search icon
என் மலர்tooltip icon

  கடகம் - சனிப்பெயர்ச்சி பலன்கள்

  கடகம்

  சனிப்பெயர்ச்சி (2023) ராசிபலன்கள், பரிகாரங்கள்

  அஷ்டமத்தில் வருகிறது சனி! அமைதிதான் வேண்டும் இனி!

  சனியின் வக்ர காலம்!

  19.6.2024 முதல் 4.11.2024 வரை மற்றும் 2.7.2025 முதல் 18.11.2025 வரை என்று இரண்டு முறை சனி வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 7, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதி சனி என்பதால் குடும்பப் பிரச்சினைகள் அதிகரிக்கும். திடீர் இடமாற்றம் சிக்கலை உருவாக்கும். சனி அஷ்டமாதிபதியாகி வக்ரம் பெறுவதால் ஒரு சில காரியங்கள் திடீரென முடிவாகும். குறிப்பாகப் பிள்ளைகளின் கல்யாணம், பெற்றோரின் மணி விழாக்கள் நடைபெற்று சுபவிரயங்களை உருவாக்கும். வாழ்க்கைத் துணை வழியே பிரச்சினைகள் உண்டு. மற்றவர்களை நம்பி செய்த காரியங்கள் நடைபெறாமலும் போகக் கூடும்.

  கடக ராசி நேயர்களே!

  இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 20.12.2023 அன்று 8-ம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கின்றார். அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் உங்களுக்கு தொடங்கி விட்டது. உங்கள் ராசிக்கு 7, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. களத்திர ஸ்தானம் மற்றும் ஆயுள் ஸ்தானத்திற்கு அதிபதியான அவர், தன் சொந்த வீடான கும்பத்தில் சஞ்சரிப்பதால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது. இருப்பினும் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் என்பதால் அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. அதிக விரயங்கள் ஏற்படும். இட மாற்றம், ஊர் மாற்றம் போன்றவற்றை சந்திக்க நேரிடும். தொடர்ந்து சனிக்கிழமை தோறும் விரதமிருந்து சனி பகவானை வழிபடுவதன் மூலமே சங்கடங்களில் இருந்து விடுபட இயலும்.

  அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம்!

  டிசம்பர் 20-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கப் போகின்றார். இதன் விளைவாக எண்ணற்ற மாற்றங்கள் வந்து சேரப்போகின்றது. குறிப்பாக ஆரோக்கியத்தில் அடிக்கடி சீர்கேடுகள் வரலாம். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கலாம்.

  மன நிம்மதி கொஞ்சம் குறைவாகவே இருக்கும். உத்தியோக மாற்றமும், தொழில் மாற்றமும் மனதிற்கு ஏற்றவிதம் அமையாது. புதிய ஒப்பந்தங்கள் கைநழுவிச் செல்லலாம். பொருளாதாரத்தில் பற்றாக்குறைஅதிகரிக்கும். இது ஒரு சோதனைக்காலமாக இருக்கும் என்பதால் எதையும் சிந்தித்துச் செய்வது நல்லது.

  சனியின் பார்வை பலன்கள்!

  உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியின் பார்வை 2, 5, 10 ஆகிய இடங்களில் பதிகின்றது. தனம், குடும்பம், புத்திரப்பேறு, தொழில் வளர்ச்சி ஆகிய இடங்களைக் குறிக்கும் அந்த இடங்களில் சனியின் பார்வை பதிவதால் அவற்றில் எல்லாம் மாற்றங்கள் வந்துசேரும். குறிப்பாக 2-ம் இடத்தில் சனியின் பார்வை பதிவதால் குடும்பத்தில் பிணக்குகள் அதிகரிக்கும். எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்ய இயலாது. யாருக்கேனும் வாக்குறுதி கொடுத்தால் நிறைவேற்ற இயலாது.

  சனியின் பார்வை பஞ்சம ஸ்தானத்தில் பதிவதால் பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. அவர்களின் எதிர்கால நலன்கருதி விரயம் செய்ய நேரிடும். பூர்வீக சொத்துக்களை பிரித்துக் கொள்வதில் பிரச்சினைகள் உருவாகலாம். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.

  சனியின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால் தொழிலில் புதிய வாய்ப்புகள் வந்துசேரும். பிரச்சினையை உருவாக்கிக் கொண்டிருந்த பழைய பங்குதாரர்களை விலக்கிவிட்டு புதிய பங்குதாரர்களை சேர்த்துக்கொள்ள முன்வருவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க நீங்கள் செய்யும் முயற்சிகள் பலன் தராது. பொருளாதாரப் பற்றாக்குறையை சமாளிக்க கடன் வாங்கும் சூழலும் உண்டு.

  சனியின் பாதசாரப் பலன்கள்!

  செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது (20.12.2023 முதல் 21.2.2024 வரை) வீடு, இடம் சம்பந்தப்பட்ட வகையில் எடுத்த முடிவு வெற்றி தரும். வீட்டை விரிவு செய்து காட்டுவதில் அல்லது கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பதில் ஆர்வம் கூடும். செவ்வாய் உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவதால் பூர்வ புண்ணியத்தின் பலனால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய யோகங்கள் அனைத்தும் வந்து சேரும். சொந்தங்களுடன் பகையை வளர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

  ராகு சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது (22.2.2024 முதல் 14.3.2025 வரை)

  குடும்ப முன்னேற்றம் கூடும். பெண்களின் சுபச்சடங்குகள், கல்யாணம், காது குத்து போன்றவை நடைபெறும். வியாபாரத்தில், தொழில் போட்டிகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். பிறருக்கு வாக்குறுதி கொடுக்கும் பொழுது கவனம் தேவை. உத்தியோகத்தில் நல்ல நிறு வனங்களில் பணிபுரிய வெளிநாட்டில் இருந்து அழைப்புகள் வரலாம்.

  குரு சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது (15.3.2025 முதல் 6.3.2026 வரை)

  சுபவிரயங்கள் அதிகரிக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் குறையாமல் பார்த்துக் கொள்வது நல்லது. எந்த ஒரு காரியத்தையும் பிறரிடம் ஒப்படைக்கக் கூடாது. உத்தியோகத்தில் இருந்து விருப்ப ஓய்வில் வெளியே வந்து சுய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழும் வாய்ப்பு கிடைக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும்.

  குருப்பெயர்ச்சிக் காலம்!

  சனிப்பெயர்ச்சிக் காலத்தில் இரண்டு முறை குருப்பெயர்ச்சி நிகழ்கின்றது. அதுமட்டுமல்லாமல் வக்ர காலத்தில் கடக ராசிக்கு குரு செல்கின்றார். ரிஷபத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது பண வரவு திருப்தி தரும். மதிப்பும், மரியாதையும் உயரும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். தொழிலில் புதிய முதலீடுகளை செய்து இழந்த செல்வத்தை மீண்டும் வரவழைத்துக் கொள்வீர்கள். பெண் பிள்ளைகளின் திருமணங்கள் சிறப்பாக நடைபெற வழிபிறக்கும்.

  மிதுனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது பண நெருக்கடி அதிகரிக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சினைமீண்டும் தலைதூக்கும். உத்தியோகத்தில் உங்களுக்கு மேலதிகாரிகள் கூடுதல் பொறுப்புகளை வழங்கி தடுமாற்றத்தை உருவாக்குவர். 'விருப்ப ஓய்வில் வெளிவரலாமா?' என்று கூட சிந்திப்பீர்கள். கடகத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது இட மாற்றம், வீடு மாற்றம் ஏற்படலாம்.

  ராகு-கேது பெயர்ச்சிக் காலம்!

  26.4.2025-ல் கும்ப ராசியில் ராகுவும், சிம்ம ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். இதன் விளைவாக குடும்ப ஒற்றுமை கொஞ்சம் குறையலாம். உடல்நலத்திலும் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவை ஏற்படுத்தும். வியாபாரப் போட்டிகள் அதிகரிக்கலாம்.

  கொடுக்கல்-வாங்கல்களில் தடுமாற்றங்கள் உண்டு. கேது 2-ம் இடத்திற்கு வருவதால் குடும்பச்சுமை கூடும். குடியிருக்கும் வீட்டால் பிரச்சினைகள் வரலாம். சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை செய்து கொள்வது நல்லது.

  வெற்றி பெற வைக்கும் வழிபாடு

  செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை வழிபடுவதோடு சிறப்பு வழிபாடாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள பெரிச்சிக் கோவிலில் வீற்றிருந்து அருள் வழங்கும் வன்னிமரத்தடி சனீஸ்வரரை வழிபட்டு வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள்.

  கடகம்

  சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2023

  தாய்மை உணர்வு நிறைந்த கடக ராசி அன்பர்களே இதுவரை ராசிக்கு 7-ம் இடத்தில் நின்று கண்டகச் சனியாக ஆட்டுவித்த சனி பகவான் தற்பொழுது ராசிக்கு 8ம் இடமான அஷ்டம ஸ்தானத்திற்கு சென்று ஆட்சி பலம் பெறப் போகிறார்.

  தன் 3-ம் பார்வையால் 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தையும் 7-ம் பார்வையால் 2ம்மிடமாகிய தன ஸ்தானத்தையும் 10-ம் பார்வையால் ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் பார்வை இடுகிறார்.

  அஷ்டமச் சனியின் பலன்கள்: இதுவரை ராசிக்கு 7-ம் இடமான களத்திர ஸ்தானத்தில் நின்று திருமணத் தடை, களத்திரத்துடன் மன பேதம், தொழில் கூட்டாளிகளிடம் மனக்கசப்பையும் ஏற்படுத்திய சனி பகவான் 8-ம் மிடமான அஷ்டம ஸ்தானத்திற்கு செல்கிறார். அஷ்டமாதிபதி ஆட்சி பலம் பெறுகிறார். எந்த வகையில் பார்த்தாலும் கடக ராசிக்காரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் அஷ்டமச்சனி காலத்தை கடத்த வேண்டும் .7-ம் இடத்தில் இருந்த போது அனுபவித்த பிரச்சனைகளே சமாளிக்க முடியாத நிலையில் இருக்கும் போது அஷ்டமச் சனியை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று கலக்கமாக இருக்கும்.

  பதறாத காரியம் சிதறாது. திட்டமிடுதலே வெற்றியின் ரகசியம் என்பதால் இறை நம்பிக்கையுடன் பொறுமையாக நிதானமாக திட்டமிட்டு செயல்பட்டால் எந்த பாதிப்பும் இல்லாமல் தப்பிக்க முடியும். இறையருள் உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். அஷ்டமாதிபதி அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுவதால்வெகு சிலருக்கு விபரீத ராஜ யோகமும் உண்டாகும்.

  அஷ்டமச் சனி மனித வாழ்வில் சோதனை மிகுந்த காலம். ஆயுள் தீர்க்கம். ஜனன கால ஜாதகத்தில் சுப பலன் தரக்கூடிய கிரகங்களின் தசா புத்தி நடந்தால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது என்பதை உறுதியாக சொல்லலாம்.உடல் நலம் குறையும்.வைத்தியச் செலவு அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

  அஷ்டமச் சனியின் வேலையே தொழில் உத்தியோகத்தில் இன்னல்கள் தந்து பொருளாதார நெருக்கடியை மிகுதிப்படுத்தும். சாமனியர்களையும் நிலை தடுமாற வைக்கும் என்பதால் வரவுக்கு தகுந்த செலவுகளை திட்டமிட வேண்டும். யாருக்கு ஜாமீன் போடக்கூடாது. தேவையில்லாமல் வாக்கு கொடுப்பது, சத்தியம் செய்வதை தவிர்க்கவும். அடுத்தவர் பிரச்சனையிலும் தலையிடாமல் இருப்பது நன்மை. சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பண வரவுகள் ஏற்படும். அதிர்ஷ்டம், பண வரவு உங்களைச் சார்ந்தவர்களுக்கே பயன்படும்.

  சனியின் 3-ம் பார்வை பலன்: 8-ம் இடத்தில் இருக்கும் சனியின் பார்வை 10-ம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு இருப்பதால் புதிய தொழில் ஒப்பந்தம் , முதலீட்டை தவிர்க்க வேண்டும். புதிய முதலீடு செய்தாலும் லாபம் குறைவாகவே இருக்கும். புதிய தொழில் தொடங்க கூடாது. தொழில் போட்டி கடுமையாகயாக இருக்கும். முதலாளி தொழிலாளி பிரச்சனையால் உற்பத்தி குறையும். வாடிக்கையாளார்களிடம் கோபம் காட்டினால் வேறு நபரிடம் சென்று விடுவார்கள். என்பதால் கனிவாக பழக வேண்டும். அரசின் சட்ட திட்டங்கள் சமாளிக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படும். உங்கள் தொழில் கவுரவத்தை நிலைநாட்ட கடுமையான மன உளைச்சலை சந்திக்க நேரும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் , வேலைப் பளு அதிகரிக்கும்.

  7-ம் பார்வை பலன்: சனி பகவானின் 7-ம் பார்வை 2-ம் இடமான தனம், வாக்கு ,குடும்ப ஸ்தானத்திற்கு இருப்பதால் பேச்சில் நிதானம் தேவை. நீங்கள் பேசிய வார்த்தையே அம்பாக மாறி உங்களை பதம் பார்க்கும். அதே நேரத்தில் வெளுத்தது எல்லாம் பால் என எல்லோரையும் நம்பி திறந்த மனதாக உங்களின் மனக் குமுறலை கொட்டக் கூடாது. தம்பதிகளிடையே மனக்கசப்பு ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் குறை கூறி திட்டி சிறிய பிரச்சனையை கூட பெரிய பிரச்சனையாக்குவார்கள். பொருளாதார ஏற்ற தாழ்வு மிகுதியாக இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத சூழ்நிலை உங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தும். குடும்ப உறுப்பினர்கள் உண்மையில் உங்களிடம் பாசம் காட்டினாலும் பாசங்கு செய்வது போன்ற மன உணர்வு தோன்றும். குடும்ப வாழ்வில் நாட்டக்குறைவு உருவாகும்.

  10-ம் பார்வை பலன்: சனியின் 10ம் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் இடத்திற்கு இருப்பதால் பூர்வீகம் தொடர்பான விசயங்களில் அதிரடி முடிவுகள் எடுக்காமல் இருப்பது நலம். எல்லா பிரச்சனைகளுக்கும் நீதி மன்ற படி ஏறுவதுதான் தீர்வு என்றால் மன உளைச்சல் அதிகமாகுமே தவிர குறையாது. இருக்கும் மிச்ச மீதி , மானம் , பண விரையம் , நேரம் என்று இழப்பிற்கான பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

  எந்தப் பிரச்சனையும் சாந்தமான வார்த்தைகளால் பேசி தீர்ப்பது நல்லது. அந்நிய மொழிப் புலமை ஏற்படும். சிலர் மதம் மாறவும் செய்யலாம். காதல் கலப்பு திருமணம் நடைபெறும். புதிய தொழில் முயற்சியைத் தவிர்க்கவும். இந்த சனிப் பெயர்ச்சியால் நீங்கள் அடையும் பெரும் பாக்கியம் குல தெய்வ அனுக்கிரகம் மட்டுமே. குழந்தைகளின் நடவடிக்கைகள் உங்களை சங்கடத்தில் ஆழ்த்தும். சனியின் பார்வை பட்ட இடங்கள் பாதிப்பைத் தந்தாலும் சனி பயணிக்கும் நட்சத்திரங்கள் மூலம் சில நன்மைகள் உண்டாகும்.

  சனியின் அவிட்டம் நட்சத்திர சஞ்சார பலன்கள். 17.1.2023 முதல் 14.3.2023 வரை

  கடக ராசிக்கு 5,10-ம் அதிபதியான. செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத் தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெற்று இருக்கும் குருவின் பார்வை ராசிக்கு கிடைப்பதால் பெரிய பாதகம் ஏற்படும் வாய்ப்பு இல்லை.5-ம் இடம் பதவி ஸ்தானம், புத்திர ஸ்தானம்.

  10-ம் இடம் கர்ம ஸ்தானம் என்பதால் உத்தியோகம், தொழில் நிமித்தமாக பூர்வீகத்தை விட்டு வெளியேற நேரும். சில கடக ராசியினருக்கு அரசியல் ஆர்வம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு எதிர்பாராத அரசியல் பதவிகள் தேடி வரும். செல்வாக்கு உயரும் .குழந்தை பாக்கியத்திற்கு தவம் இருந்தவர்களுக்கு கர்மம் செய்ய ஆண் வாரிசு கிடைக்கும். பூர்வீக சொத்து தொடர்பான சர்ச்சைகளும் வழக்குகளும் முடிவுக்கு வரும். பாகப் பிரிவினையில் இருந்த சட்ட சிக்கல் தீரும். பல தலைமுறையாக தீராத சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

  சதயம் நட்சத்திர சஞ்சார பலன்கள். 14.3.2023 முதல் 6.4.2024 வரை

  கோட்சாரத்தில் அக்டோபர் 30, 2023 வரை ராசிக்கு 10-ம் இடத்திலும் அதன் பிறகு 9-ம் இடத்திலும் சஞ்சரிக்கும் ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் அபரிமிதமான வாழ்வியல் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கே தெரியாமல் முடங்கி கிடந்த அனைத்து திறமைகளும் வெளிப்படும். தந்தையாலும், தந்தை வழி உறவுகள் மூலமும் முன்னேற்றத்திற்கான உதவிகள் கிடைக்கும். சிரமமான கடுமையான காரியங்கள் கூட எளிமையாக நடந்து முடியும். இஷ்ட தெய்வ வழிபாடு, குடும்பத்தில் சுப மங்கள நிகழ்வுகளும், சுப மங்கள விரயச் செலவுகளும் ஏற்படும்.

  17.6.2023 முதல் 4.11.2023 வரை ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் சனி பகவான் வக்ரம் பெறும் காலங்களில் வேலை தேடுபவர்களுக்கு வெளியூர், வெளிநாட்டில் வேலை கிடைக்கும்.அடமானச் சொத்துக்கள், நகைகளை மீட்க வாய்ப்பு உள்ளது. பொருளாதார சுணக்கங்கள் விலகி அதிகப்படியான வருமானம் கிடைக்கும். பிள்ளைகளுக்காக திருமணம், கல்வி, தொழில், உத்தியோகம், பிள்ளைப் பேறு போன்ற சுப செலவு செய்வீர்கள். வயதான கடக ராசியினர் தாத்தா, பாட்டியாகுவார்கள்.முரட்டு தைரியத்தை கைவிட்டு விவேகத்துடன் செயல்பட்டால் முத்தாய்ப்பான முன்னேற்றம் உண்டாகும்.

  பூரட்டாதி நட்சத்திர சஞ்சார பலன்கள் 6.4.2024 முதல் 29.3.2025 வரை கடக ராசிக்கு 6,9-ம் அதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் உத்தியோகம், தொழில் என தடைபட்ட அனைத்து பாக்கிய பலன்களும் மன நிறைவாக நடந்து முடியும். அடிமைத்தனத்துடன் நாடோடிபோல் வாழ்ந்தவர்களுக்கு நிரந்தமான தொழில், அதிர்ஷ்டம், முன்னேற்றம், புகழ் உண்டாகும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். அடிப்படை தேவைக்கு தடுமாறியவர்களுக்கு கூட தாராளமான பணப் புழக்கம் உண்டாகும். பங்காளிகள் பிரச்சனை, கோர்ட் , கேஸ் வாய்தா என அலைந்த நிலை மறையும். தற்கொலை வரைச் சென்றவர்களுக்கும் வாழ்க்கையில் பிடிப்பு, தைரியம் அதிகரிக்கும். முயற்சிகளுக்கும், திட்டமிடுதலுக்கும் குடும்ப உறவுகள் உதவியாக, ஆறுதலாக, பக்கபலமாக இருப்பார்கள்.

  30.6.2024 முதல் 15.11.2024 வரை பூரட்டாதி நட்சத்தி ரத்தில் சனி பகவான் வக்ரம் பெறும் காலத்தில் உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடு மிகும். உங்களை விட தகுதி குறைந்த நபருக்கு பதவி உயர்வு கொடுத்து கவுரவிப்பது உங்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் பதவி உயர்வு தடைபடும். உத்தியோகத்தில் யாரோ செய்த தவறுக்கு நீங்கள் மெமோ வாங்க நேரும். குறைந்த சம்பளத்திற்கு 2 நபர்களின் வேலையை செய்ய நேரும் உயர் அதிகாரிகளுக்கு நம்பிக்கை குறைவு ஏற்படும். இதற்காக மனம் வருந்தி வேலையை விட்டால் புதிய வேலை கிடைக்கும் வாய்ப்பு மிக மிக குறைவு . அரசு அதிகாரிகள் இடைக்கால பணி நீக்கம் செய்யப்படலாம். உங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு தடைபடும். பணிகளில் ஏற்பட்ட சிறு சிறு தவறுகளால் உங்கள் மீதான நீண்ட நாள் நம்பிக்கை குறைவுபடும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி படிக்க வேண்டும்.

  திருமணம்: தசாபுத்தி சாதகமாக இருந்தாலும் இரண்டரை ஆண்டு காலம் திருமணம் நடத்துவதை தவிர்ப்பது உத்தமம்.

  பெண்கள்: ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். தம்பதிகளுக்குள் நல்ல புரிதல் உண்டாகும். பொருளாதார பற்றாக்குறை விலகும். செலவிற்கேற்ற வரவும் வரும். கொடுக்கல், வாங்கல் சீராகும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனக்கவலை முடிவுக்கு வரும். பெண்களுக்கு 8ம் இடம் மாங்கல்ய ஸ்தானம் என்பதால் கவனமுடன் இருக்க வேண்டும். தாலியை கழட்டக் கூடாது. செவ்வாய் கிழமை செவ்வரளி சாற்றி முருகனை வழிபடவும்.

  பரிகாரம்: பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் சுய ஜாதக தசா புக்தி ரீதியான பரிகாரங்கள் செய்து கொண்டால் எல்லாச் சங்கடங்களும் விலகும்.சில விசயங்கள் துவக்கத்தில் சாதகம் இல்லாமல் இருந்தா லும் முடிவில் வெற்றி உங்களுக்கே உண்டாகும்.சனிக்கிழமைகளில் சக்ரத்தாழ்வார் நரசிம்மர் வழிபாடு செய்ய மன நிம்மதி தேடி வரும். சனிக்கிழமை வன்னி மரத்தை வலம் வர வேண்டும். தினமும் திருக்கோளாறு பதிகம் பாராயணம் செய்தால் நவகிரக தோஷம் விலகும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  கடகம்

  சனிப்பெயர்ச்சி பலன்கள்

  ஜனவரி 24-ம் தேதி 2020 முதல் 2023 ஆண்டு வரை

  கண்டகச் சனியின் ஆதிக்கம், கடமையில் கவனம் இனி தேவை!

  கடக ராசி நேயர்களே!

  இதுவரை உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 7-ம் இடமான களத்திர ஸ்தானத்திற்கு அடியெடுத்து வைக்கின்றார். இதைக் 'கண்டகச் சனி' என்று சொல்வது வழக்கம். இப்போது சனியின் நேரடிப்பார்வை உங்கள் ராசியில் பதிகின்றது.

  'கண்டகச் சனி' என்றதும், 'ஏதேனும் 'கண்டம்' வந்து விடுமோ' என்று நினைக்க வேண்டாம். சனி மகரத்தில் தன் சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. இருப்பினும் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் கூடும்.

  மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு இருக்கின்றார். அவரது பார்வை உங்கள் ராசியில் பதிவதால் 'குரு பார்க்கக் கோடி நன்மை' என்பதற்கேற்ப சனியின் கடுமையைக் குறைக்கும். இந்தச் சனிப்பெயர்ச்சி காலத்தில் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச்செய்வது நல்லது.

  ஏழாமிடத்தில் சனி

  டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்திற்கு வரும் சனி பகவானால், எண்ணற்ற மாற்றங்கள் வந்து சேரும். குறிப்பாக, உங்களுக்கோ, உங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கோ உடலில் சிறு அச்சுறுத்தல்கள் தோன்றினாலும் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது.

  சனியின் பார்வை பலன்கள்

  உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், 1, 4, 9 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார். எனவே உடல் ஆரோக்கியம், அறிவாற்றல், முன்னேற்றம், உற்சாகம், சுகஜீவனம், வாகனம், தாய்வழி உறவு, பூர்வீகம், பாக்கியம் ஆகிய அனைத்து ஆதிபத்யங்களிலும் வரும் மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும். சனியின் நேரடிப் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் ஆரோக்கியத்தில் அடிக்கடி அச்சுறுத்தல்கள் ஏற்படும். சனியின் பார்வை 4-ம் இடத்தில் பதிவதால் கல்வியில் கரையேற கொஞ்சம் முயற்சி எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். எதிர்பார்த்த இலக்கை அடைவது கடினம் என்றாலும், குரு பார்வை இருப்பதால் மகர குருவின் சஞ்சார காலத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் கடைசி நேரத்தில் நிறைவேறும். சனியின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் பாக்கிய ஸ்தானம் பலப்படுகின்றது. எனவே தொழிலில் புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.

  சனியின் பாதசாரப் பலன்கள்

  27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, தனவரவு தாராளமாக வந்து சேரும். தனாதிபதியாகவும், குடும்ப ஸ்தானாதிபதியாகவும் சூரியன் விளங்குவதால், மங்கல ஓசை மனையில் கேட்க வாய்ப்பு கிட்டும்.

  28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசிநாதனாக சந்திரன் இருப்பதால் வெளிநாட்டு முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும். மின்னணுத் துறையிலும், கலைத்துறையிலும் பணிபுரிபவர்களுக்கு இக்காலம் ஒரு பொற்காலமாக அமையும். உத்தியோகத்தில் விருப்ப ஓய்வில் வெளிவரும் சூழ்நிலையும் ஒருசிலருக்கு ஏற்படும்.

  27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, வீடு, இடம் சம்பந்தப்பட்ட வகையில் எடுத்த முடிவு வெற்றி தரும். வீட்டை விரிவு செய்து கட்டுவதில் அல்லது கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பதில் ஆர்வம் கூடும். செவ்வாய் உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவதால் பூர்வ புண்ணியத்தின் பலனாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய யோகங்கள் அனைத்தும் வந்து சேரும். இந்த நேரத்தில் கும்ப ராசியிலும் சனி சஞ்சரிக்கப் போகின்றார். அப்பொழுது அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் ஏற்பட்டாலும், கும்ப ராசி சனிக்கு சொந்த வீடு என்பதால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது. இருப்பினும் விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கலாம். சொந்தங்களின் பகையை வளர்த்துக்கொள்ளாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

  குருப்பெயர்ச்சிக் காலம்

  கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் குரு வருவதால் ஏற்றமும், இறக்கமும் கலந்த நிலை உருவாகும். வியாபாரப் போட்டிகள் அதிகரிக்கும். மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, மிகச்சிறந்த பலன் உங்களுக்கு கிடைக்கும். குரு பார்வை உங்கள் ராசியில் பதிவதால் உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள்.

  ராகு-கேது பெயர்ச்சிக் காலம்

  21.3.2022-ல் ராகு-கேது பெயர்ச்சி நடைபெறும் போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இதனால் தொழில் ஸ்தானம் வலுவடைகின்றது. எனவே தொழில் தொடங்க வாய்ப்புகள் கைகூடி வரும். 4-ல் கேது இருப்பதால் ஆரோக்கியத்தில் மட்டும் அடிக்கடி தொல்லைகள் உண்டு. தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை.

  8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். பிதுர்ரார்ஜித சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் அகலும். வாகனங்கள் வாங்கிப் பயணம் செய்யும் முயற்சி கைகூடும். கேதுவின் ஆதிக்கத்தால் சகோதர வர்க்கத்தில் சச்சரவுகள் ஏற்படலாம். அவர்கள் மூலம் வாங்கிய தொகையால் பிரச்சினைகள் உருவாகலாம்.

  வெற்றி பெற வைக்கும் வழிபாடு

  புதன்கிழமை தோறும் விரதமிருந்து ராமபிரான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். ராமர் பட்டாபிஷேக படத்தை இல்லத்து பூஜை அறையில் வைத்து ராமர், சீதா, அனுமன் ஆகியோருக்குரிய பாடல்களைப் பாடி வழிபடுவது நல்லது. ராமபிரான் வழிபாடு நம்பிக்கையை நிறைவேற்றி வைக்கும்.

  ×