என் மலர்

  கடகம் - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்

  கடகம்

  ராகுகேது பெயர்ச்சி பலன்கள் - 2022

  12.4.2022 முதல் 30.10.2023 வரை

  பத்தில் ராகு/ நான்கில் கேது

  அன்பான கடக ராசியினரே ராகு/கேதுக்கள் 10,4ம் இடத்திலும், குருபகவான் 9,10ம் இடத்திலும் சனி பகவான் 7,8ம் இடங்களில் சஞ்சரிக்கிறார்.

  பத்தாமிட ராகுவின் பலன்கள்:கடந்த ஒன்றை ஆண்டுகளாக லாப ஸ்தானத்தில் சஞ்சரித்த ராகு தொடர்ந்து உங்களுக்கு நட்புக் கரம் நீட்டுகிறார். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தொழிலை இழுத்து மூடிவிட்டுச் செல்லும் நிலையில் இருந்தவர்கள் கூட நல்ல மாற்றத்தைக் காண்பார்கள்.

  கடக ராசியினர் பல்வேறு தொழில் தந்திரங்களை பயன்படுத்தி தொழிலில் புதிய சாதனை படைக்கப் போகிறார்கள்.

  நியாயம், தர்மத்திற்கு கட்டுப்பட்டு தொழில் நடத்தியவர்கள் கூட அதை காற்றில் பறக்க விட்டு குறுக்கு வழியில் தொழிலை வளர்க்க விரும்புவார்கள். சுய தொழில் செய்து கொண்டு இருப்பவர்களுக்கு மிகச் சிறப்பான நல்ல நேரம். உற்பத்தி, கொள்முதல் அதிகரித்துக் கொண்டே இருக்கும். பொருளாதாரத்தில் மிகப் பெரிய மாற்றம் உண்டாகும்.

  பணப்புழக்கம் சரளமாக இருக்கும். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் உதவியுடன் ராகு பகவான் பல்வேறு பாக்கிய பலன்களை வாரி வழங்கவுள்ளார்.

  ராசிக்கு 7, 8ம் இடத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்கிறார். அஷ்டம ஸ்தானத்தில் சனி பகவான் ஆட்சி பலம் பெற்றவுடன் அஷ்டமச் சனி ஆரம்பமாகிறது. சனி பகவானால் சிலருக்கு விபரீத ராஜ யோகமும் ஏற்படப் போகிறது.ராகு மேஷ ராசியில் உள்ள நட்சத்திரப் பாதங்களான கிருத்திகை, பரணி, அசுவினி நட்சத்திரங்களில் மூலம் ராசியை கடக்கிறார். அதனால் ஏற்படப் போகும் பலன்களைப் பார்க்கலாம்.

  12.4.2022 முதல்14.6.2022 வரை ராகுவின் கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள்:கிருத்திகை சூரியனின் நட்சத்திரம். சூரியன் கடகத்திற்கு தனாதிபதி. பொருளாதாரத்தில் தன்னிறைவு ஏற்படும். பணவரவில் இருந்த தடை, தாமதம் சீராகும். பணப் பற்றாக்குறைகள் அகலும். எதிர் பாராத தனவரவினால் பொருளாதார மாற்றமும் ஏற்றமும் மன மகிழ்வை தரும்.அரசு சார்ந்த நிதி நிறுவனங்கள், தனியார் நிதி நிறுவனங்கள் வீட்டிற்கு தேடி வந்து கடன் கொடுப்பார்கள். ராகு இரண்டாம் அதிபதியின் நட்சத்திரத்தில் பயணிப்பதால் அசட்டுத்தனமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டு கர்மாவை அதிகரிக்க நேரும்.

  எனினும் கொடுத்த வாக்கை காப்பாற்ற அதிகமாக போராட நேரும். உங்களின் வார்த்தையின் கடுமையால் பாதிக்கப்பட்டவர் உங்களை சபிக்கலாம். உங்களின் பேச்சால் ஒருவர் கோபப்பட்டால் காலப்போக்கில் மன்னிப்பு கேட்டு சரி செய்து விடலாம். சாபம் வாங்கினால் சரி செய்வது மிகவும் கடினம் என்பதால் கவனம் தேவை.

  15.6.2022 முதல் 20.2.2023 வரை ராகுவின் பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள்:பரணி சுக்ரனின் நட்சத்திரம். சுக்ரன் கடகத்திற்கு 4,11ம் அதிபதி. எந்த மாயமும்,எதிர்ப்பும் இல்லாமல் தாய் வழி பூர்வீகச் சொத்துகள் எளிமையாக உங்கள் பெயருக்கு மாறிவிடும். சிலருக்கு வெளியூர், வெளிநாட்டில் வசிக்கும் உங்களின் மூத்த சகோதரர், சகோதரிகள் பூர்வீகச் சொத்தை உங்களுக்கு விட்டுக் கொடுப்பார்கள். சிலரின் பூர்வீகச் சொத்துக்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டு அதன் மூலம் பெரிய பணம்கிடைக்கும். சிலருக்கு பிள்ளை இல்லாதவர்களின் அதிர்ஷ்ட சொத்து கிடைக்கும். அழகு, ஆடம்பர மற்றும் அதிர்ஷ்டப் பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். தேவையற்ற ஆடம்பரப் பொருட்களை மீடியாக்களில் வரும் விளம்பரங்களைப் பார்த்து குவித்து ஏமாறுவீர்கள்.

  அநாவசிய ஆடம்பர செலவு செய்விட்டு பின்னர் சேமிப்பை பற்றி சிந்திப்பீர்கள். தாயின் ஆஸ்தியும், ஆரோக்கியமும் கிடைக்கும். தாயின் ஆயுள், ஆரோக்கியம் சிறக்கும்.

  21.2.2023 முதல் 30.10.2023 வரை ராகுவின் அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள்:கோட்சாரத்தில் ராசிக்கு 4ல் சஞ்சாரம் செய்யும் கேதுவின் நட்சத்திரத்தில் ராகு பயணம் செய்யும் காலம். அதாவது ராகுவும்கேதுவும் தங்களின் நட்சத்திரங்களை பரிமாறிக் கொண்டு பயணிக்கும் காலத்தில் உங்கள் அறியாமை மற்றும் அவசர புத்தியால் சட்டச் சிக்கல் மற்றும் வாஸ்து குற்றம் நிறைந்த வீடு, மனைகளை வாங்க நேரலாம்.

  குறைந்த மதிப்புள்ள சொத்தை அதிக விலை கொடுத்து வாங்கலாம். இரண்டு சக்கரவாகனம் வைத்து இருப்பவர்கள் நான்கு சக்ர வாகனங்கள் வாங்கி மகிழ்வார்கள். மின்சாதனங்கள், வாகனங்கள் அடிக்கடி பழுது ஏற்படும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது மிகுந்த எச்சரிக் கையுடன் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு கல்வியில் ஆர்வம் குறையும்.

  நான்காமிட கேதுவின் பலன்கள்:நான்காம் இடம் என்பது சுக ஸ்தானம். பொதுவாக கேது என்பவர் தடை தாமத்தை ஏற்படுத்துபவர். நிதானமற்ற வேகத்துடன் செல்பவர்களுக்கு விவேகம் எனும் தடை தாமதத்தை கொடுத்து வாழ்வின் எதார்த்தத்தை புரிய வைப்பார். விதிக்கு மீறிய சுக போக வாழ்க்கைக்கு ஆசைப்படக் கூடாது என்று உணர்த்துவார். நியாயம் மற்றும் தர்மமே எத்தனை பிறவி எடுத்தாலும் வரப்போகும் சொத்து என்பதை புரிய வைப்பார்.

  தற்போது நான்காமிடத்தில் கேது இருப்பதால் சொத்து வாங்குதல் , விற்றல் தொடர்பான செயல்களில் அதிக கவனம் தேவை. கணப்பொழுதில் தவறான பத்திரப் பதிவு, தவறான விலை நிர்ணயம், பூமி தோஷம் உள்ள இடம் விருத்தியில்லாத வீடு போன்ற வில்லங்கத்தில் மாட்டி மீள முடியாத விரயத்தை தந்து விடும். சிலருக்கு ஆரோக்கியத்தில் பாதிப்பு உண்டாகலாம்.கேது துலாம் ராசியில் உள்ள விசாகம், சுவாதி, சித்திரை நட்சத்திரங்கள் மூலம் தன் பயணத்தை செலுத்துகிறார்.

  12.4.2022 முதல் 17.10.2022 வரையான கேதுவின் விசாகம் நட்சத்திர சஞ்சார பலன்கள்:விசாகம் குருவின் நட்சத்திரம். குரு கடகத்திற்கு 6,9ம் அதிபதி. கோட்சார குரு 9ல் ஆட்சி பலம் பெறுகிறார்கள். தந்தை மற்றும் தந்தை வழி முன்னோர்களின் ஆசியும் ஆஸ்தியும் கிடைக்கும்.

  தடைபட்ட பித்ருக்கள் பூஜை செய்து பாக்கிய பலனை அதிகரிக்க ஏற்ற நேரம். சிலர் ஆன்மீக நாட்ட மிகுதியால் கோவில் கோவிலாக ஏறி இறங்குவார்கள். சிலர் கோவில் திருப்பணிகள் அல்லது உலவாரப் பணிகளில் கலந்து கொள்வார்கள். தந்தைக்கு தடைபட்ட அரசின் உதவித் தொகை கிடைக்கும். தந்தையின் ஆயுள் ஆரோக்கியம் அதிகரிக்கும். தந்தைக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். சில குழந்தைகள் தாத்தா, பாட்டி வீட்டில் வளர்வார்கள் அல்லது தந்தை தொழில் நிமித்தம் அல்லது ஏதேனும் காரணத்திற்காக தந்தை குடும்பத்தை பிரிந்து வாழ நேரும்.

  18.10.2022 முதல் 26.6.2023 வரையான கேதுவின் சுவாதி நட்சத்திர சஞ்சார பலன்கள்:கோட்சாரத்தில் 10ம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவின் நட்சத்திரத்தில் கேது பயணிக்கும் மன நிறைவான சுகபோக வாழ்வில் ஆசை ஏற்படும். அதற்காக கடுமையாக போராட நேரும் . எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெறும் தைரியத்தையும் தருவார்.கடக ராசியினரை எதிர்த்து யாரும் நிற்க முடியாத வகையில் பல்வேறு தொழில் தந்திரங்களை கற்றுக் கொடுப்பார். துரும்பைக் கூட தூணாக மாற்றும் அளவிற்கு தொழில் அனுபவங்கள் வளரும். ஜாதகரின் பல்வேறு வாய்ப்புகளுக்கு உறுதுணையாக இருந்தால் கூட பெயருக்கு ஒரு கலங்கமும் ஏற்படும்.

  27.6.2023 முதல் 30.10.2023 வரை கேதுவின் சித்திரை நட்சத்திர சஞ்சார பலன்கள்:சித்திரை செவ்வாயின் நட்சத்திரம். செவ்வாய் கடகத்திற்கு 5, 10ம் அதிபதி கடகத்திற்கு செவ்வாய் 5, 10ம் அதிபதி. 5ம் இடம் பதவி ஸ்தானம், புத்திர ஸ்தானம். 10ம் இடம் கர்ம ஸ்தானம் என்பதால் உத்தியோகம், தொழில் நிமித்தமாக பூர்வீகத்தை விட்டு வெளியேற நேரும். உங்களின் சமுதாய இன வளர்ச்சிக்கு உதவி செய்து உங்களை வெளியுலகத்திற்கு காட்டி முக்கிய பிரமுகராக அடையாளம் காட்ட முனைவீர்கள். சிலருக்கு கௌரவப் பதவி கிடைக்கும். புகழ், அந்தஸ்து உயரும்.சில கடக ராசியினருக்கு அரசியல் ஆர்வம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு எதிர்பாராத அரசியல் பதவிகள் தேடி வரும். செல்வாக்கு உயரும் .குழந்தை பாக்கியத்திற்கு தவம் இருந்தவர்களுக்கு கர்மம் செய்ய ஆண் வாரிசு கிடைக்கும்.

  ராசிக்கு குருப் பார்வை இருப்பதால் இந்த ஓராண்டு காலம் யாராலும் உங்களை அசைக்க முடியாது.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×