனின் நட்சத்திரமான பரணி மிதுனத்திற்கு 5,12ம் அதிபதி என்பதால் பங்கு வர்த்தகத்தில் எதிர்பாரத லாபம் கிடைக்கும். சிலர் புதிய பங்குகளில் முதலீடு செய்யலாம். பூர்வீகச் சொத்து தொடர்பான சர்ச்சைகள் முடிவுக்கு வரலாம். மனம் அமைதியை, தனிமையை விரும்பும். உங்களின் தன் மானத்தை கூறு போடும் விதத்தில் சோதனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம். அதே நேரத்தில் எதையும் தாங்கும் மனப்பக்குவத்திற்கு ராகு உங்களை தயார்படுத்தி விடுவார்.
பிள்ளைகளால் மன நிறைவு, நிம்மதி உண்டாகும். கல்வி, தொழில்,உத்தியோக நிமித்தமாக வாரிசுகள் வெளியூர், அல்லது வெளிநாடு சென்று தங்கலாம். சுப மங்களச் செலவுகள் அதிகரிக்கும். காதலால் மன உளைச்சலை அனுபவித்தவர்களுக்கு அதிலிருந்து விடுபடும் மார்க்கம் தென்படும். சிலருக்கு புதிதாக காதல் சிந்தனை உருவாகும்.
21.2.2023 முதல் 30.10.2023 வரை ராகுவின் அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள்: கோட்சாரத்தில் ராசிக்கு 5ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவின் நட்சத்திரத்தில் ராகு பயணிக்கிறார். 5ம் இடம் என்பது அதிர்ஷ்டத்தைப் பற்றிக் கூறுமிடம். ராகு ஆசையை தூண்டும் கிரகம். கேது சட்டம், நேர்மை, நியாயம் என்று பேசும் கிரகம். ராகுவும் கேதுவும் தங்களின் நட்சத்திரத்தை பரிமாறிக் கொண்டு சஞ்சாரம் செய்யும் காலம் என்பதால் தார்மீக உணர்வோடு உழைத்து முன்னேறியவர்களுக்கு சிறிய பேராசை துளிர் விடும். மன சாட்சிக்கு வேறு வேலை கிடையாது. எதையாவது நினைவு படுத்தி நம்மை வதைக்கும் என குறுக்கு வழியில் சட்டத்திற்கு புறம்பான செயலில் ஈடுபட்டு அதிர்ஷ்டத்தை பேரதிர்ஷ்டமாக மாற்ற முயற்சிப்பார்கள். சட்டத்தை மதிப்பதா? இல்லை புறக்கணிப்பதா என்ற பல எண்ண அலைகளால் மனக் குழப்பம் ஏற்படும். இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டத்தை நம்பி பெரிய முதலீடு, பணத்தை இரட்டிப்பாக்கும் தந்திரவாதிகளை நம்பக் கூடாது.
5ம்மிட கேதுவின் பலன்கள்: நடக்குமா? நடக்காதா? என உங்களை குழப்பத்தில் ஆழ்த்திய பல விசயங்கள் நல்ல முடிவிற்கு வரும். பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும். உங்களின் ஆத்மார்த்த உணர்வுகளை புரிந்து கொள்ளக் கூடிய எதிர் பாலின நட்பு கிடைக்கும். ஆலயத் திருப்பணிகள் செய்யும் பாக்கியம் கிடைக்கும்.
கூப்பிட்ட குரலுக்கு குல தெய்வம் ஒடி வந்து நிற்கும். தொழில், வேலை நிமித்தமாக பூர்வீகத்தை விட்டு வெளியேறியவர்கள் ஒய்வு காலத்தில் சொந்த ஊருக்கு சென்று செட்டில் ஆகுவீர்கள்.
இதுவரை சொந்த ஊரில் வாழ்ந்தவர்கள் உத்தியோகம், தொழில் நிமித்தமாக இடம்பெயர நேரும். உங்களின் குல தெய்வமே குழந்தையாக பிறக்கும். பூர்வீகம் தொடர்பான சொத்துப் பிரச்சனைகள், இழுத்தடித்த நீதிமன்ற வம்பு, வழக்குகளிலிருந்து சாதகமான தீர்ப்பு வரும். கேது துலாம் ராசியில் உள்ள விசாகம், சுவாதி, சித்திரை நட்சத்திரங்கள் மூலம் தன் பயணத்தை செலுத்துகிறார்.
12.4.2022 முதல் 17.10.2022 வரையான கேதுவின் விசாகம் நட்சத்திர சஞ்சார பலன்கள்:விசாகம் குருவின் நட்சத்திரம். குரு மிதுனத்திற்கு 7,10ம் அதிபதி. கோட்சார குரு 10ல் ஆட்சி பெறப் போவதால் இதுவரை நிலையான வேலை இல்லாத வாழ்க்கை துணைக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலரின் வாழ்க்கைத் துணைக்கு புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். சில தம்பதிகள் தொழில் உத்தியோக நிமித்தமாக பிரிந்து வெவ்வேறு ஊர்களில் வசிக்கலாம். சில தம்பதிகள் கருத்து வேறுபாடு காரணமாக சட்ட உதவியை நாடலாம். சிலர் புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம். சிலரின்கூட்டாளிகள் வம்பு வழக்கினால் பிரியலாம். சிலருக்கு நண்பர்கள், தொழில் கூட்டாளிகளால் தேவையற்ற மன உளைச்சல் உண்டாகும்.
18.10.2022 முதல் 26.6.2023 வரையான கேதுவின் சுவாதி நட்சத்திர சஞ்சார பலன்கள்:11ம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவின் நட்சத்திரத்தில் கேது பயணிக்கும் காலத்தில் சிலரின் வாழ்க்கைப் பாதையில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் உண்டாகும். சிலருக்கு சட்டத்திற்கு எதிரான இரண்டாம் திருமணம் நடக்கும். பல வருடங்களாக பேச்சு வார்த்தை இல்லாமல் வாழ்ந்த அண்ணன், தம்பிகள் குடும்பங்கள் இணையும்.
வியாபாரத்திற்காக குடும்பத்திற்காக, பிள்ளைகளின் படிப்பிற்காக ஏதேனும் கடன் பட்டு இருந்தால் அவற்றை முழுமையாக அடைக்க தேவையான பொருள் வரவு உண்டாகும். சிலருக்கு உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் ஒத்துழைப்பால் கடன் குறையும்.
27.6.2023 முதல் 30.10.2023 வரை கேதுவின் சித்திரை நட்சத்திர சஞ்சார பலன்கள்:சித்திரை செவ்வாயின் நட்சத்திரம். மிதுனத்திற்கு 6,11ம் அதிபதி. சிலருக்கு யூரினரி இன்பெக்சன், கல்லடைப்பு போன்ற கணையம், சிறுநீரகம் சம்பந்தமான உடல் உபாதைகள் தோன்றும். சிலருக்கு சிறு அறுவை சிகிச்சை செய்ய நேரும். சிலருக்கு பல தலைமுறையாக பாதுகாத்த குடும்ப சொத்துக்களை கிடைத்த விலைக்கு விற்று கடனை அடைத்து விடலாம் என்ற எண்ணம் மேலோங்கும்.சிலருக்கு சொத்தின் மீதுள்ள வம்பு வழக்கை சரிசெய்ய சொத்தின் மதிப்பை விட அதிகமாக கடன் உருவாகும்.
மிதுன ராசிக்கு அனைத்து கிரகப் பெயர்ச்சிகளும் சாதகமாக உள்ளதால் மனக்கவலை மறந்து நிம்மதியாக இருக்கலாம்.
பரிகாரம்
சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ நாளில் ஈஸ்வரனைவில்வ இலையால் அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பு. சனிக்கிழமைகளில் ஆஞ்ச நேயருக்கு வடைமாலை சாற்றி வழிபட்டால் அஷ்டமச் சனியின் பாதிப்புகள் குறையும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406