என் மலர்

  கடகம் - ஆண்டு பலன் - 2022

  கடகம்

  ஆங்கில ஆண்டு பலன் - 2022

  சந்திரனின் ஆசி பெற்ற கடக ராசியினருக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த ஆங்கிலப் புத்தாண்டில் வருட கிரகங்களால் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு சாதகமான பலன்கள் உண்டாகும். ஏப்ரல் 2022க்குப் பிறகு தடைபட்ட அனைத்து பாக்கியங்களும் துரிதமாகும். முன்னேற்றத்திற்கான பாதை தென்படும்.

  நேர்மை உங்களை சுமூகமாக வழி நடத்தும். புதிய திட்டங்கள் தீட்டி சவாலான செயல்களையும் சாமர்த்தியமாக செய்து முடிப்பீர்கள். உங்களின் திறமை வெளிப்படும். ராசியை சனி பார்ப்பதால் தேவையற்ற கோபமும் முயற்சியில் தடை, தாமதம் உண்டாகும். கோபத்தை குறைத்து நம்பிக்கையோடு முயற்சித்தால் காரிய சித்தியுடன் நிம்மதியும் நிலைக்கும். இந்த புத்தாண்டிற்கான விரிவான பலன்களைக் காணலாம்.

  குரு சஞ்சார பலன்: ஏப்ரல் 13, 2022 வரை அஷ்டம ஸ்தானத்தில் குரு இருப்பதால் உங்கள் முயற்சி வெற்றியடைய நீங்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டும். உங்களின் புகழ், அந்தஸ்தை நிலை நிறுத்த கடின உழைப்பு அவசியம். கடின உழைப்பால் அசௌகரியங்கள் ஏற்படலாம். தன ஸ்தானத்திற்கு குருப் பார்வை இருப்பதால் உழைப்பிற்கு ஏற்ற வருமானம் நிச்சயம் உண்டு. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்திலிருந்த பல விதமான குறைபாடுகள் சீரடையும்.

  பொருளாதார நிலை சாதகமாக உள்ளதால் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை கட்டுப்படுத்த முடியும். பேச்சாற்றலால் சிக்கலான காரியங்களைக் எளிதாக சாதிப்பீர்கள். பணிகளை மேற்கொள்ளும் போது தடை தாமதங்கள் வந்தாலும் துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றி வாகை சூடுவீர்கள்.

  குடும்பத்திற்கு ஒரு புதிய உறுப்பினர் சேர்க்கை ஏற்படும்.அந்த புது வரவு களத்திரமாகவோ குழந்தையாகவோ இருக்கலாம். இளைய சகோதர வழியில் சொத்து தொடர்பான வில்லங்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் செயல்பாடுகளில் மந்த நிலையும் மெத்தன போக்கும் ஏற்படும். தொழில் தொடர்பான சிறு தூர பயணம் ஏற்படும். காது நரம்பு தொடர்பான சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும்.

  ஏப்ரல் 13க்குப் பிறகு குரு பாக்கிய ஸ்தானத்திற்குச் செல்லும் போது உடல் தேஜஸ் பெரும். தங்களுடைய பணிகளை விரைவாகவும் வேகமாகவும் வெற்றிகரமாகவும் செய்து முடிப்பீர்கள். மிக மிக சிறப்பான நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். தொட்டது எல்லாம் துலங்கும். ஜனவசியம் ஏற்படும். தெளிவான மன நிலையோடு செயலாற்றுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். தன வரவு மகழ்ச்சி தரும்.

  பல விதமான மாற்றங்கள், ஏற்றங்கள் ஏற்படும். வாழ்வில் வசந்தம் உலா வரும். மனதில் தெம்பு, தைரியம் ஏற்படும். இளைய சகோதர வழியில் ஆதாயம் ஏற்படும். உங்களின் சகோதர, சகோதரிகளின் நலனில் ஆர்வம் அதிகரிக்கும். தந்தை ஸ்தானத்தில் இருந்து உங்களின் சகோதர, சகோதரி திருமணத்தை ஏற்று நடத்தி ஆனந்தம் அடைவீர். காரிய சித்தி ஏற்படும். தாயின் அன்பு, ஆதரவு, ஆசீர்வாதம் நிறைந்து இருக்கும். தாய்வழி உறவினர்களின் அனுசரனை இருக்கும். தாய் வழிச் சொத்து, உயில் ஆதாயம் உண்டு.

  சனியின் சஞ்சார பலன்கள்: ஆண்டு முழுவதும் சனிபகவான் ராசியைப் பார்ப்பதால் தோற்றப் பொழிவு குறையும். மனம் அலை பாய்ந்து கொண்டே இருக்கும். ஞாபக மறதி மிகும். நம்மை உதவி செய்து கை தூக்கி விட யாருமில்லை என்ற எண்ணம் மிகைப்படுத்தலாக இருக்கும். அதிர்ஷ்டம் என்னைத் தேடி வருமா என அதிர்ஷ்டத்தைத் தேடி காலம் தள்ளுவீர்க்ள். 26.2.2022 முதல் 6.4.2022 வரை கடகத்திற்கு 5, 10ம் அதிபதியான செவ்வாய் 7, 8ம் அதிபதியான சனியுடன் 7ல் இணைகிறார். கடகத்திற்கு 5ம் அதிபதி செவ்வாய், 8ம் அதிபதி சனியுடன் இணைவதால் விபரீத ராஜ யோகம் உண்டாகும்.

  சிலருக்கு கௌரவப் பதவிகள் கிடைக்கும். பாகப் பிரிவினையில் இருந்த சட்ட சிக்கல் தீரும். பல தலைமுறையாக தீராத சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சிலர் தொழில், உத்தியோக நிமித்தமாக பூர்வீகத்தை விட்டு வெளியேற நேரும். புத்திர பிராப்தம் உண்டாகும். உணவுப் பொருட்கள், கேட்டரிங், ஹோட்டல்கள் தொழில் நடத்துபவர்களின் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். குல தெய்வம் பூர்வீகம் தெரியாதவர்கள் அதை தெரிந்து கொள்ள முயல்வீர்கள். பூர்வீகத் தொழிலால் கௌரவம் கிடைக்கும். சிலர் பூர்வீகச் சொத்தை விற்று புதிய தொழில் ஆரம்பிப்பார்கள்.

  ராகு/கேது சஞ்சார பலன்: ஏப்ரல் 12, 2022 வரை 11ல் நிற்கும் ராகுவாலும் 5ல் நிற்கும் கேதுவாலும் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். எதிரிகளின் பலம் குறையும். பிள்ளைகளின் கடமைகளை செய்து முடிப்பீர்கள். திருமண வயதில் உள்ள பிள்ளைகளுக்கு சீரும் சிறப்புமாக திருமணம் செய்து முடிப்பீர்கள்.

  பொருளாதாரத்தில் தன்னிறைவு ஏற்படும்.பணவரவில் இருந்த தடை, தாமதம் சீராகும். பணப் பற்றாக்குறைகள் அகலும். அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தை அள்ளித்தருவதாக மீடியாக்களில் வரும் விளம்பரங்களைப் பார்த்து அதிர்ஷ்டப் பொருட்களை வாங்கி குவித்து ஏமாறுவீர்கள். அநாவசிய ஆடம்பர செலவு செய்துவிட்டு பின்னர் சேமிப்பை பற்றி சிந்திப்பீர்கள். தந்தைக்கு தடைபட்ட அரசின் உதவித் தொகை கிடைக்கும். தந்தையின் ஆயுள் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

  வெளிநாட்டில் வசிக்கும் உங்களின் மூத்த சகோதரர் பூர்வீகத்திற்கு வந்து செல்வார். மூத்த சகோதரருடன் நல்லிணக்கம் உண்டாகும். உங்களின் பூர்வீகச் சொத்துக்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டு அதன் மூலம் பெரிய பணம் கிடைக்கும்.

  ஏப்ரல் 12, 2022க்குப்பிறகு 10ல் ராகுவும், 4ல் கேதுவும் மாறும் பொழுது தொடர்ந்து தொழில் அபிவிருத்தி உண்டாகும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம், வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு வீடு, நிலம், தோட்டம், வாகன யோகமும் உண்டாகும்.

  சிலர் வீட்டை செப்பனிட்டு அழகு பார்ப்பார்கள். 4ல் கேது இருப்பதால் ராசி அதிபதி நிலம் தொடர்பான முதலீட்டில் கவனம் தேவை. தாயின் ஆரோக்கியம் சீராக இருக்கும். தாய் வழிச் சொத்தின் மூலம் சகோதரர்களிடம் ஏற்படும் கருத்து வேறுபாட்டை தவிர்க்க முறையான பத்திரப் பதிவை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். சிலருக்கு அடமானத்தில் உள்ள சொத்து மீண்டு வரும். தடைபட்ட வாடகை வருமானம் வந்து சேரும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு ஏற்ற காலம்.

  திருமணம்: பல வருடங்களாக திருமணத்தடையை சந்தித்த கடக ராசியினருக்கு திருமணம் நடந்து முடியும். உங்கள் ராசியைப் சம சப்தமமாகப் பார்க்கும் சனி பகவானால் கோட்சார ரீதியான புனர் பூ தோஷம் ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 2022ல் குரு மீனத்திற்குச் சென்றவுடன் திருமண வாய்ப்புகள் விறுவிறுப்பாக தேடி வரும்.

  ஒரு சிலருக்கு சட்ட சிக்கலான இரண்டாம் திருமணமும் நடக்கும். பலருக்கு சடங்கு சம்பிரதாயங்களை கடைபிடிக்காத காதல் கலப்பு திருமணமாகவே இருக்கும். இதனால் குடும்பஉறுப்பினர்களிடையே சிறு சலசலப்பு மன சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும்.

  பெண்கள்: கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்பட்டு சட்ட உதவியை நாட வைக்கும் என்பதால் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். குழந்தைகளின் நலனுக்காக கடன் வாங்க நேரலாம். பழைய கடனை அடைக்க புதிய கடன் வாங்க நேரும். வீட்டிற்கு தெரியாமல், நகை சீட்டு, ஏலச் சீட்டு கட்டுவதை தவிர்த்து அரசுடைமை வங்கிகளில் உபரி பணத்தை சேமிக்க வேண்டும்.

  உத்தியோகஸ்தர்கள்: அரசு உத்தியோகத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மிகுதியான பொறுப்புகள் வழங்கப்படும். சிறு பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். மேலதிகாரிளிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். இயன்றவரை வேலையை மாற்றம் செய்யாமல் இருப்பது புத்திசாலித்தனம். பல சாதகங்கள் நடந்தாலும் மிகைப்படுத்தலான மன உளைச்சலும் இருக்கும்.

  முதலீட்டாளர்கள்/வியாபாரிகள்: இதுவரை சொந்த தொழில் நாட்டம் இல்லாதவர்களுக்கு கூட தொழில் ஆர்வம் உருவாகும். தொழிலுக்கு தேவையான உபரி மூலதனம் கிடைக்கும். ஏழாமிட சனி புதிய தொழில் கூட்டாளிகளையும் வாடிக்கையாளர்களையும் தருவார். வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவு செய்யும் சூழல் நிலவும். யாரையும் நம்பி பணப் பொறுப்பை ஒப்படைக்க கூடாது.நம்பிக்கை இல்லாத புதிய நபர்களிடம் தொழில் தொடர்பு வைக்க கூடாது. முதலாளி,தொழிலாளர்களிடையே சிறு சிறு பிணக்குள் அவ்வப்போது தோன்றி மறையும்.

  அரசியல்வாதிகள்: சில கடக ராசியினருக்கு அரசியல் ஆர்வம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு எதிர்பாராத அரசியல் பதவிகள் தேடி வரும். பெயர், புகழை காப்பாற்றிக் கொள்ள அதிகம் பாடுபட வேண்டியிருக்கும். கட்சிப் பணிகளுக்காக அதிகம் செலவு செய்ய நேரும். பிறரைப் பற்றிய தேவையில்லாத விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும்.சில அரசியல் பிரமுகர்களுக்கு ஆரோக்கிய குறைபாடு உண்டாகும்.

  விவசாயிகள்: விவசாயிகளுக்கு கால் நடைகள் மூலமாகவும் அதிக விளைச்சலாலும் வருமானம் அதிகரிக்கும் காலம். பெரும் முதலீட்டு விவசாயிகளுக்கு விளைச்சல் அமோக நற்பலன் தரும்.கார்பரேட் விவசாய நிறுவனங்களுக்கு உபரி உற்பத்தி கிடைக்கும்.

  மாணவர்கள்: கடக ராசி மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். 5ல் கேது இருப்பதால் படிப்பதை எளிதாக புரிந்து கொள்வீர்கள். நீங்கள் 1 வருடமாக இரவும் பகலும் படித்த படிப்பு உங்களுக்கு கைகொடுக்கும். ஏப்ரல் 2022 போட்டி பந்தயங்கள், போட்டித் தேர்வில் கலந்து கொள்பவர்கள் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.

  புனர்பூசம் 4ம் பாதம்: இதுவரை பாராமுகமாக இருந்த உறவுகளின் வருகை குடும்பத்தில் கலகலப்பை அதிகப்படுத்தும். முன்னோர்களின் ஆசிர்வாதமும் வழிகாட்டலும் இந்த புத்தாண்டில் விரும்பிய மாற்றத்தை தரும். வியாழக்கிழமை வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகனை வழிபடவும்.

  பூசம்: நல்ல வேகமும், விவேகமும் உண்டாகும். தொழில் சார்ந்த எண்ணம் ஈடேறும். வரக்கூடிய இடர்பாடுகளையும், அவமானங்களையும் உணரும் உள்ளுணர்வு உருவாகும். சுப பலன்களை அதிகரிக்க சனிக் கிழமை காளியை வழிபடவும்.

  ஆயில்யம்: கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. எதிர்பாராத சில உதவிகள் தேடி வரும். பேச்சில் நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. புதன்கிழமை விநாயகருக்கு அருகம்புல் அணிவித்து வழிபட நல்லது நடக்கும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×