என் மலர்
கடகம்
2025 புத்தாண்டு ராசிபலன்
யோசித்து செயல்பட்டால் யோகம் கடக ராசி நேயர்களே!
புத்தாண்டின் தொடக்கத்தில் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் குருவும் வக்ரத்தில் இருக்கிறார். எனவே திட்டமிட்டபடியே காரியங்களை செய்து முடிக்க இயலாது. வருங்காலம் பற்றிய பயம் அதிகரிக்கும். குடும்பத்திலும், தொழிலிலும் குழப்பங்கள் ஏற்படும். விரயங்கள் இருமடங்காகும். எதிரிகளால் தொல்லை உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். ராகு-கேது பெயர்ச்சிக்குப் பிறகு மேலும் கவனத்தோடு செயல்பட வேண்டும்.
புத்தாண்டின் கிரக நிலை
புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் செவ்வாய் வக்ரம் பெற்றும், நீச்சம் பெற்றும் விளங்குகின்றார். சகாய ஸ்தானத்தில் கேதுவும், பாக்கிய ஸ்தானத்தில் ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். எனவே குடும்பத்தில் மனவருத்தம் அதிகரிக்கும். கொடுக்கல் - வாங்கல் ஏமாற்றம் அளிக்கும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிகளில் இடையூறு வரலாம். குரு வக்ரத்தால் உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் உள்ளதால், எதையும் யோசித்துச் செய்வது நல்லது.
வாழ்க்கையில் நிறைய குறுக்கீடுகள் வரலாம். செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும் காரியங்களை போராடி முடிக்க வேண்டிய சூழல் அமையும். அதே நேரம் சொந்த வீட்டில் சனி சஞ்சரிப்பதால் பெரிய பாதிப்பு இருக்காது. உடல்நலனில் மிகமிக கவனம் தேவை. முன்பின் அறியாதவர்களை நம்பி எதையும் ஒப்படைக்க வேண்டாம். பொதுவாழ்வில் இருப்பவர் களுக்கு கிடைப்பதுபோல் வந்த பொறுப்புகள் கைநழுவிச் செல்லும். யோகபலம் பெற்ற நாளில் சனிக் குரிய ஆலயங்களில் வழிபாடு செய்யுங்கள்.
கும்ப - ராகு, சிம்ம - கேது
26.4.2025 அன்று ராகு -கேதுக் களின் பெயர்ச்சி நடைபெற உள்ளது. உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் ராகுவும், 2-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். 8-ம் இடம் என்பதால் எதையும் யோசித்துச் செய் யுங்கள். மறைந்த ராகுவால் நிறைந்த தன லாபம் கிடைக்கும். என்றாலும் மகிழ்ச்சி நிலையாக இருக்காது. உறவினர்களுக்கு நல்லது செய்தாலும் அது தீமையாகத் தெரியும்.
2-ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் வருமானத்தைக் காட்டிலும் செலவு கூடும். குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கும். சேமிக்க இயலாது. உறவினர் பகை அதிகரிக்கும். ஊர் மாற்றம், வீடு மாற்றம் உறுதியாகலாம். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாது. உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். நீண்ட காலமாக தடைப்பட்டு வந்த காரியம், மேலும் தாமதமாகும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள்.
மிதுன - குரு சஞ்சாரம்
11.5.2025 அன்று குரு பகவான், மிருகசீர்ஷம் 3-ம் பாதத்தில் மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அவரது பார்வை 4, 6, 8 ஆகிய இடங்களில் பதிகிறது. குருவின் பார்வை 4-ம் இடத்தில் பதிவதால் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். கடமையில் இருந்த தொய்வு அகலும். இல்லத்தில் சுபகாரியங்கள் நடை பெறுவதற்கான அறிகுறி தென்படும். வீடு கட்ட வேண்டும் அல்லது கட்டிய வீட்டைப் பழுது பார்க்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு, அந்த முயற்சி கைகூடும்.
குருவின் பார்வை 6-ம் இடத்தில் பதிவதால் ருண ரோக ஸ்தானம் புனிதமடைகிறது. நீடித்த நோயில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் ஆகலாம். வழக்குகள் சாதகமாகும். வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பீர்கள். பிள்ளைகள் மற்றும் வாழ்க்கைத் துணை மூலம் வருமானம் வரும். உயர் அதிகாரிகளுடன் இருந்த மனக்கசப்பு மாறும்.
குருவின் பார்வை 8-ம் இடத்தில் பதிவதால் ஆயுள் ஸ்தானம் பலப்படுகிறது. ஆரோக்கியம் சீராகும். வாழ்க்கைத் தேவை பூர்த்தியாகும். சென்ற வருடத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்வீர்கள். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண்பழி அகலும். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். கடைதிறப்பு விழாக்கள், கட்டிடத் திறப்பு விழாக்கள் நடைபெறுவதில் இருந்த தடை அகலும்.
கும்ப - சனி சஞ்சாரம்
வருடத் தொடக்கம் முதல் கும்ப ராசியிலேயே சனி சஞ்சரிக்கிறார். அவரது பார்வை 2, 5, 10 ஆகிய இடங்களில் பதிகிறது. இதன் விளைவாகவும், அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கத்தாலும் எந்தப் புது முயற்சி செய்தாலும், அவை அனுபவத் தாலும், பிரார்த்தனையாலுமே கை கூடும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி செலவிடுவீர்கள். உத்தியோகத்தில், அதிகாரிகளின் அனுசரிப்பு கிடைக்காது.
கடக - குரு சஞ்சாரம்
வருடத் தொடக்கத்தில் மிதுன ராசிக்கு செல்லும் குரு பகவான், 8.10.2025 அன்று கடக ராசிக்கு அதிசாரமாகச் செல்கிறார். அங்கே 19.12.2025 வரை இருக்கும் அவர், உச்சம் பெற்று பலம் பெறுகிறார். குருவின் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் பதிகின்றது. 5-ம் இடத்தில் குரு பார்வை பதிவதால் நல்ல சம்பவங்கள் நாளும் நடைபெறும். பொருளாதாரத்தில் மேன்மை உண்டு. முன்னோர் சொத்துகளில் முறையான பங்கீடு வந்துசேரும். பிள்ளை களுக்கு தகுந்த வேலை கிடைக்கும்.
குருவின் பார்வை களத்திர ஸ்தானத்தில் பதிவதால், மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும். வாசல்வரை வந்து திரும்பிய வரன்கள், இப்போது முடிவாகலாம். வாழ்க்கைத் துணை வழியே நன்மைகள் நடைபெறும். ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை உண்டு. வருமானப் பற்றாக்குறை அகலும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். பாக்கிய ஸ்தானம் பலம்பெறுவதால் தடைகள் விலகும். பாகப்பிரிவினை சுமுகமாக நடைபெறும்.
குருவின் வக்ர காலம்
18.11.2025 முதல் 19.12.2025 வரை கடகத்திலும், 20.12.2025 முதல் 31.12.2025 வரை மிதுனத்திலும் குரு வக்ரம் பெறுகிறார். இக்காலத்தில் திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லும். தெய்வீக சிந்தனை மேலோங்கும். மறைமுகப் பகை உண்டு. பொதுநலத்தில் இருப்பவர்கள் பொறுப்புகளில் இருந்து விடுபடும் சூழ்நிலை உருவாகும்.
எதிர்பாராத விரயங்களால் மகிழ்ச்சி குறையும். ஆரோக்கிய குறைபாடும் அதன்மூலம் மருத்துவச் செலவும் ஏற்படத்தான் செய்யும். குடும்பத்தில் தினமும் பிரச்சினைகளும், போராட்டங்களும் தலைதூக்கும்.
சனியின் வக்ர காலம்
2.7.2025 முதல் 17.11.2025 வரை, கும்ப ராசியில் சனி வக்ரம் பெறு கிறார். உங்கள் ராசிக்கு 7, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. அவர் வக்ரம் பெறும் இந்த நேரத்தில் குடும்ப பிரச்சினை அதிகரிக்கும். திருமண முயற்சிகள் நெருங்கி வந்து கைநழுவிச் செல்லலாம்.
`தான் உண்டு, தன் வேலை உண்டு' என்று இருக்க வேண்டிய நேரம் இது. பிறரிடம் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகலாம். அதே சமயம் அஷ்டமாதிபதியாகவும் சனி இருப்பதால், சுபச்சடங்குகள் நடத்தும் யோகம் வாய்க்கும். சனி - செவ்வாய் பார்வை காலத்திலும் மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும்.






