என் மலர்
கடகம்
2026 தை மாத ராசிபலன்
கடக ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, விரய ஸ்தானத்தில் குரு பகவான் வீற்றிருக்கிறார். அஷ்டமத்தில் சனியும், ராகுவும் பலம் பெற்று இருக்கிறார்கள். சப்தம ஸ்தானத்தில் கூட்டுக்கிரக யோகம் உள்ளது. எனவே விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றம் உருவாவதற்கான அறிகுறி தென்படும். வீண் விரயங்களில் இருந்து விடுபட சுபவிரயங்களை செய்வது நல்லது. இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது, வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது, வாசல் தேடி வந்த வரன்களை பரிசீலனை செய்வது போன்றவற்றில் கவனம் செலுத்தலாம். சனீஸ்வரர் வழிபாட்டினால் தடைகள் அகலும்.
வக்ர குரு
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்திலேயே இருக்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது, நன்மை - தீமை இரண்டும் கலந்தே நடைபெறும். 6-க்கு அதிபதி 12-ம் இடத்தில் வக்ரம் பெறுவதால் 'விபரீத ராஜயோகம்' ஏற்படும். எனவே திட்டமிடாமல் செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். திடீர், திடீரென எண்ணங்களும், செயல்களும் மாறும். குருவின் பார்வை 4, 6, 8 ஆகிய இடங்களில் பதிவதால் தாய்வழி ஆதரவு கிடைக்கும். நோய் நொடியில் இருந்து விடுபடுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு. மற்றவர்களுக்காக ஏற்றுக் கொண்ட பொறுப்பை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். உங்களுக்கு இடையூறு செய்த உயர் அதிகாரிகள் மாற்றப்படுவர். தொழிலுக்குத் தேவையான மூலதனம் நண்பர்கள் வாயிலாகக் கிடைக்கும். சென்ற மாதத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சி வெற்றி தரும். 'வைத்திருக்கும் வாகனத்தால் பிரச்சனை அதிகம் வருகின்றதே.. அதை விற்று விடலாமா?' என்று யோசிப்பீர்கள்.
கும்ப - புதன்
உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 29.1.2026 அன்று அஷ்டமத்தில் மறைவது யோகம்தான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப, இக்காலம் ஒரு பொற்காலமாக மாறப்போகிறது. ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். புதிய திருப்பங்கள் பலவற்றையும் சந்திக்கும் நேரம் இது. சகோதர வழியில் ஒற்றுமையும், பாசப்பிணைப்பும் ஏற்படும். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு எதிர்பாராதவிதத்தில் நல்ல பொறுப்புகள் கிடைக்கும்.
கும்ப - சுக்ரன்
மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரன், 7.2.2026 அன்று கும்ப ராசிக்குச் செல்கிறார். இக்காலத்தில் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். பெற்றோரின் உடல்நலத்தில் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கல்களில் விழிப்புணர்ச்சி தேவை. வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சனைகள் ஏற்படலாம். அலுவலகப் பணிகளில் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காது. உத்தியோக மாற்றம் செய்ய நினைத்தால் அதுவும் கைகூடாது. வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். எதிர்நீச்சல் போட்டு முன்னேற வேண்டிய நேரம் இது. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வந்துசேரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு ஏற்றமும், இறக்கமும் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பிற்குரிய அங்கீகாரம் கிடைக்காது. கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கைநழுவிச் செல்லலாம். மாணவ - மாணவிகளுக்கு மறதி அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் திருப்தி தர, விட்டுக் கொடுத்துச் செல்வது உத்தமம்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 23, 24, 25, 28, 29, பிப்ரவரி: 3, 4, 9, 10.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிரே.






