என் மலர்
மகரம்
2026 தை மாத ராசிபலன்
மகர ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி தன ஸ்தானத்தில் பலம்பெற்று சஞ்சரிக்கிறார். எனவே பணப்புழக்கம் அதிகரிக்கும். மனக்கலக்கம் தீரும். மேலும் உங்கள் ராசியில் சூரியன், செவ்வாய், புதன், சுக்ரன் ஆகிய கிரகங்களின் சேர்க்கை இருப்பதால் நல்ல காரியங்கள் பலவும் நடைபெறும். விரோதங்கள் விலகும். குடும்பத்தில் உள்ளவர்களின் குறைகளைத் தீர்க்க முன்வருவீர்கள். சொத்துக்களால் ஆதாயமும், நன்மையும் ஏற்படும் நேரம் இது. கொடுக்கல் - வாங்கல் திருப்தி தரும்.
வக்ர குரு
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்திலேயே இருக்கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் வக்ரம் பெற்று சஞ்சரிப்பதால், அக்கறை செலுத்தாத காரியங்களில் கூட ஆதாயம் கிடைக்கும். தக்க தருணத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவுவார்கள். சென்ற மாதத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் இப்பொழுது விலகும். சிறுசிறு தொல்லைகள் உடல்நிலையைத் தாக்கினாலும் மருத்துவ சிகிச்சைகள் மூலம் அவற்றை சரிசெய்துகொள்வீர்கள். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ, வாசல் தேடி வரவு வந்து சேரும். குருவின் பார்வை 2, 10, 12 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே அவற்றிற்குரிய ஆதிபத்யங்கள் மிகச் சிறப்பாக நடைபெறும். 'குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடைபெறவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும் சூழ்நிலை உருவாகும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். வெளிநாடு அல்லது வெளிமாநிலங்களில் பணிபுரிய நினைத்தவர்களுக்கு அது கைகூடும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் அதிக கவனம் செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வில் வெளிவந்து, சுயதொழில் ஏதேனும் செய்யலாமா? என்று சிந்திக்கும் நேரம் இது.
கும்ப - புதன்
உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 29.1.2026 அன்று கும்ப ராசியில் சஞ்சரிக்கப்போகிறார். எனவே உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். உடன்பணிபுரிபவர்களுக்கு கிடைக்காத யோகம் உங்களுக்கு வரப்போகிறது. இலாகா மாற்றங்களோ, இடமாற்றங்களோ முன்னேற்றம் தரும் விதம் அமையும். பெற்றோர் வழியில் இருந்த கருத்து வேறுபாடு மாறும். பிள்ளைகளை நெறிப்படுத்திக் கொண்டு வருவீர்கள். பூர்வீக சொத்துக்களை பங்கு பிரித்துக்கொள்வதில் இருந்த பிரச்சனைகள் அகலும்.
கும்ப - சுக்ரன்
மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரன், 7.2.2026 அன்று கும்ப ராசிக்கு செல்கிறார். இக்காலத்தில் இனிய பலன்கள் வந்துசேரும். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தன ஸ்தானத்திற்கு வரும்பொழுது பொருளாதாரம் உச்ச நிலையை அடையும். புகழ் கூடும். புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு அன்றாட வாழ்க்கையை நன்றாக அமைத்துக்கொள்வீர்கள். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். கூட்டு முயற்சிகளில் இருந்து விலகித் தனித்து இயங்க முற்படுவீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளுடன் ஏற்பட்ட பிரச்சனை அகலும். கலைஞர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு பற்றாக்குறை அகன்று பணவரவு கூடும். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 15, 16, 22, 23, 26, 27, பிப்ரவரி: 5, 6, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.






