என் மலர்
மிதுனம்
2025 ஆனி மாத ராசிபலன்
எதையும் திட்டமிட்டு செய்யும் மிதுன ராசி நேயர்களே!
ஆனிமாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசியிலேயே பலம்பெற்று சஞ்சரிக்கிறார். அவரோடு சகாய ஸ்தானாதிபதி சூரியனும், தொழில் ஸ்தானாதிபதி குருவும் இணைந்து சஞ்சரிப்பதால் தொழில் முன்னேற்றம் எதிர்பார்த்ததை காட்டிலும் கூடுதலாக இருக்கும். கிளைத் தொழில் தொடங்கும் சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவிகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். ஜென்ம குருவின் ஆதிக்கத்தால் இடமாற்றங்கள் இனிமை தரும்விதம் அமையும்.
கடக - புதன்
ஆனி 8-ந் தேதி கடக ராசிக்கு புதன் வருகிறார். புதன் உங்கள் ராசிநாதனாகவும், சுக ஸ்தானாதிபதியாகவும் விளங்குபவர். அவர் 2-ம் இடத்திற்கு வரும் இந்த நேரம் இனிய பலன்கள் ஏராளமாக நடைபெறும். கொடுக்கல் - வாங்கல்கள் லாபம் தரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். அடுத்தடுத்து நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். சுபசெலவுகள் உண்டு. குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளுக்கு மேல்படிப்பு சம்பந்தமாக ஏதேனும் ஏற்பாடு செய்திருந்தால் அது கைகூடும். உத்தியோகத்தில் உங்களுக்கு இடையூறு செய்த மேலதிகாரிகள் மாற்றப்படுவர். அயல்நாடு சென்று பணிபுரிய வேண்டும் என்று விரும்பியவர்களுக்கு அது கைகூடும். நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம்.
ரிஷப - சுக்ரன்
ஆனி 15-ந் தேதி ரிஷப ராசிக்கு சுக்ரன் வருகிறார். விரயாதிபதி சுக்ரன் விரய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் கொஞ்சம் விரயங்கள் கூடுதலாகத்தான் இருக்கும். ஒரு சிலர் கடன் சுமையின் காரணமாக ஆபரணங்களை அடகு வைப்பதற்கோ, விற்பதற்கோ முயற்சிப்பர். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள்.
உங்கள் ராசியைபொறுத்தவரை சுக்ரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் அதிபதியானவர். எனவே அவர் தனது சொந்த வீட்டில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகளை முடித்து வைப்பார். பஞ்சாயத்துக்கள் சாதகமாக அமையும். பாகப்பிரிவினைகள் உங்கள் விருப்பம் போல் நடைபெறும். தேக நலமும் சிறப்பாக இருக்கும். செய்தொழிலை விரிவுசெய்யும் முயற்சிக்கு கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.
செவ்வாய் - சனி பார்வை
மாதம் முழுவதும் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனியை சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய் பார்க்கிறார். இது அவ்வளவு நல்லதல்ல. உடன்பிறப்புகளாலும், உடன் இருப்பவர்களாலும் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் இணக்கம் குறையும். வேலையை விட்டு விடலாமா? என்ற சிந்தனை அதிகரிக்கும். பாகப்பிரிவினைகள் முடிவடையாமல் இழுபறி நிலையில் இருக்கும். கைக்கு கிடைத்தது வாய்க்கு கிட்டவில்லையே என்ற சூழ்நிலை அமையும். சொத்துப் பிரச்சினையும், சொந்தங்களின் பிரச்சினையும் அதிகரிக்கும் நேரமிது. வரவு வருவதற்கு முன்னதாகவே செலவு காத்திருக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு குறுக்கீடுகள் அதிகரிக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு பங்குதாரர்களால் தொல்லை உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வந்தாலும் உபயோகப்படுத்திக் கொள்ள இயலாது. மாணவ - மாணவியர்களுக்கு மறதி அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்பச்சுமை கூடும். விரயங்கள் எதிர்பாராத விதம் வந்துசேரும்.
இம்மாதம் பெருமாள் - லட்சுமி வழிபாடு பெருமை சேர்க்கும்.






