search icon
என் மலர்tooltip icon

  மகரம் - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்

  மகரம்

  ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்8.10.2023 முதல் 25.4.2025 வரை

  மகர ராசி நேயர்களே!

  இதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான், அக்டோபர் 8-ந் தேதி முதல் 3-ம் இடமான வெற்றிகள் ஸ்தானத்தில் சஞ்சரிக்கப்போகிறார். அதே சமயம் கேது பகவான் உங்கள் ராசிக்கு 9-ம் இடமான பிதுர்ரார்ஜித ஸ்தானத்திற்கு வருகிறார். சுமார் ஒன்றரை ஆண்டு காலம் ராகுவும், கேதுவும் அதே இடத்தில் சஞ்சரித்து அங்குள்ள நட்சத்திரப் பாதசாரங்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குவார்கள்.

  இதுவரை அர்த்தாஷ்டம ராகுவாக சஞ்சரித்து வந்த ராகு, மூன்றாவது இடத்திற்கு வரும்போது முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். வீரத்தோடும், விவேகத்தோடும் செயல்படுவீர்கள். வெற்றிக்குரிய வாய்ப்புகள் வந்துசேரும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பங்காளிப் பகை மாறும். பொருளாதார நிலை திருப்தியளிக்கும் என்றாலும், செலவுகள் வரிசை கட்டி நிற்கும்.

  9-ல் சஞ்சரிக்கும் கேதுவால் பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகும். தந்தை வழி ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பற்றிய நல்ல தகவல் வரும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். வேற்று மனிதர்களின் ஒத்துழைப்பால், தொழிலில் வெற்றி காண்பீர்கள். குலதெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடும் குடும்ப முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

  குரு மற்றும் சனி வக்ர காலம்

  8.10.2023 முதல் 20.12.2023 வரை மேஷ ராசியிலும், 25.9.2024 முதல் 22.1.2025 வரை ரிஷப ராசியிலும் குரு வக்ரம் பெறுகிறார். அவர் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. உடன்பிறப்புகளின் வழியில் பிரச்சினைகள் உருவாகும். உயர்மட்ட அதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மறுப்பர். திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது. தடைகளும், தாமதங்களும் வந்துசேரும்.

  8.10.2023 முதல் 24.10.2023 வரை மகர ராசியிலும், 10.7.2024 முதல் 5.11.2024 வரை கும்ப ராசியிலும் சனி வக்ரம் பெறுகிறார். அவரது வக்ர காலத்தில் கூடுதலான விழிப்புணர்ச்சி தேவை. ஆரோக்கியத் தொல்லையால், மருத்துவச் செலவுகள் கூடும். உறவினர் பகை உருவாகும். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்ய இயலாது.

  சனிப்பெயர்ச்சி காலம்

  20.12.2023 அன்று கும்ப ராசிக்கு சனி பகவான் செல்கிறார். இக்காலத்தில் ஏழரைச் சனியில் குடும்பச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகிறது. இதன் விளைவாக குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடைபெற வழிபிறக்கும். கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். வீடு கட்டுவது அல்லது கட்டிய வீட்டை விலைக்கு வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள்.

  குருப்பெயர்ச்சி காலம்

  1.5.2024 அன்று ரிஷப ராசிக்கு குரு செல்கிறார். அப்பொழுது அவர் உங்கள் ராசியையும், 9, 11 ஆகிய இடங்களையும் பார்க்கப் போகிறார். குருப்பெயர்ச்சிக்குப் பின்னால் நல்ல காரியங்கள் பலவும் நடைபெறும். பொருளாதார நிலை உயரும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சி வெற்றியாகும். ஆற்றல் மிக்கவர்கள் உங்கள் பின்னணியில் இருந்து காரியங்களை முடித்துக் கொடுப்பர்.

  பெண்களுக்கான பலன்கள்

  இந்த ராகு-கேது பெயர்ச்சி காலத்தில் உங்களுக்கு வாழ்க்கைத் தேவை பூர்த்தியாகும். வருமானம் போதுமானதாக இருக்கும். கணவன் - மனைவிக்குள் பாசமும், நேசமும் அதிகரிக்கும். உங்கள் பெயரிலேயே இடம் வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். பணிபுரியும் பெண்களுக்கு இடமாற்றமும், இலாகா மாற்றமும் வரலாம்.

  வளர்ச்சி தரும் வழிபாடு

  மூன்றாம் இடத்து ராகுவால் முன்னேற்றம் கூடவும், ஒன்பதாம் இடத்து கேதுவால் ஒளிமயமான எதிர்காலம் பெறவும், ராகு-கேதுக்களுக்குரிய சர்ப்ப பிரீதியை யோக பலம் பெற்ற நாளில் செய்துகொள்ளுங்கள்.

  மகரம்

  ராகுகேது பெயர்ச்சி பலன்கள் - 2023

  12.4.2022 முதல் 30.10.2023 வரை

  நான்கில் ராகு/ பத்தில் கேது

  காரியவாதியான மகர ராசியினரே ராசிக்கு 4-ல் ராகுவும், 10-ல் கேதுவும் பயணிக்கிறார்கள். குருபகவான் 3, 4--ம் இடத்திலும், சனி பகவான் ராசி மற்றும் 2-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார்கள்.

  நான்காமிட ராகுவின் பொது பலன்கள்:நான்காமிடம் என்பது சுக ஸ்தானம். அசையும், அசை யாச் சொத்துக்கள் பற்றிக் கூறுமிடம். ராசி அதிபதி சனிக்கு ராகு/கேதுக்கள் பகை கிரகங்கள். பொதுவாக ராகு பேராசையை மிகைப்படுத்தும் கிரகம் என்பதால் லௌகீக வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துவிதமான சுக போக நாட்டம் சற்று மிகுதியாகும்.

  கலை நிகழ்ச்சிகள், சினிமா, நாடகம், அழகு, ஆடம்பரம் போகம் என மனம் லௌகீக இன்பங்களை சுற்றிவரும். தாயின் ஆரோக்கியக் குறை பாட்டில் இருந்த கவலைகள் அகலும். தாய் வழி உறவுகளால் சில ஆதாயங்கள், செல்வம் கிடைக்கும். தாய் வழி உறவி னர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தாய் வழிச் சொத்தில் மூத்த சகோதர, சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து தடைபட்ட பாகப்பிரிவினை சொத்து ,பணம் வந்து சேரும்.

  பூமி தொடர்பான ரியல் எஸ்டேட் தொழிலில் இருப் பவர்களுக்கு மிக ஏற்றமான நேரம். சொந்த வீடு இல்லா தவர்களுக்கு வீடு அமையும். சிலர் பழைய வீட்டை சீர்திருத்தியமைக்கலாம்.வெகு சிலருக்கு அடமானத்திலிருக்கும் சொத்துக்கள் மீண்டு வரும். விற்க முடியாமல் கிடந்த சொத்துக்கள் விற்று பணமாகிவிடும் அல்லது வேறு புதிய சொத்தாகி விடும். சிலருக்கு சொத்து வாங்க தாயின்ஆதரவு கிடைக்கும். சிலர் கடன்பட்டு வயல், தோட்டம் வீடு, வாகனம் வாங்குவார்கள்.

  ராகு மேஷ ராசியில் உள்ள நட்சத்திரப் பாதங்களான கிருத்திகை, பரணி, அசுவினி நட்சத்திரங்களில் மூலம் ராசியை கடக்கிறார்.

  12.4.2022 முதல்14.6.2022 வரை ராகுவின் கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள்: கிருத்திகை சூரியனின் நட்சத்திரம். சூரியன் மகரத்திற்கு அஷ்டமாதிபதி. ராசி அதிபதி சனிக்கு சூரியன் பகை. சனி, சூரியனுக்கு ராகு/கேது பகை. ஜனன கால தசாபுத்தி சாதகமாக இருந்தாலும் ஏழரைச் சனியின் காலம் என்பதால் சுப பலன் ஏற்படும் வாய்ப்பு குறைவு. வெகு சிலருக்கு எட்டாம் பாவக பலன்களான அவமானம், கடனால் கவலை, கணவன் மனைவி பிரிவினை அல்லது வழக்கு, பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும். உயிருக்கு ஆபத்தை தரும் நோய்களுக்கு சிகிச்சை செய்பவர்களுக்கு நோயிலிருந்து முழு நிவாரணம் கிடைக்கும்.

  சிறை தண்டனையில் இருப்பவர்களுக்கு நன் நடத்தையால் தண்டனை காலம் குன்றக்கப்படும். ஆயுள் பலம் உண்டு. திடீர் அதிர்ஷ்டம் உயில் சொத்து ,எதிர்பாராத தன வரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த கால கட்டத்தில் மகர ராசி பெண் பிள்ளைகளுக்கு திருமண முகூர்த்தம் வைப்பதை தவிர்க்கவும்.

  15.6.2022 முதல் 20.2.2023 வரை ராகுவின் பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள்:பரணி சுக்ரனின் நட்சத்திரம். சுக்ரன் மகரத்திற்கு 5,10ம் அதிபதி. அதிர்ஷ்டம் தொழில், பதவி ரூபத்தில் வந்து கதவைத் தட்டும் புதிய தொழில் சந்தர்ப்பம் தேடி வரும். மிகப் பெரிய புகழ் கிடைக்கும். பணம் புரளுமா? வங்கி கணக்கில் உபரி பணம் சேமிப்பாக இருக்குமா? என்பது சந்தேகம்.

  கமிஷன் அடிப்படையிலான தொழில், கன்சல்டிங் நிறுவனங்களுக்கு தொழில் வளர்ச்சி அமோகமாக இருக்கும். பணம் சம்பாதிக்காவிட்டால் கூட பரவாயில்லை. பணத்தை இழக்க கூடாது. சில ஆண்கள் மற்றும் பெண்கள் இது போன்ற காலகட்டத்தில் மன ஆறுதலுக்காக குடும்ப விஷயத்தை பிறருடன் பகிரக் கூடாது. பூர்வீக சொத்து தொடர்பான செயல்களை ஒத்தி வைக்கவும். சிலர் தொழில் உத்தியோக நிமித்தமாக பூர்வீகத்தை விட்டு வெளியேறலாம். புத்திர பிராப்தம் உண்டாகும்.

  21.2.2023 முதல் 30.10.2023 வரை ராகுவின் அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள்:கோட்சாரத்தில் ராசிக்கு 10ல் சஞ்சரிக்கும் கேதுவின் நட்சத்திரத்தில் ராகு சஞ்சரிக்கும் காலம். எந்த செயலாக இருந்தாலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து நிதானமாக செயல்பட வேண்டும். வேகத்தை விட விவேகம் முக்கியம். இந்த காலகட்டத்தில் சில படிப்பினைகளை ராகு/கேதுக்கள் வழங்குவார்கள். வட்டி தொழில், சீட்டுக் கம்பெனி, ஏலச்சீட்டு, பைனான்ஸ், அடமானக் கடை , பெரிய அளவில் பணம் புரளும் தொழிலில் இருப்பவர்கள் பணப் பரிவர்தனைக்கு முறையான ஆதாரம் வைத்து இருக்க வேண்டும். நெருங்கிய ரத்த பந்த உறவுகளுடன் தேவையற்ற கருத்துப் பரிமாற்றத்தை தவிர்க்கவும்.

  10மிட கேதுவின் பலன்கள்:10ல் ஒரு பாவியாவது இருக்க வேண்டும் என்பது ஜோதிட பழமொழி. சுமாராக இருந்த தொழில் கூட சூப்பர் தொழிலாகும். இழுத்து மூடி விட்டுப் போகும் நிலையில் உள்ள தொழில் கூட முன்னேற்றமடையும். கடன் வாங்கி புதிய தொழில் முதலீடுகள் செய்யலாம் என்ற எண்ணம் தோன்றும். சுய தொழில் செய்கிறவர்களுக்கு தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பு கிட்டும். தொழில் நீதியாக பிரபலங்களின் ஆதரவு, உதவி கிடைக்கும். தொட்டது துலங்கும்.

  வழக்கத்தை விட அதிகமான பணம் சம்பாதிப்பீர்கள். ஆனால் முதலீட்டை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலையால் கடன் அதிகரிக்கும். 10ல் கேது இருப்பதால் இந்த ஒன்றரை வருடமும் கடன் எந்த ரூபத்தில வேண்டுமானாலும் கதவைத் தட்டலாம். 4ல் ராகு இருப்பதால் சிலர் கடன் பட்டு சொத்து வாங்கலாம் அல்லது சுப செலவிற்காக கடன் படலாம். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். பிறருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிர்க்க வேண்டும்.

  பொதுவாக ஜனன கால ஜாதகத்தில் 10ல் கேது இருப்பவர்கள் பல தொழில் வித்தகராக இருப்பார்கள். மிகுதியான தொழில் ஞானம் உண்டு. ஆனால் தொழில் கடனால் வாழ்நாள் அவஸ்தை உண்டு. கேது துலாம் ராசியில் உள்ள விசாகம், சுவாதி, சித்திரை நட்சத்திரங்கள் மூலம் தன் பயணத்தை செலுத்துகிறார்.

  12.4.2022 முதல் 17.10.2022 வரையான கேதுவின் விசாகம் நட்சத்திர சஞ்சார பலன்கள்:விசாகம் குருவின் நட்சத்திரம். குரு மகரத்திற்கு 3,12ம் அதிபதி. சிலர் வெளியூர், வெளிநாடு என வாழ்வாதாரத்திற்கு இடம் பெயரலாம். சில அரசு ஊழியர்கள் பதவி உயர்வு என்ற பெயரில் பிடித்தம் இல்லாத ஊருக்கு சென்று கடமையாற்றும் சூழல் உண்டாகும். ஞாபக சக்தி குறையும்.

  வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகாது என்பதால் வழக்குகளை ஒத்திப் போட வேண்டும். ஏழரைச் சனியின் காலம் என்பதால் பண மோசடி மிகுதியாக இருக்கும். கோட்சார குரு 3, 4ம் இடங்களில் சஞ்சரிப்பதால் பண வரவு பல வழிகளில் பன் மடங்காக அதிகரிக்கும். இழப்பும் மிகுதியாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனமாக செயல்பட வேண்டும்.

  18.10.2022 முதல் 26.6.2023 வரையான கேதுவின் சுவாதி நட்சத்திர சஞ்சார பலன்கள்:கோட்சாரத்தில் ராசிக்கு 4ல் பயணிக்கும் ராகுவின் நட்சத்திரத்தில் கோட்சார கேது சஞ்சரிக்கும் காலம்.சிறு, சிறு உடல் உபாதைகள் தோன்றி மறையும். உடல் உறுப்பில் இடது காது, கணுக்கால், பின் முதுகில் அவ்வப்போது வலி தோன்றலாம். முறையான உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, யோகாவுடன் தகுந்த மருத்துவர்களின் ஆலோசனையும் உங்களை நோயிலிருந்து பாதுகாக்கும். சிலர் சட்டச் சிக்கல் நிறைந்த சொத்தில் பணத்தை முதலீடு செய்யலாம். சிலர் அரசுக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு அரசுக்கு அபராதம் கட்டும் சூழல் ஏற்படலாம். அரசு அதிகாரிகளால் சிறு பிரச்சனை ஏற்படலாம்.

  27.6.2023 முதல் 30.10.2023 வரை கேதுவின் சித்திரை நட்சத்திர சஞ்சார பலன்கள்:சித்திரை செவ்வாயின் நட்சத்திரம். செவ்வாய் மகரத்திற்கு 4,11-ம் அதிபதி. இதுவரை வாடகைக்கு போகாமல் இருந்த அசையும் அசையாச் சொத்துக்கள் வாடகைக்கு போகும். தடைபட்ட வாடகை வருமானம் வந்து சேரும்.விவசாயிகள் பன்படுத்த முடியாத தங்களின் விளை நிலங்களை குத்தகைக்கு விட்டு வருமானம் பெறலாம். கால்நடை மற்றும் உயிரினம் வளர்பவர்களுக்கு ஆதாயம் மிகும்.விவசாயிகள் கிணறு வெட்டலாம். பம்பு செட் போடலாம். அடமானத்தில் இருந்த நகைகள் மீட்கப்படும். புதிய அணிகலன்கள் ,அழகு, ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். சிலர் தீய நண்பர்களின் சேர்க்கையிலிருந்து விடுபடலாம்.

  ராகு/கேது, குருவின் சஞ்சாரம் மற்றும் சற்று சுமாராக இருந்தாலும் ராசி அதிபதி சனியின் ஆதிக்கம் வலுவாக இருப்பதால் உங்களை யாரும் அசைக்க முடியாது என்பதால் நிம்மதியாக இருக்கலாம்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×