என் மலர்tooltip icon

    மகரம்

    குருபெயர்ச்சி பலன்-2024

    மகரம்-பஞ்சம குரு 65%

    கொள்கை பிடிப்பு நிறைந்த மகர ராசியினரே!

    இதுவரை ராசிக்கு நான்காமிடமான சுக ஸ்தானத்தில் நின்ற குரு பகவான் மே 1, ௨௦௨௪ முதல் ராசிக்கு 5ம்மிடமான பஞ்சமஸ்தானம் செல்கிறார். சனி பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ராகு பகவான் முயற்சி ஸ்தானத்திலும், கேது பகவான் பாக்கிய ஸ்தானத்திலும் பயணிக்கிறார்கள்.

    பஞ்சம குருவின் பொதுபலன்கள்

    மகர ராசிக்கு குரு பகவான் 3, 12ம் அதிபதியானார். பூர்வ புண்ணிய ஸ்தானம் செல்வது நல்ல விதமான அதிர்ஷ்டத்தை வழங்கும் அமைப்பாகும். 5ம்மிடம் என்பது அதிர்ஷ்டம், பூர்வீகம், குல தெய்வம், குழந்தைகள், காதல், பூர்வ புண்ணியம், ஆழ் மன சிந்தனை பற்றிக் கூறுமிடம். இந்த இடத்தில் நிற்கும் குருவால் தன்னம்பிக்கை அதிகரிக்கும் தெளிவாக சிந்தித்து செயல்படுவீர்கள். புண்ணிய பலன்கள் நடக்கும். மன வலிமை அதிகரிக்கும்.முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும்.

    பொதுவாக பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நிற்கும் கிரகங்கள் நன்மையை அதிகப்படுத்தும் வல்லமை உண்டு. கோட்சாரத்தில் 5ம்மிடத்திற்கு வரும் கிரகம் குறுகிய காலத்தில் அனைத்து நன்மைகளையும் வழங்கி விடும்.

    நல்ல அறிவாற்றல், புத்திக்கூர்மை. கல்வி மேன்மை உண்டாகும். மத நம்பிக்கையை அதிகரிப்பார் அல்லது இறை வழிபாட்டில் ஆர்வம் கூடும்.சொத்து வாங்கும், விற்கும் முயற்சி கைகூடும். பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும்.குடும்ப சொத்தை அனுபவிக்க ஆண் வாரிசு பிறக்கும்.பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.

    பூர்வீகச் சொத்தில் நிச்சயம் ஒரு முடிவை தந்து விடுவார். பூர்வீகத்தை விட்டு வெளியூர், வெளிநாட்டிற்கு பிழைப்பிற்காக செல்வீர்கள். பங்குச் சந்தையில் உங்களுக்கு என்று தனி இடத்தை தக்க வைத்துக் கொள்வீர்கள்.

    குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள்

    குருவின் 5ம் பார்வை ராசிக்கு 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் பதிகிறது.தந்தை மற்றும் தந்தை வழி உறவுகள் மற்றும் தூரதேச பயணம் பற்றிக் கூறுமிடம். எடுக்கும் முயற்சிகளில் படிப்படியான முன்னேற்றமும் முடிவில் வெற்றியும் உண்டாகும். இரக்கமும் தயாள குணமும், அள்ளிக் கொடுக்கும் வள்ளல் தன்மையும்,தெய்வ நம்பிக்கையும் ஏற்படும்.மனதில் தெம்பு , தைரியம் கூடும். தந்தை ஸ்தானத்தில் இருந்து குடும்பத்தை வழி நடத்துவீர்கள்.

    9ல் கேது நிற்பதால் அந்நிய நாடு மற்றும் வேற்று மொழி பேசுபவர்கள் மத்தியில் வாழ நேரும். வெளிநாட்டு வாய்ப்பை எதிர் நோக்கி இருப்பவர்களுக்கு தூரதேச பயணம் ஏற்படும். ஏற்கனவே வெளிநாட்டில் இருப்பவர்கள் நிறைய பணம் சம்பாதிப்பார்கள்.

    ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நடத்துபவர்களுக்கு பொற்காலம். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் அபரமான தொழில் வளர்ச்சி ஏற்படும். பெற்றவர்களால் பிள்ளைகளுக்கும், பிள்ளைகளால் பெற்றோர்களுக்கும் பெருமை சேரும். திடீர் அதிர்ஷ்டம் உங்களை வழி நடத்தும்.

    குருவின் ஏழாம் பார்வை பலன்கள்

    குருவின் 7ம் பார்வை ராசிக்கு 11ம் மிடமான லாப ஸ்தானத்தில் பதிகிறது. வாழ்க்கை குதூகலமாக இருக்கும். தடைபட்ட பணிகளும் துரிதமாகும். அனைத்து காரியங்களும் தடையில்லாமல் நடக்கும். குடும்பத்தில் ஆனந்தம் பொங்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். நல்லோர் உறவும், நண்பர்கள் ஆதரவும் உறவினர்கள், ஒத்துழைப்பும் அமோகமாக அமையும். செல்வாக்கு சொல்வாக்கு உயரும். சாதாரண நிலையில் இருப்பவர்கள் கூட உயர்நிர்வாக பதவி, உயர்ந்த அந்தஸ்தை அடைவார்கள். படித்த படிப்பு, அனுபவம் என அனைத்து விதத்திலும் மேன்மையான பலன்கள் உண்டு.

    அரசியல்வாதிகளுக்கு பொது இடத்தில் புகழ் கிடைக்கும். எதிரிகள் ஒதுங்குவார்கள். மருமகள், மருமகனால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும். திருமணம், குழந்தை பேறு, வீடு, வாகனம் என சுப பலன்கள் நடக்கும்.சிலர் பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்து வாங்குவார்கள். அதிர்ஷ்ட பொருள், பணம், நகை, உபரி வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சிலர் இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பார்கள். மன வேதனையால் முதியோர் இல்லம் சென்ற சில வயது முதிர்ந்தவர்கள் வீடு திரும்புவார்கள்.

    குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள்

    குருவின் 9ம் பார்வை ராசியில் பதிகிறது. ஒளிமயமான எதிர்காலம் உருவாகும் புதிய முன்னேற்றம் உண்டாகும் ,உடலில் புத்தொளியும், பொலிவும் உண்டாகும். மனதில் சந்தோஷமும் நிம்மதியும் அதிகரிக்கும். முன்கோபங்கள் குறையும். தேவையற்ற பிர்சனைகள், மன வருத்தம் நீங்கும். விடா முயற்சி விஷ்வரூப வெற்றி என்ற கொள்கை பிடிப்புடன் செயல்படுவீர்கள். எண்ணங்களும், லட்சியங்களும் நிறைவேறும்.

    கடுமையாக உழைத்த உழைப்பு இப்பொழுது பணமாக காய்க்கப் போகிறது. பல விதமான நற்பலன்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் இழந்த சந்தோஷம் மீண்டும் துளிர்விடும். தொழில் முன்னேற்றம், வியாபார அபிவிருத்தி, எடுத்த காரியத்தில் வெற்றி போன்ற நன்மைகள் நடக்கும்.தாய், தந்தையரின் விருப்பங்களையும், அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவீர்கள்.

    இந்த கால கட்டத்தில் கல்வி நிறுவனங்கள், தர்ம ஸ்தாபனங்கள், வழிபாட்டு ஸ்தலங்களுக்கு உதவி செய்தால் பாக்கிய பலன்கள் அதிகரிக்கும்.

    குருவின் கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள் (1.5.2024 - 13.6.2024 வரை)

    மகர ராசிக்கு அஷ்டமாதிபதியான சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் வேலையை திறம்பட செய்து பெயரும் புகழும் அடைய அதிக சிரமம் எடுக்க வேண்டும். முக்கிய பதவியில் இருப்பவர்கள் பதவியை தக்க வைக்க கடுமையாக போராட நேரும். அவ்வப்போது கற்பனை பயம் தோன்றி மறையும். ஆயுள், ஆரோக்கியம் தொடர்பான சிந்தனை மிகுதியாகும்.

    மர்ம நோய் தாக்கம் இருந்தால் சரியாகும். ஆரோக்கியம் சீராகும். சிலர் சுப செலவுகளுக்காக சொத்து அடமானத்தின் பெயரில் கடன் பெற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் எண்ணம் உருவாகும். மிகவும் எச்சரிக்கையாக நிதானமாக பயபக்தியுடன் காலத்தை கடத்த வேண்டும்.

    குருவின் ரோகிணி நட்சத்திர சஞ்சார பலன்கள் (14.6.2024 முதல் 20.8.2024 வரை)

    மகர ராசிக்கு சம சப்தம ஸ்தானம் எனப்படும் 7ம் அதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் தனித் திறமை மிளிரும். சிலர் புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம்.நல்ல தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். வியாபார பங்காளிகளிடம் நிலவிய மனக்கசப்பு மறையும்.புதிய தொழில் முயற்சிக்கு தேவையான நிதியுதவி கிடைக்கும்.

    எடுக்கப்பட்ட முயற்சிக்கான முழு பலனும் அங்கீகாரமும், வெற்றியும் உண்டு. பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சீதனம் மகிழ்ச்சியைத் தரும். சிலர் முதல் மனைவி இருக்கும் போதே பணத்திற்காக மறுமணம் செய்வார்கள். திருமணத் தடை நீங்கும்.சமூகத் தொண்டு செய்யும் ஆர்வம் உண்டாகும்.அரசியல், ஆன்மீகம், கலை என அனைத்து துறை திறமைசாலிகளும் பிரபலமடைவார்கள்.

    குருவின் மிருகசீரிஷ நட்சத்திர சஞ்சார பலன்கள்(21.8.2024 முதல் 8.10.2024 வரை, 5.2.2025 முதல் 15. 5. 2025 வரை)

    மகர ராசிக்கு சுக ஸ்தான அதிபதி மற்றும் லாப ஸ்தான அதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் அடமானச் சொத்துக்கள் மீண்டு வரும்.பழைய வாகனத்தை கொடுத்து விட்டு புதிய வாகனம் வாங்கலாம். அரசு வேலைக்கு முயற்சி செய்யும் சிந்தனை தோன்றும். அரசிடமிருந்த வீடு, வீட்டு மனை அல்லது வீடு கட்டத் தேவையான நிதியுதவி கிடைக்கும்.

    சில சமூக ஆர்வளர்களுக்கு அரச கவுரவம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பொதுஜன ஆதரவு அதிகரிக்கும்.பாக்கிய பலன் அதிகரிக்கும். இறையருள் பரிபூரணமாக கிட்டும்.குல தெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள். வாரிசுகளின் இடமாற்றம் நிம்மதி தரும்.

    குருவின் வக்ர காலம் (மகர ராசிக்கு சுக ஸ்தான அதிபதி மற்றும் லாப ஸ்தான அதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 9.10.2024 முதல் 28.11.2024 வரை

    குரு பகவான் வக்ரமடையும் காலத்தில் புதிய வீடு கட்டுவது, பழைய வீட்டை புதுப்பிப்பது போன்ற பணிகள் நடக்கும். சிலருக்கு பணிக்காலம் முடிந்த பிறகும் பதவி நீட்டிப்பு கிடைக்கும். களத்திர ஸ்தான அதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் 29.11.2024 முதல் 4.2.2025 வரை குருபகவான் வக்ர மடையும் காலத்தில் தம்பதிகளின் தேவையற்ற எதிர்பாலின நட்பால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். பருவ வயதினர் இனக் கவர்ச்சியால் காதல் வலையில் சிக்குவார்கள். செயற்கை கருத்தரிப்பை நாடுபவர்களுக்கு சாதகமான பலன் உண்டு.

    பெண்கள்:

    புதிய வாழ்க்கை பாதையை நோக்கி முன்னேறு வீர்கள். பெண்களின் புத்தி சாதுர்யத்தால் குடும்பத்தில் அமைதி நிலவும். ஒவ்வொரு விசயத்திலும் கண்ணும் கருத்துமாக செயல்படுவீர்கள். வசதியும், அந்தஸ்தும் அதிகரிக்கும்.பொன், பொருள் ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். புகுந்த வீட்டாருடன் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறையும். தம்பதிகள் மனம் விட்டு பேசுவதால் நன்மைகள் உண்டாகும். ஆரோக்கியம் அதிகரிக்கும். மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும்.

    பரிகாரம்

    பஞ்சம குருவால் புண்ணிய பலன்கள் அதிகரிக்க விஷ்ணு கோவிலில் சக்கரத்தாழ்வாரை புதன் கிழமை துளசியால் அர்ச்சித்து வழிபட வேண்டும். வீட்டில் துளசி செடி வைத்து தினமும் தண்ணீர் ஊற்றி வழிபட பிறவிப் பயனை அடைய இயலும்.

    ×