என் மலர்tooltip icon

    மிதுனம்

    2025 சித்திரை மாத ராசிபலன்

    சமயோசித புத்தியால் தடைகளைத் தகர்த்தெறியும் மிதுன ராசி நேயர்களே!

    விசுவாவசு வருடம் சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் நீச்சம்பெற்று, உச்சம்பெற்ற சுக்ரனோடு இணைந்து 'நீச்சபங்க ராஜயோக' அமைப்பை உருவாக்குகிறார். எனவே இம்மாதம் முற்பாதியைக் காட்டிலும் பிற்பாதி சிறப்பாக இருக்கும்.

    மாத தொடக்கத்தில் விரயங்கள் ஏற்பட்டாலும், பிறகு வருமானம் வந்து கொண்டேயிருக்கும். தொழில் வளர்ச்சியில் மாற்று இனத்தவர்களின் பங்கு அதிகரிக்கும். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெற வழிபிறக்கும். ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்தி ஆரோக்கியத்தை சீராக வைத்துக்கொள்வது நல்லது.

    குரு- சுக்ர பரிவர்த்தனை

    சித்திரை முதல் தேதி முதல் 27-ந் தேதி வரை குரு - சுக்ர பரிவர்த்தனை இருக்கிறது. உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சுக்ரன், களத்திர ஸ்தானாதிபதி குரு இவை இரண்டின் பரிவர்த்தனைக் காலத்தில் நல்ல பலன்கள் நிறைய நடைபெறும். குறிப்பாக பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள். தொழில் மற்றும் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக வரவேண்டிய பதவி உயர்வு இப்பொழுது கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைந்து, பொருளாதார நிலை உயர வழிவகுத்துக் கொடுப்பர்.

    கும்ப - ராகு, சிம்ம- கேது

    சித்திரை 13-ந் தேதி கும்ப ராசியில் ராகுவும், சிம்ம ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரிக்கும் கேதுவால் முன்னேற்றப் பாதையில் சில சறுக்கல்கள் வரலாம். அண்ணன், தம்பிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

    பொதுவாழ்வில் இருப்பவர்கள் வீண்பழிக்கு ஆளாக நேரிடும். ராகுவின் சஞ்சாரத்தால் பொன், பொருள் சேர்க்கை உண்டு. புதிய ஒப்பந்தங்கள் உண்டு. பூர்வீக சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டு. தொழில் கூட்டாளிகள் உங்களை விட்டு விலகினாலும் புதியவர்கள் வந்திணைவர். இக்காலத்தில் சர்ப்பக் கிரகங்களுக்குரிய சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வதன் மூலம் தனவரவை பெருக்கிக் கொள்ள இயலும்.

    மேஷ- புதன் சஞ்சாரம்

    சித்திரை 17-ந் தேதி மேஷ ராசிக்கு புதன் வருகிறார். அங்குள்ள சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். உங்கள் ராசிநாதன் புதன், லாப ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கணிசமான தொகை கைகளில் புரளும். பிள்ளைகளின் மேற்படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து சிலருக்கு அழைப்புகள் வரலாம்.

    மிதுன - குரு சஞ்சாரம்

    சித்திரை 28-ந் தேதி மிதுன ராசிக்கு குரு வருகிறார். இந்த குருப்பெயர்ச்சியின் விளைவாக அவரது பார்வை பதியும் இடங்களெல்லாம் புனிதமடைகின்றன. எனவே பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிரச்சினைகள் ஒவ்வொன்றாக நல்ல முடிவிற்கு வரும். உங்களுக்கோ, உங்கள் உடன்பிறப்புகளுக்கோ வரன்கள் வந்து முடிவாகாமல் இருந்தால் இப்பொழுது முடிவாகி மகிழ்ச்சியை வழங்கும். பூர்வீக சொத்துக்களை பங்கிட்டுக் கொள்வதில் இருந்த பிரச்சினை நீங்கும்.

    தொழில் வெற்றிநடை போடும்.பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு ஆதாயம் தரும் தகவல்கள் அதிகம் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் இனிமை தரும் விதம் அமையும். கலைஞர் களுக்கு புகழ் கூடும். மாணவ - மாணவிகளுக்கு நினைவாற்றல் பளிச்சிடும். பெண்களுக்கு சேமிப்பு உயரும். பயணம் பலன்தரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஏப்ரல்: 23, 24, 27, 28, மே: 4, 5, 8, 9.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.

    ×