என் மலர்tooltip icon

    கடகம்

    சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026

    அன்பான கடக ராசியினரே

    கடக ராசிக்கு 7,8ம் அதிபதியான சனி பகவான் தற்போது கோச்சாரத்தில் ராசிக்கு 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தனது 3ம் பார்வையால் 11ம்மிடமான லாப ஸ்தானத்தையும் 7ம் பார்வையால் 3ம்மிடமான சகாய ஸ்தானத்தையும் 10ம் பார்வையால் 6ம் மிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தையும் பார்வை இடுகிறார். இதுவரை இருந்த மனக்கவலை, உடல் நலக் குறைவு, கடன் தொல்லை, தொழில் தடை, அதிர்ஷ்டமின்மை விலகும்.நீதி, நேர்மை, நியாயம் போன்றவற்றை போதிக்கும் சனி பகவான் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எப்படி எல்லாம் வாழ்ந்தால் முன் ஜென்ம கர்மாவை கழித்து ஆன்மாவை சுத்தப்படுத்தி பிறவியற்ற நிலையை அடையலாம் என்பதை புரிய வைப்பவர். சனி பகவான் மூலம் வாழ்க்கை தத்துவத்தை படிக்கப் போகிறீர்கள்.

    பாக்கிய சனியின் பொதுவான பலன்கள்

    கடக ராசிக்கு 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்திற்கு வரும் சனி பகவான் தர்ம வழியில் நடத்தி செல்ல இருக்கிறார். இழந்த பாக்கிய பலன்களை மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள்.சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு மிகப் பெரிய திருப்புமுனையை இந்த சனிப்பெயர்ச்சி தரும். தொழிலில் நிலைத்து நிற்க முடியுமா? என்ற மன பயத்துடன் இருந்தவர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.குடும்ப சூழ்நிலை காரணமாக பொருத்தமில்லாத வேலையில் இருந்தவர்களுக்கு தகுதிக்கும், திறமைக்கும் ,படிப்பிற்கும் தகுந்த வேலை தேடி வரும். நல்ல வேலை கிடைக்காமல் மனம் நொந்து போன இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 9ம் இடச் சனி என்பதால் தொழில்/ வேலைக்காக வெளியூர், வெளிநாடு செல்ல நேரலாம். வேலை பார்த்த இடத்தில் சக ஊழியர்களுடன் , உயர் அதிகாரிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு மறையும். மிக மோசமான பிரச்சனைகளை சந்தித்தவர்கள் கூட தலை நிமிர்ந்து நிற்க கூடி நல்ல நேரம் ஆரம்பம். டிரேடிங் துறையில் குறிப்பாக ஜவுளி அழகு ஆடம்பர பொருள், விற்பனையில் உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வழக்கறிஞர்கள், ஆடிட்டர்கள், மருத்துவ துறையில் உள்ளவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்கப் பெற்று முன்னேற்றப் பாதையில் செல்லுவார்கள்.புதிய வண்டியில் கெத்தாக ஊர் சுற்றி மகிழ்வீர்கள். கனவாக இருந்த சொந்த வீட்டு ஆசை நனவாகும். வசதி குறைவான வாடகை வீட்டில் அடைபட்டு இருந்தவர்கள் லீசுக்கு நல்ல வசதியான வீட்டிற்கு செல்வீர்கள்.உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற தாய், தந்தை பக்கபலமாக இருப்பார்கள்.

    புதுப் பணத்தை பார்ப்பதால் சிலருக்கு குறுக்கு வழியில் சம்பாதிக்கும் எண்ணம் தோன்றும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் புரிபவர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். வெளிநாட்டு வேலை முயற்சி பலிக்கும். ஒரு சிலர் வெளிநாடு, வெளி மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் செய்து மகிழ்வீர்கள்.அரசியல் நாட்டம் மிகும். அரசியல் கட்சிகள், சங்கங்கள் இயக்கங்களில் முன்னிலை உறுப்பினராகுவீர்கள். இதுவரை உங்களை உதாசினம் செய்தவர்கள் உங்களின் தயவு தேடி வருவார்கள். தாய், தந்தையின் ஆரோக்கியம் சிறப்படையும். பள்ளி, கல்லூரி படிப்பை இடையில் நிறுத்திய மாணவ, மாணவிகள் மீண்டும் படிப்பை தொடர்வார்கள். முன்பை விட அதிக ஈடுபாட்டுடன் படித்து நல்ல மதிப்பெண் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். சனிபகவான் பாக்கிய ஸ்தானத்தை விட்டு நகரும் முன்பு புத்திர பாக்கியத்தை தந்து விட்டு தான் செல்வார். சனிபகவான் சாதகமான நிலையில் இருந்தாலும் ராகு கேதுக்களின் நிலைப்பாடு சுமாராக இருப்பதால் எண்ண ஓட்டம் அதிகரிக்கும்.

    உங்களின் கற்பனை குதிரை கட்டுக்கடங்காமல் ஓடும். அடங்காத எண்ண அலைகளால் உங்களுக்கு மனதடுமாற்றம் ஏற்படும். யாரை நம்புவது எந்த காரியத்தை செய்வது எதில் லாபம் வரும் என்ற நிதானமற்ற நிலை நீடிக்கும்.சிறிய செயலுக்கு கூட கடுமையாக போராட நேரும். அதனால் மனச் சோர்வு மிகும். திட்டமிட்ட செயல் கூட கடைசி நேரத்தில் காலை வாரும். தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்க்க வேண்டும். சுய கவுரவத்திற்கு கெட்ட பெயர் வராமல் நடந்து கொள்ளவும்.ஏலச்சீட்டு, நகைச் சீட்டு வட்டிக்கு பணம் கொடுப்பது போன்ற பணம் தொடர்பான விஷயங்களில் திட்டமிட்டு செயல்படுவது சிறப்பான பலனை ஏற்படுத்தித் தரும்.

    சனியின் மூன்றாம் பார்வை பலன்கள்

    9ம் இடத்தில் அமரும் சனி பகவான் தனது 3 ம் பார்வையால் 11ம்மிடமான லாப ஸ்தானத்தை பார்ப்பதால் பகல், இரவு பாராமல் அல்லும் பகலும் உழைத்த உழைப்பு பணமாக காய்க்கப்போகிறது.பணம் என்றால் ஆயிரக்கணக்கில் அல்ல. லட்சங்கள் / கோடிகள். வாழ்நாளில் இதுவரை பார்க்காத பெரும் பணம். நடப்பதெல்லாம் கனவா? நனவா என்று உங்களை கிள்ளிப் பார்க்க வேண்டும். கோடீஸ்வர யோகம் கடக ராசிக்கு வந்து விட்டது. ஒரு காலகட்டம் பிரச்சனைக்குரியதாக இருந்தால் வெகு விரைவில் பொற்காலத்தை தர இறைவன் உங்களை சோதிக்கிறான் என்று பொருள். உங்களுடைய மூத்த சகோதரர் உங்களுக்கு பக்க பலமாக இருந்து உங்களுக்கு உதவுவார். இதுவரை இருந்த வந்த சகோதர சகோதரி பிணக்குகள் இருந்த இடம் தெரியாமல் மறையும்.திடீர் அதிர்ஷ்டம் உயில் சொத்து ,எதிர்பாராத தன வரவு வரும் வாய்ப்பு உள்ளது. உடல் உறுப்பில் இடது காது, கணுக்கால், பின் முதுகில் அவ்வப்போது வலி தோன்றலாம். சர்க்கரை நோயாளிகள் கால் பாதம் , விரல்களை முறையாக பராமரிக்க வேண்டும். முறையான உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, யோகாவுடன் தகுந்த மருத்துவர்களின் ஆலோசனையும் உங்களை நோயிலிருந்து பாதுகாக்கும் .

    சனியின் ஏழாம் பார்வை பலன்கள்

    பாக்கிய சனியின் ஏழாம் பார்வை ராசிக்கு 3ம் இடமான தைரிய, வீரிய ஸ்தானமான 3ம்மிடத்திற்கு இருக்கிறது. இனம் புரியாத மன சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும்.இது நாள் வரை தடை தாமதமான உங்களின் முயற்சிகள் சிறு மன சஞ்சலத்திற்கு பிறகு காரிய சித்தியை ஏற்படுத்தி தரும். இது வரை நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள் நடக்கும்.உடலிலும் மனதிலும் புதிய தெம்பு பிறக்கும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மனதில் தன்னம்பிக்கை ஏற்படும்.

    எந்த செயலையும் நினைத்தவுடன் அவசரமாக செய்யாமல் . ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து செயல்பட வேண்டும்.சில நேரங்களில் முன்னோர்கள் கடைபிடித்து வந்த கொள்கைகளில் இருந்து மாறுபட்டு செயல்பட நேரும். உங்களுடைய வீண் பிடிவாதம், முன் கோபத்தை தவிர்த்து தர்ம சிந்தனையுடன் பிறருக்கு மனக்குறையோ, பாதகமோ இல்லாத நல்ல முடிவை எடுங்கள்.அடிக்கடி இடப்பெயர்ச்சி செய்ய நேரும். அலைச்சல் மிகுதியாகும். வேலைப் பளு அதிகமாகும்.உழைத்த கூலி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். உங்களுடைய இரக்க சுபாவம் அதிகரிக்கும்.விவசாயிகள் நீண்ட காலமாக செலுத்தாக கடன் பாக்கிகளை அரசு தள்ளுபடி செய்யும். பலர் எந்த கஷ்டம் வந்தாலும் பூர்வீகத்தை விட்டு வெளியேற மாட்டேன் என்று பிடிவாதமாக இருப்பார்கள்.

    சனியின் பத்தாம் பார்வை பலன்

    சனியின் 10ம் பார்வை 6ம் இடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்திற்கு இருப்பதால் இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சனை இனி இல்லை. பணம் கொடுக்கல் வாங்கல் சீராகும். உங்களை ஏமாற்றி பணம் பறித்தவர்கள் கூட பணத்தை கொடுக்க முன் வருவார்கள். தனம், தான்யம், புகழ், செல்வாக்கு, வீரம், அறிவு இவற்றுடன் அஷ்ட ஐஸ்வரியமும் கிடைக்கும். கடன் இல்லா பெருவாழ்வு வாழும் பாக்கியம் கிடைக்கப் பெறுவீர்கள். உடல் நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனோபலம், தேகபலம், பணபலம் ஆகிய மூன்றும் குடிபுகும். பிறர் பிரச்சனைகளை உங்கள் தலையில் இழுத்துப் போட்டு அசட்டு தைரியத்துடன் செயல்படுவது கெட்ட பெயரை உண்டாக்கும் என்பதால் ஒதுங்கி நிற்பது நல்லது. இது நாள் வரை நோயிற்கான காரணம் மற்றும் நோயின் தன்மை தெரியாமல் செய்த வைத்தியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து நோய்க்கான காரணம் கண்டறிந்து சிகிச்சையால் பலன் கிடைக்கும்.வேலையாட்கள் விசுவாசமாக நடந்து கொள்வார்கள். சொந்தமாக கோவில் கட்ட விருப்பம் உள்ளவர்கள், சுய ஜாதக வலிமையை சரி பார்த்து சொந்த கோவில் கட்ட உகுந்த காலம். ஏற்கனவே கோவில் வைத்து இருப்பவர்கள் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய மூலவரின் சக்தி கூடும்.

    திருமணம்: சனிபகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் திருமண வாய்ப்புகள் தேடி வரும். கோச்சாரத்தில் 2026 ஆம் ஆண்டு வரை இரண்டாம் இடத்தில் கேதுவும் எட்டாமிடத்தில் ராகுவும் சஞ்சரிப்பார்கள். 2027ல் ராசியில் கேதுவும் ஏழாம் இடத்திற்கு ராகுவும் செல்வார்கள். சிலருக்கு தவறான காதல் கலப்பு திருமணங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. வரன் பற்றி நன்றாக விசாரித்த பிறகு திருமணத்திற்கு முயற்சிக்க வேண்டும். மிக முக்கியமாக சுய ஜாதக ரீதியாக ராகு கேது தோஷம் உள்ளவர்கள் சுய ஜாதக பரிசீலனைக்கு பிறகு திருமணம் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

    பெண்கள்

    கடக ராசிப் பெண்களுக்கு இது பொற்காலம். அழகு, ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட காலமாக நீங்கள் எதிர்பார்த்த உங்களின் தாய் வழி சீதனம் உங்களை தேடி வரும். மாமியார், மாமனார், நாத்தனார், மச்சினர் பிரச்சனைகள் சீராகும்.அசையாச் சொத்தை வாடகை்கு விட்டு வருமானம் சம்பாதிப்பவர்களுக்கு வருமானம் இரட்டியாகும்.சகோதர சகோதரிகளிடம் நட்பும், நல்லுறவும் எற்படும். சகோதர வர்கத்துடன் இணைந்து கூட்டுத் தொழில் செய்யும் எண்ணம் எற்படும். பெண்கள் குழுவாக சேர்ந்து அழகு, ஆடம்பர பொருட்களை விற்பனை செய்து லாபம் பெறலாம்.புத்தாடை தங்கம் வெள்ளி நகைகள் வாங்கும் யோகம் கிடைக்கும்.

    பரிகாரம்

    காரிய சித்திக்கு துர்க்கை வழிபாடு இராகு காலத்தில்,செய்வது சிறந்தது. அதுவும் இராகு காலத்தின் கடைசி 1/2 மணி நேரமான அமிர்தகடிகை நேரமே சிறப்பான பரிகார நேரம். செவ்வாய் கிழமைகளில் முருகன் வழிபாடு செய்வது நலம்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×