என் மலர்
மகரம்
2025 ஆனி மாத ராசிபலன்
முன்னேற்றத்தை குறிக்கோளாக கொண்ட மகர ராசி நேயர்களே!
ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சனி குடும்ப ஸ்தானத்தில் ராகுவோடு சஞ்சரிக்கிறார். அவர் மீது செவ்வாயின் பார்வை விழுகிறது. மேலும் குரு பகவான் 6-ல் சஞ்சரிப்பதால் பகைக்கு மத்தியில் வாழ்க்கை அமையும். எண்ணற்ற பிரச்சினைகள் இல்லம்தேடி வந்துசேரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாத சூழலும், கொடுக்கல் - வாங்கல்களில் தடுமாற்றங்களும் ஏற்படும். மனக் கவலை அதிகரித்து மற்றவர்களின் உதவியை நாடக்கூடிய சூழ்நிலையும் உண்டு. எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. புது முயற்சிகளில் தாமதம் ஏற்படும். கோபத்தின் காரணமாக பல நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும்.
கடக - புதன்
ஆனி 8-ந் தேதி கடக ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் பொருளாதாரம் திருப்தி தரும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். தந்தை வழி உறவில் இருந்த விரிசல்கள் அகலும். தடைகளும், தாமதங்களும் விலகும். பூர்வீகச் சொத்துக்களை பாகப்பிரிவினை செய்து கொள்வதில் மும்முரம் காட்டுவீர்கள். எதிரிகளின் தொல்லை குறையும். பிள்ளைகளின் நீண்டநாளைய எண்ணங்கள் நிறைவேற எடுத்த முயற்சி கைகூடும். வரவைக் காட்டிலும் செலவு கூடுதலாக இருந்தாலும் அதை சமாளிக்கும் விதத்தில் உதிரி வருமானங்கள் வந்துசேரும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளை மேலதிகாரிகள் உங்களிடம் வழங்குவர்.
ரிஷப - சுக்ரன்
ஆனி 15-ந் தேதி ரிஷப ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்ரன் சஞ்சரிக்கும் பொழுது, பூர்வ புண்ணியத்தின் பலனாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய அனைத்தும் கிடைக்கும். பெண் குழந்தைகளின் சுபசடங்குகள் நடைபெறும் நேரமிது. திருமண வயதடைந்த பிள்ளைகளுக்கு இதுவரை வந்த வரன்கள் முடிவடையவில்லையே என்று கவலைப்பட்டவர்கள் இப்பொழுது மகிழ்ச்சியடையும் விதத்தில் நல்ல வரன்கள் வந்து சேரும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் கைகூடி வரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வில் வெளிவந்து, சுயமாக தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். அதற்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர்.
செவ்வாய் - சனி பார்வை
மாதம் முழுவதும் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனியை சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய் பார்க்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், தனாதிபதியாகவும் விளங்குபவர் சனி. அவரை பகை கிரகமான செவ்வாய் பார்க்கும் பொழுது பணத் தட்டுபாடுகள் அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கல்களில் ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. திடீர் மாற்றங்கள் மனக் குழப்பத்தை உருவாக்கும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகி, சங்கிலி தொடர்போல கடன்சுமை கூடும். மருத்துவச் செலவுகள் உண்டு. குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்ள மாட்டார்கள்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு முதலீடுகள் செய்வதில் தடைகள் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் அனுசரிப்பு குறையும். மாணவ - மாணவியர்களுக்கு படிப்பில் அக்கறை தேவை. பெண்களுக்கு வருமானம் குறையும், வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது.
இம்மாதம் பைரவர் வழிபாடு வளர்ச்சியை கூட்டும்.






