என் மலர்tooltip icon

    மிதுனம்

    2026 தை மாத ராசிபலன்

    மிதுன ராசி நேயர்களே!

    தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் அஷ்டமத்தில் சஞ்சரிக்கிறார். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். ஆனால் அஷ்டமத்தில் சூரியன், செவ்வாய், சுக்ரன் ஆகிய மூன்று கிரகங்களும் சஞ்சரித்து வலிமை அடைவதால் திடீர் தாக்கங்கள், மன அமைதிக் குறைவு, ஆரோக்கியத் தொல்லை, கடன் நெருக்கடி, குடும்பச்சுமை அதிகரித்தல் போன்றவை ஏற்பட்டு மன வருத்தத்தை உருவாக்கும். எனவே அமைதியும், நிதானமும் தேவைப்படும் நேரம் இது. அனுபவஸ்தர்களின் ஆலோசனைப்படி நடந்தால் ஓரளவேனும் துன்பங்களில் இருந்து விடுதலை அடைய முடியும்.

    வக்ர குரு

    மிதுன ராசியில் உள்ள குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் குரு என்பதால், அவர் வக்ரம் பெறுவது ஒருவழிக்கு நன்மைதான். ஜென்ம குருவாக இருப்பதால் இடமாற்றம், ஊர் மாற்றம், வீடு மாற்றம் போன்றவை நிகழலாம். வரும் மாற்றங்களை ஏற்றுக்கொள்வது நல்லதுதான். 'உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். சகப் பணியாளர்களால் சில பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். குருவின் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே இந்த இடங்களுக்குரிய ஆதிபத்தியங்கள் எல்லாம் சிறப்பாக நடைபெறும். எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி காண, குரு பகவான் பார்வை கைகொடுக்கும். சப்தம ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால் கல்யாண முயற்சிகள் கைகூடும். விட்டுப்போன வரன்கள் கூட மீண்டும் வரலாம். பாக்கிய ஸ்தானத்தைப் பார்க்கும் குருவால் பெற்றோரின் ஆதரவு திருப்தி தரும். உற்றார், உறவினரின் ஆதரவு உண்டு. கற்ற கல்விக்கேற்ற வேலை கிடைக்கும். கடமையைச் செவ்வனே செய்து முடிப்பீர்கள்.

    கும்ப - புதன்

    உங்கள் ராசிநாதனாகவும், 4-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் புதன். அவர் 29.1.2026 அன்று கும்ப ராசியில் சஞ்சரிக்கப்போகிறார். எனவே பாக்கிய ஸ்தானம் பலம்பெறுகிறது. கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும். மாமன், மைத்துனர் வழியில் இருந்த மனக்கசப்பு மாறும். அவர்களின் இல்லங்களில் நடைபெறும் சுப நிகழ்வுகளை முன்னின்று நடத்துவீர்கள். பெற்றோர் வழியில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக மாறும். அவர்கள் மற்ற சகோதரர்களிடம் காட்டிய பாசத்தை இப்பொழுது உங்களிடமும் காட்டுவர். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் மாறும். கல்விக்காகவும், கலைக்காகவும் எடுத்த முயற்சி கைகூடும். பழைய வாகனத்தை சீர்செய்து உபயோகப்படுத்துவீர்கள்.

    கும்ப - சுக்ரன்

    மகரத்தில் சஞ்சரித்து வரும் சுக்ரன், 7.2.2026 அன்று கும்ப ராசிக்குச் செல்கிறார். இக்காலத்தில் தொழில் மாற்றம், இடமாற்றம் ஏற்படலாம். குரு-சுக்ர பார்வை இருப்பதால் குழப்பம் அதிகரிக்கும். கொடுக்கல் - வாங்கல்களில் திருப்தி ஏற்படாது. 'இதெல்லாம் நடக்குமா?' என்று நினைத்த காரியம் இப்போது நடந்து முடிந்து விடும். பிள்ளைகளின் முன்னேற்றம் திருப்தி தரும். பெண் பிள்ளைகளின் கல்யாணத்தை முன்னிட்டு சீர்வரிசைப் பொருட்கள் வாங்குவதில் அக்கறை காட்டுவீர்கள். இக்காலத்தில் குலதெய்வப் பிரார்த்தனை, தடைகளை அகற்றும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மாதத்தின் முற்பகுதி வளர்ச்சியையும், பிற்பகுதி தளர்ச்சியையும் ஏற்படுத்தும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு விறுவிறுப்பான சூழல் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் கவனம் தேவை. கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் வந்தும், உபயோகப்படுத்திக்கொள்ள இயலாது. மாணவ - மாணவிகளுக்கு ஆசிரியரின் ஆதரவு உண்டு. பெண்களுக்கு வீடு மாற்றம் இனிமை தரும். வேற்று இனத்தாரின் ஒத்துழைப்போடு கூட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜனவரி: 22, 23, 26, 27, பிப்ரவரி: 1, 2, 6, 7.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    ×