என் மலர்

  மிதுனம் - குருப்பெயர்ச்சி பலன்கள்

  மிதுனம்

  குருப்பெயர்ச்சி பலன்கள் - 2022

  புத்திக் கூர்மையான மிதுன ராசியினரே குருபகவான் 10ம் இடத்திலும், ராகு பகவான் 11ம் இடத்திலும், கேது பகவான் 5ம் இடத்திலும் சனி பகவான் 8, 9ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.

  மிதுன ராசிக்கு குரு பகவான் 7,10 அதிபதி. இதுவரை உங்கள் ராசிக்கு 9ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்த குரு பகவான் 10ம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு செல்கிறார். 10ம் இட குரு கேந்திராதிபத்திய தோஷத்தை தருவரா? 10ம் இட குரு பதவியை பறிப்பாரா? என்ற சந்தேகம் அனைவருக்கும் உண்டாகும். உங்களின் 10ம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு 17.1.2023 வரை சனிப் பார்வை இருப்பதால் கேந்திராதிபத்திய தோஷம் செயல்படாது.

  தர்மகர்மாதிபதி யோகம் உங்களை வழிநடத்தப் போகிறது. ஜோதிட சாஸ்திரத்தில் பல விதமான யோகங்கள் கூறப்பட்டுள்ளது. அதில் ஒரு மனிதன் சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று வாழ முதல்தரமான யோகமாக கூறப்பட்டுள்ளது தர்ம கர்மாதிபதி யோகம். அதாவது குரு மற்றும் சனி சம்பந்தம் தர்மகர்மாதிபதி யோகமாகும். அதாவது உங்களின் 9ம் அதிபதி சனிக்கும் 10ம் அதிபதி குருவிற்கும் கோட்சார ரீதியான சம்பந்தம் ஏற்படுவதால் முன்னோர்களின் பூர்வ புண்ணியம் உங்களைக் காப்பாற்றும் காலம். 10ல்குரு வரும் போது பதவி பறி போகும் என்பது ஜோதிட விதி. அது உண்மை தான். ஆனால் 10 அதிபதி குருவிற்கு சனி பார்வை இருப்பதால் இந்த குருப்பெயர்ச்சி மிதுன ராசியினருக்கு பெரும் வாழ்வியல் மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. 10ல் ஒரு பாவியாவது இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் 10ம் இடத்திற்குச் சனி, குரு சம்பந்தம் இருப்பதால் பதவி பறிபோகாது.

  தொழில் ஸ்தானத்தைப் பார்க்கும் சனி தொழில் ஞானத்தை உங்களுக்கு வழங்குவார், வியாபாரத்தை எப்படி நடத்துவது, எப்படி. தக்க வைத்து கொள்ள வேண்டும். கிடைத்த பதவியை எப்படி பொக்கிஷம் போல் காக்க வேண்டும் என்பதை அனுபவ ரீதியாக புரிய வைப்பார். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் வாங்கிய கடன் தொகையையும் வட்டியுடன் திருப்பி செலுத்து காலம். கடன்காரன் எவனாது போன் பண்ணி திட்டுவானோ என்று போனை எடுக்க பயந்தவர்கள் எல்லாம் கெத்தாக போனை எடுத்து பேசுவீர்கள். காசோலை தொடர்பான வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும். கடன் சுமையை குறைக்க அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள். இந்த காலகட்டத்தி இழந்த வேலை மீண்டும் கிடைக்கும்.

  5ம் பார்வை பலன்கள்:குருவின் 5ம் பார்வை 2ம்மிடமானதன ஸ்தானத்தில் பதிகிறது. இதனால் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம் வலிமை பெறுகிறது. தனவரவு மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும். பொருளாதார நிலையில் இதுவரை கண்டிராத அளவிற்கு மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். உங்களின் தொழில், குடும்ப சொத்து, வராகடன் வசூல் என பல்வேறு வழிகளில் பணம் வந்து குவியும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த கருத்து வேறுபாடு மறையும். பொருளாதார நிலை சாதகமாக உள்ளதால் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை கட்டுப்படுத்த முடியும். உழைப்பிற்கு ஏற்ற வருமானம் நிச்சயம் உண்டு.

  அதனால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்திலிருந்த பல விதமான குறைபாடுகள் சீரடையும். தங்களின் பேச்சாற்றலால் உங்களின் காரியங்களை சாதிக்க முடியும்.

  7ம் பார்வை பலன்கள்: குருவின் 7ம் பார்வை ராசிக்கு 4ம் இடமான சுக ஸ்தானத்திற்கு உள்ளது. தாய் வழி உறவினர்களிடம் சொத்து, கொடுக்கல் வாங்கல் தொடர்பான தொடர்பான சங்கடங்கள் மறையும். வீடு, வாகன யோகம் ஏற்படுவதில் சற்று கால தாமதம் ஏற்பட்டாலும் முயற்சிகள் வெற்றி தரும். கடன் பெற்றாவது சொந்த வீடு வாகன யோகத்தை அடைவீர்கள். முறையான ஆவணங்கள் உள்ள சட்டரீதியான சொத்து, வாஸ்து குற்றம் இல்லாத மனை உங்களுக்கு கிடைக்கும். நல்ல பொருளாதார விருத்தியை, மன நிம்மதியைக் தரக்கூடிய பூமியின் அதிர்வலை சிறப்பாக உள்ள வீடு, மனை அமையும். ஏற்கனவே சொந்த வீட்டில்குடியிருப்பவர்களுக்கு வீட்டை புதுப்பிப்பார்கள். அடமானத்திலிருக்கும் நகைகள், சொத்துக்கள் மீண்டு வரும். வீடு, வாகனம், மனை தொடர்பான சுபவிரையம் ஏற்படும் காலம்.

  9ம் பார்வை பலன்கள்: குருவின் 9ம் பார்வை 6ம் இடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்திற்கு உள்ளதால் எதிரிகளை வெல்லக் கூடிய ஆற்றல் உண்டாகும்.

  கண் திருஷ்டி தோஷம், செய்வினைக் கோளாறு அகலும். உத்தியோகத்தில் மாற்றம் உண்டாகும். சக பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். புதிய வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு விரும்பிய உத்தியோகம் கிடைக்கும்.என்ன நோய் என்றே தெரியாமல் குழப்பத்தில் இருந்தவர்களுக்கு நோயின் தன்மை புரியும். அறுவை சிகிச்சை செய்யும் நிலையில் இருந்த நோய் கூட அறுவை சிகிச்சையின்றி முற்றிலும் குணமடையும். மிதுன ராசியை சேர்ந்த மருத்துவர்களின் புகழ் கொடி கட்டி பறக்கும். அவர்கள் தொட்டாலே நோய் குணமாகும். கைராசி மருத்துவர் என்ற பெயர் கிடைக்கும். பலர் 6ம்மிடம் என்றால் பொருள் கடன் என்று நினைக்கிறார்கள். பிறவிக்கடன், பொருள் கடன் சேர்ந்தது தான் 6ம் பாவகம். குருவின் 9ம் பார்வைக்கு பாக்கிய பலன்களை அதிகரிக்கும்சக்தி உள்ளது. குருவின் 9ம் பார்வை 6ம் இடத்திற்கு இந்த கால கட்டத்தில் முன்னோர்களுக்கு முறையான பித்ருக்கள் பூஜை செய்து வழிபட பிறவிக்கடன் மற்றும் பொருள் கடன் தீரும்.

  குருவின் வக்ர பலன்: 29.7.2022 முதல் 23.11.2022 வரை

  குருபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வக்ர கதியில் சஞ்சரிக்கும் காலம் குல தெய்வ வழிபாட்டில் அதிக ஆர்வம் ஏற்படும். குல தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும். ஒரு சில குடும்பங்களில் குல தெய்வ கோவிலில் யாருக்கு முதல் மரியாதை என்ற கருத்து வேறுபாடு ஏற்படும். ஒரு சிலருக்கு பூர்வீகத்தை விட்டு இடம் பெயற நேரும். பூர்வீகம் தொடர்பான அனைத்து செயல்களிலும் தடை தாமத்தை தருவார். மன சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கிறோம். தீர்க்கமான முடிவு செய்யும் திறன் குறையும். மன உளைச்சல் காரணமாக யாரைப் பார்த்தாலும் கோபம், டென்சன் மிகுதியாகும்.

  பூர்வீகம் தொடர்பான பிரச்சனைகளும் தலை தூக்கும். முன்னோர் வழி சொத்துக்களை முறைப்படுத்துவதில் கருத்து வேறுபாடு மிகும். பூர்வீகச் சொத்தில் உங்களுக்கு பங்கு குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

  புதிய முதலீடு செய்ய ஏற்ற காலம் அல்ல. மிகப் பெரிய தொழிலில் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்தபலன் பொருந்தும். முதலீட்டை காப்பதில் கவனம் தேவை. 5ம் இடத்திற்குசனி பார்வை இருப்பதால்குழந்தை பாக்கியம் ஏற்பட கால தாமதம் ஏற்படும் என்பதால் செயற்கை கருத்தரிப்பு மையத்தை நாடுபவர்கள் சுயஜாதகத்தில் உங்களின் நேரம், காலம் அறிந்து செயல்படுதல் நலம். ஒரு சிலருக்கு முன்னோர்களின் பரம்பரை வியாதி வந்து மன சஞ்சலத்தை அதிகரிக்க செய்யும் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.

  பெண்கள்: சுய தொழில் செய்யும் பெண்களுக்கு செல்வமும் புகழும் பெருகிவரும் யோகமான காலம்.பிள்ளைகளால் கிடைக்கும் பெருமையும் கணவரின் அன்பான ஆதவும் உங்களை மகிழ்ச்சிக்கடலில் மூழ்கடிக்கும். குடும்பத்தில் சுப காரியங்களும் தொடரும். விருந்துகளும் மனமகழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.இன்ப சுற்றுலா செல்வது வீட்டை அழகுபடுத்துவது போன்ற மன மகிழும் நிகழ்வுகளால் மனதும் உடலும் புத்துணர்வு பெறும்.

  பரிகாரம்:வீட்டில் ஆஞ்சநேயர் படத்திற்கு துளசி சாற்றி வழிபடவும். புதன்கிழமை காலை 9&-10 மணி வரையான குரு ஓரையில் பிரம்மாவின் முன் உங்கள் ஜாதகத்தை வைத்து அர்ச்சனை செய்து வழிபடவும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×