என் மலர்

  மகரம் - ஆண்டு பலன் - 2022

  மகரம்

  ஆங்கில ஆண்டு பலன் - 2022

  சனிபகவானின் ஆசி பெற்ற மகர ராசியினருக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வருட கிரகங்களின் சஞ்சாரம் சுமாராகவே உள்ளது. உங்களை சர்வ சாதாரணமாக எண் ணியவர்கள் உணரும்படி தடைகளைத் தாண்டி வெற்றி நடை போடுவீர்கள். மதிப்புமிக்கவர்களின் நட்பும் அவர்களால் ஆதாயமும் உண்டாக்கும். குறுக்குவழி வருமானத் திற்காக சிலர் உங்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லலாம். தகுதி இல்லாவர்களை நம்பி ஏமாறாமல் எது நல்ல வழி எனசிந்தித்து செயல்படுவது நல்லது. பண வரவில் ஏற்ற இறக்கம் நீடித்தாலும் தேவைகள் பூர்த்தியாகும் என்பதால் வருத்தம் கொள்ளத் தேவையில்லை. ஆடம்பரச் செலவை குறைத்து கடன் வாங்குவதை தவிர்த்தால் இந்த புத்தாண்டின் அனைத்து நாட்களும் இன்பமாகவே இருக்கும்.

  குரு சஞ்சார பலன்: இந்த புத்தாண்டில் ஏப்ரல் 13, 2022 வரை வருட குருபகவான் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தனவரவு தாரளமாக இருக்கும். வருமானத்தை அதிகரிக்க புதிய பாதை தென்படும். கொடுக்கல், வாங்கலில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். ஆனால் குரு விரையாதிபதியாகி தனஸ்தானத்தில் நிற்பது வரவிற்கு மீறிய செலவை உண்டாக்கும். விரையத்தை வீடு, வாகனம் வாங்குவது, பிள்ளைகளின் திருமணச் செலவு, நகை வாங்குவது, எதிர்கால சேமிப்பு திட்டங்களில் சேமிப்பது, இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பது என சுப விரயமாக மாற்றியமைப்பது புத்திசாலித்தனம்.

  குடும்ப உறவுகளிடம் இருந்து வந்த பகை மறையும். இளவயது மகர ராசியினருக்கு திருமணம், குழந்தை பேறு உண்டாகும். மத்திம வயதினருக்கு மகன், மருமகள் பேரன், பேத்தி கிடைக்கும். வயது முதிர்ந்தவர்கள் தொழில் உத்தியோகத்தில் இருந்து விடுபட்டு ஓய்வு பெறுவார்கள்.மருத்துவ செலவு குறையும். எதிரிகள் விலகுவார்கள்.

  ஏப்ரல் 13-க்கு பிறகு 3-ம் இடமான சகாய ஸ்தானத்தில் விரையாதிபதியாக ஆட்சி பலம் பெறுபவதும் சிறப்பு அல்ல. சகோதர, சகோதரிகளுக்காக சூழ்நிலை கைதியாக விட்டுக் கொடுத்து வாழும் சூழ் நிலை உண்டாகும். உடன் பிறந்தவர்களின் திருமணம் அல்லது அவர்களின் குடும்பத்தை பராமரிப்பது, அவரின் கடனை ஏற்பது அல்லது அவருக்கு கடன் கொடுப்பது என விரயங்கள் மிகுந்து கொண்டே இருக்கும்.

  இந்த காலகட்டத்தில் தடைபட்ட நீண்ட நாள் முயற்சிகள் பேச்சுவார்த்தையில் சுமூகமாகலாம். கருத்து வேறுபாட்டால் பிரிக்காமல் கிடந்த முன்னோர்களின் பூர்வீகச் செத்துக்கள் பிரிக்கப்படலாம். வெகு சிலர் கோப மிகுதியில் முன்னோர்களின் பூர்வீகச் சொத்தை அங்காளி, பங்காளிகளுக்குத் தாரை வார்க்கலாம். ராசியில் சனி இருப்பதால் உங்களின் சித்தப்பா நல்லவராக நடித்து உங்களை ஏமாற்றுவார் என்பதால் கவனம் தேவை. சிலர் வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கப் பெற்று உத்தியோக நிமித்தமாக இடம் பெயரலாம். சிலர் குறுகிய கால ஒப்பந்த அடிப்படை தொழில் அல்லது வேலைக்காக வெளிநாடு செல்லலாம்.

  சனியின் சஞ்சார பலன்கள்: ராசிநாதன், தனாதிபதி சனி ராசியில் ஆட்சி பலம் பெறுவது சிறப்பு. ஆனால் சனி, சந்திரன் சேர்க்கை ராசியில் இருப்பது காரியத் தடையையும் மன சஞ்சலத்தையும் மிகைப்படுத்தும். நிம்மதியான தூக்கம் இருக்காது. கோப உணர்வு மிகுதியாகும். எல்லாரிடமும் சகஜமாக மனம் ஒன்றி பழக முடியாது. எதையும் முறையாக திட்டமிட்டு செய்ய முடியாது. நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாகவே இருக்கும். ஜென்மச் சனி என்பதால் விரக்தி அதிகமாகும். இந்த காலகட்டத்தில் யாருக்கும் பணம் கடன் கொடுத்தாலோ அல்லது பண உதவி செய்தாலோ திரும்ப கிடைக்காது.

  26.2.2022 முதல் 6. 4. 2022 வரை 4, 11-ம் அதிபதியான செவ்வாய் ராசி அதிபதி சனியுடன் ராசியில் இணைகிறார்கள். மகரத்திற்கு செவ்வாய் நான்காம் அதிபதி என்பதால் பலருக்கு சொந்த வீடு, வாகனம் வாங்கும் பாக்கியம் உண்டாகும். வலது பக்கத்து வீட்டுக்காரருடன் நிலவிய எல்லைத் தகராறு சுமூகமாகும். தடைபட்ட வீடுகட்டும் பணி துரிதமாகும். ஜனன கால ஜாதகத்தில் தசா - புத்தி சாதகமாக இருந்தால் பல மகராசியினருக்கு புதிய பல திருப்புமுனைகள் உண்டாகும். தாயின் அன்பும் ஆசீர்வாதமும் கிடைக்கும். தாயின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

  தாய்வழிச் சொத்திற் காக தாய் மாமாவுடன் ஏற்பட்ட வழக் கின் தீர்ப்பு சாதகமாகும். வாழ்வில் செட்டில் ஆகுவதற்கு தேவையான நல்ல வழிகள் தென்படும். பலருக்கு திருமணத் தடை அகலும். சிலர் பெற்றோரின் அனுமதியின்றி திருமணம் செய்வார்கள். சிலருக்கு இரண்டாம் திருமணம் நடக்கும். வழக்குகளில் வெற்றி உண்டாகும். மூத்த சகோதரத்தால் ஆதாயம் உண்டாகும். பல வழிகளில் பணம் வந்து பையை நிரப்பும். டல்லான வியாபாரம் துளிர் விடும். வெளிநாட்டில் இருப்பவர்கள் தாய் நாட்டுக் வந்து செட்டிலாக முயற்சிக்கலாம். சிலருக்கு தவறான பெண் நட்பால் அவமானம் உண்டாகும். ஆரோக்கிய குறைபாடு அதிகரித்து அதிக வைத்திய செலவு செய்ய நேரும். சிலர் மூட்டில் அறுவை சிகிச்சை செய்யலாம்.

  ராகு/கேது சஞ்சார பலன்: ஏப்ரல் 12, 2022 வரை 5ல் ராகுவும் 11-ல் கேதுவும் இருப்பதால் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய பய உணர்வு இருந்து கொண்டே இருக்கும். சிலர் குறுகிய காலம் பூர்வீகம் விட்டு வெளியூர் அல்லது வெளிநாடு சென்று தங்கலாம். அதிர்ஷ்டத்தின் மேல் நம்பிக்கை அதிகரிக்கும். புகழ், அந்தஸ்து, கவுரவம் போன்ற லௌகீக ஆசைக்கு மனம் ஏங்கும். இளவயதினருக்கு எதிர்பாலினரிடம் மிகுதியான ஈடுபாடு உண்டாகும். சில இளவயது மகர ராசிப் பிள்ளைகள்

  தவறான நட்பு வலையில் மாட்டி வாழ்க்கையை கேள்விக் குறியாக்குவார்கள். பால்ய வயது மகர ராசியினர் எது சரி? எது தவறு என்று பகுத்தாய்ந்து செயல்பட வேண்டும். மிகக் குறிப்பாக பெற்றோர்களின் அறிவுரையை மதிக்க வேண்டும். பங்குச் சந்தையில் நாட்டம் மிகுதியாகும். பலருக்கு குறுகிய காலத்தில் பங்குச் சந்தையில் எதிர்பாராத மிகுதியான பொருள் வரவு உண்டாகும்.

  கோட்சார ராகு ஏப்ரல் 12-ல் 4-ம் இடத்திற்கும் கேது 10-ம் இடத்திற்கும் பெயர்ச்சி யாகிறார்கள். கோட்சாரத்தில் 10-ல் கேது வரும் போது தொழில் ரீதியான இழப்புகள் மிகுதியாகும். மேலும் இது ஜென்மச் சனியின் காலம் என்பதால் பண மோசடி மிகுதியாக இருக்கும். பண வரவும் பல வழிகளில் பன் மடங்காக அதிகரிக்கும். இழப்பும் மிகுதியாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனமாக செயல்பட வேண்டும்.சாட்சி கையெழுத்து, ஜாமீன் கையெழுத்து , கேரண்டி கையெழுத்து போடுவது குற்றவாளி கூண்டில் நிறுத்தும். சிலர் இது போன்ற பிரச்சனைகளில் இருந்து மானம் காக்க வீடு, வாகனம், நிலபுலன் ,நகை அனைத்தையும் இழந்து ஜாமீன் தொகையை கட்ட நேரும் என்பதால் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும்.

  அரசின் உதவித் தொகை வருவதில் தடை, தாமதம் ஏற்படும். முன்னோர்கள் கடைபிடித்து வந்த கொள்கைகளிலிருந்து மாறுபட்டு செயல்பட நேரும். இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் போது உரிய ஆவணங்களை வைத்து இருக்க வேண்டும். அரசுக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு அரசுக்கு அபராதம் கட்டும் சூழல் ஏற்படும்.

  திருமணம்: மகர ராசியினருக்கு குரு விரயாதிபதி. பன்னிரன்டாம் அதிபதி குரு ராசியில் அமரும் போது திருமணம் நடக்கும் வாய்ப்பு குறைவு. 2021 குருவின் சாதகமற்ற நிலையுடன் ஜென்மச் சனியின் காலம் என்பதால் திருமண முயற்சியில் காலம், பணம் என பல விரயங்கள் நடந்து இருக்கும். சனிபகவானின் கடும் பகைவரான ராகு தசை நடப்பவர்களுக்கு ஜென்மச் சனி முடியும் வரை திருமண வாய்ப்பு குறைவு. ஜனன கால ஜாதகத்தில் ராகு நின்ற இடத்தைப் பொறுத்து பலன்கள் மாறுபடலாம். மேலும் கோட்சார குரு ஏப்ரல் 2022-ல் மீன ராசிக்கு சென்று களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தைப் பார்ப்பதால் திருமண முயற்சி கைகூடும் வாய்ப்பு உண்டாகும்.

  பெண்கள்: குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும். உபரி வருமானத்தை அரசுடைமை வங்கிகளில் சேமிக்க வேண்டும். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு தனியார் நிதி நிறுவனங்களில் சேமிக்க கூடாது. பெண் நண்பிகளிடம் விலை உயர்ந்த நகைகளை இரவல் கொடுப்பது வாங்குவதை தவிர்க்கவும். நம்பிக்கை குறைவான இடங்களில் சேமிக்கும் பணமும், அடுத்தவர்களிடம் கொடுக்கும் தங்க நகையும் வீடு திரும்பாது.

  விவசாயிகள்: விவசாயிகளுக்கு போதிய நீராதாரம் கிடைக்கும். விளைச்சல் சீராக இருக்கும். விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்கும். அரசின் உதவிகள், நலத்திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும். ஏப்ரல் 2022-க்கு மேல் கிணறு தோண்டுவதை தவிர்க்கவும்.

  உத்தியோகஸ்தர்கள்: கண் துடைப்பிற்கான பதவி உயர் வே தவிர பிரயோஜனம் எதுவும் இருக்காது. வேலைப் பளு அதிகமாக இருக்கும்.இரண்டு நபர்களுக்கான வேலை செய்து ஒரு நபரின் சம்பளத்தை பெற நேரும்.உத்தியோகஸ்தர்கள் கம்பெனி சார்பாக வெளிநாட்டில் சென்று பணிபுரிகின்ற வாய்ப்பு இருக்கும்.

  முதலீட்டாளர்கள்/வியாபாரிகள்: தொழில் வியாபாரத்தில் போட்டிகள் நிலவினாலும் உங்களின் தனித்திறமையால் சமாளிப்பீர்கள். சனி பகவான் 10-ம் பார்வையால் 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் தொழிலில் முன்னேற்றம் இருக்கும். ஏப்ரலில் கேது பத்தாமிடம் சென்றவுடன் சிறிய லாபத்திற்கு கடுமையாக உழைக்க நேரும். தொழிலில் நிலையற்ற தன்மை இருக்கும். கூட்டுத் தொழிலில் பிரிவினை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

  அரசியல்வாதிகள்: அரசியலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு மேலிடம் மற்றும் தொண்டர்கள் மத்தியில் நல்லிணக்கம் உண்டாகும். பகைமை மறையும். மிகப் பெரிய அரசியல் தலைவர்களின் நட்பு நன்மையை தரும். மிகப் பெரிய கட்சியில் இணையும் வாய்ப்பு கிட்டலாம்.பெரிய பதவிகளும் உங்களுக்கு கிடைக்க கூடிய சாத்தியக்கூறும் உள்ளது.

  மாணவர்கள்: கோட்சார ராகு 4,5 ம் இடங்களில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் சில குழந்தைகளுக்கு கல்வியில் நாட்டக் குறைவு, மெத்தனப் போக்கும் நிலவும். சோம்பலும் மறதியும் மிகுதியாகும். பருவ வயது குழந்தைகள் பெற்றவர்களைப் பிரிந்து ஹாஸ்டலில் தங்கி படிக்கலாம்.

  உத்திராடம் 2 ,3,4: தொழில் உத்தியோகத்தில் நிலவும் சாதகமற்ற சூழ்நிலையால் திடீர் பக்தி உருவாகும். தொழில் நிலைக்குமா? வேலை பறிபோகுமா? கடன் தீருமா? என்ற பயத்தில் நிம்மதியான தூக்கம் இருக்காது. சனிக்கிழமை சிவனுக்கு பால் அபிசேகம் செய்து வழிபட பயம் நீங்கி சோதனைகள் சாதனைகளாகும்.

  திருவோணம்: உங்களுடைய மூத்த சகோதரர் உங்களுக்கு பக்க பலமாக இருந்து உதவுவார். இதுவரை இருந்த வந்த சகோதர/சகோதரி பிணக்குகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். வெள்ளிக்கிழமை குல தெய்வக் கோவிலுக்கு சென்று சர்க்கரைப் பொங்கல் படையலிட முன்னேற்றம் உண்டாகும்.

  அவிட்டம் 1 ,2: சனியின் 3ம்பார்வை 3ம் இடத்திற்கு இருப்பதால் நீங்கள் எவ்வளவு உதவி செய்தாலும் உடன் பிறந்தவர்களுக்கு மன நிறைவு இருக்காது. நல்லவர்களாக இருந்த சகோதர, சகோதரிகளின் குணத்தில் கூட மாற்றம் உண்டாகும். செவ்வாய் கிழமை அரளிப்பூவினால் அர்ச்சனை செய்து முருகனை வழிபடுவதால் இன்னல்கள் நீங்கும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×