என் மலர்

  கடகம் - குருப்பெயர்ச்சி பலன்கள்

  கடகம்

  குருப்பெயர்ச்சி பலன்கள் - 2022

  தாய்மை பண்பு நிறைந்த கடக ராசியினரே ராசிக்கு 9ல் குருவும், சனி 7,8ம் இடத்திலும், ராகு/கேதுக்கள் 10/4ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.

  ஒன்பதாமிட குருவின் பொது பலன்கள்: ஒன்பதாமிடம் என்பது பாக்கிய ஸ்தானம். 6,9ம் அதிபதி குரு 9ல் ஆட்சிபலம் பெறுகிறார்.9ம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கு 7, 8ம் அதிபதி சனியின் பார்வை 17.1.2023 வரை உள்ளது. 9ம் இடத்திற்கு சனி, குரு சம்பந்தம் இருப்பதால் பலர் ஜீவனத்திற்காக இடம் பெயரலாம். 6ம் அதிபதி 9ல் ஆட்சி பலம் பெறுவதுடன் சனிப் பார்வை இருப்பதால் சுபமும் அசுபமும் சேர்ந்த பலனே நடக்கும்.

  குருவின் 9ம் பார்வை 6ம் இடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்திற்கு உள்ளது. பலர் 6ம்மிடம் என்றால் பொருள் கடன் என்று நினை க்கிறார்கள். பிறவிக்கடன், பொருள் கடன் சேர்ந்தது தான் 6ம் பாவகம். குருவின் 9ம் பார்வைக்கு பாக்கிய பலன்களை அதிகரிக்கும்சக்தி உள்ளது. மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் கர்மாவோடு தொடர்புடையது.

  பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள், மனைவி, மக்கள், நண்பர்கள் மற்றும் உற்றார் உறவுகளிடம் ஒன்றை நாம்பெற்றுக் கொள்கிறோம்,அல்லது இழக்கிறோம். இந்த கர்மாவின் தொடர்ச்சியில் சில உறவுகள் கர்ம பந்தமாகிறது. பல உறவுகள் கர்ம வினையாகிறது. அடுத்தவருக்கு ஏதேனும் ஒரு உபகாரம் செய்கிறோம்.சில சமயங்களில் ஏமாற்ற ப்படுகிறோம். பல சமயங்களில் ஏமாற்றுகிறோம்.சிலருக்கு நல்லது செய்கிறோம்.பலரிடமிருந்து அளவுக்கு அதிகமாக நன்மைகளைப் பெற்றுக் கொள்கிறோம்.

  இந்த கொடுக்கல் வாங்கலே ருண பந்தம் எனப்படுகிறது. ருணம் என்றால் கடன். பொருள் கடன் மட்டுமல்ல. ஒருவரிடம் இருந்து பெற்ற அன்பும் உதவியும் கூட கடன் தான். ஒருவரிடம் பெற்ற உதவி மற்றும் அன்பிற்கு பிரதி உபகாரம் செய்யாமல் இருந்தால் ருண பந்தம் கர்ம வினையாக மாறி ஜனன கால ஜாதகத்தில் பாக்கியஸ்தானம் எனும் ஒன்பதாமிடம் பலம் இழக்கும்.

  குருவின் 9ம் பார்வை 6ம் இடத்திற்கு கிடைக்கும் இந்த காலத்திற்கு பெற்றோர்கள், தாத்தா, பாட்டி வாழ்ந்து கொண்டுஇருந்தால் அவர்களுக்கு தேவையான உங்களால் முடிந்த உதவிகளைச் செய்து உங்களது உணர்வுகளை சாந்தமாக வெளிப்படுத்துங்கள், அவர்களின் நல்லாசிகளைப் பெறுங்கள். பெற்றோர்கள் மறித்த பிறகு எவ்வளவு பித்ருக்கள் பூஜை செய்தாலும் கிடைக்காத பாக்கிய பலன் ஒரு நொடியில் கிடைத்துவிடும்.

  பெற்றோர்கள் வாழ்ந்து மறைந்திருந்தால் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது குறிப்பாக விடியற்காலை 5 - 6க்குள் மானசீகமாக பேசுங்கள். நல்லாசிக்காக ஆத்மார்த்தமாக வழிபடுங்கள். அடுத்த நொடியில் உங்கள் குறைகள் பரிசீலிக்கப்படும். உங்களுக்கு பிறவி கொடுத்தவர்களுக்கு நீங்கள் செய்ய வேண்டிய பிரதி உபகாரம் தீரும்.

  குருவின் 9ம் பார்வை 6ம் இடத்திற்கு இந்த கால கட்டத்தில் முன்னோர்களுக்கு முறையான பித்ருக்கள் பூஜை செய்து வழிபட பிறவிக்கடன் மற்றும் பொருள் கடன் தீரும். கடன் பெற்றவர் திருப்பிச் செலுத்த இயலாத சூழ்நிலையில் இருந்தால் கால அவகாசம் கொடுங்கள். மிரட்டி தற்கொலைக்கு அல்லது தலைமறைவாக காரணமாக இருக்காதீர்கள். உண்மையில் கொடுக்க கூடிய சந்தர்ப்பம் இருந்தும் ஏமாற்றுபவர்களுக்கு காலம் பதில் சொல்லும்.

  5ம் பார்வை பலன்கள்:குருவின் 5ம் பார்வை ராசிக்கு இருப்பதால்இயற்கையிலேயே அழகான நீங்கள் மேலும் அழகு பெறுவீர்கள். உங்களுக்கு என்று தனி கொள்கை வைத்து அதன் அடிப்படையில் செயல் படுவீர்கள். சட்ட திட்டத்திற்கு இணங்கி நடப்பீர்கள். தங்களின் தோற்றம், செயல்பாடுஆகியவற்றில் மாற்றம் ஏற்படும். நடை, உடை, பாவனைகளில் கம்பீரம் ஏற்படும். மிடுக்கான தோற்றம் ஏற்படும். தடை பட்டசெயல்கள் வெகு விரைவில்செயலாக்கம் பெறும். உங்களின் செயல்பாடுகள் வியக்க தக்க வகையில் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். பல்வேறுஅனுகூலமானபலன்கள் நடைபெறும்.உங்களுடைய தகுதி, திறமைஉயரும். சமூதாய அங்கீகாரம்ஏற்படும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். மாற்றங்களும் ஏற்றங்களும் வீடு தேடி வரும்.

  7ம் பார்வை பலன்கள்: குருவின்7ம் பார்வை 3ம் இடமான சகாய ஸ்தானத்தில் பதிகிறது.அனைத்து விதமான தடைகளும் தகர்ந்து முன்னேற்றத்திற்கான பாதை தென்படும். உங்களின் முயற்சிகள் தக்க சமயத்தில் உங்களுக்கு கை கொடுக்கும். உங்கள் முயற்சிகளையும், உழைக்கும் ஆற்றலையும் பல மடங்கு உயர்த்திக் கொண்டு முறையாக பயன்படுத்த ஏற்ற காலம். எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும்.உடன் பிறந்த சகோதர, சகோதரிகளிடம் இருந்தகருத்து வேறுபாடு மறையும். உடன் பிறந்தவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் செல்வச் செழிப்புடன் நன்றாக இருப்பார்கள். சகோதரர் தொழில் அல்லது உத்தியோகத்திற்கு பூர்வீகத்தை விட்டு வெளியேறலாம்.வேலையில் தொழிலில் இடமாற்றம் உண்டாகும். சிலர் வீடு மாற்றம் செய்யலாம். சிலர் வாடகை வீட்டில் இருந்து சொந்த வீடு கட்டி குடியேறலாம்.

  9ம் பார்வை பலன்கள்: குருவின் 9ம்பார்வை 5ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பதிகிறது. குருவின் பார்வை படும் இடம் பூரிப்பாகும். உங்களைப் பிரிந்த பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொண்டு மீண்டும் இல்லம் திரும்புவார்கள். அரசு உத்தியோகத்தில் பணி நிரந்தரமாகாதவர்களுக்கு பணி நிரந்தரமாகும். கவுரவப் பதவிகள், விருதுகள் கிடைக்கும். ஆன்மீகத் தொண்டில் ஆர்வம் அதிகரிக்கும். ஆன்மீக குருமார்களின் நல்லாசி கிடைக்கும். ஆன்மீக பயணங்கள் அதிகரிக்கும்.

  வேலை நிமித்தமாக வெவ்வேறு ஊர்களில் வசித்த கணவன், மனைவி இப்பொழுது தம்பதியராக ஒன்றாகச் சேர்ந்து மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தும் நேரம் வந்துவிட்டது.அடமானத்தில் இருந்த நகைகள் மீண்டு வரும். புதியஅணிகலன்கள், அழகு ஆடம்பரப்பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவனுக்கோ, மனைவிக்கோதிடீர் அதிர்ஷ்டம், பெரும் பணம்போன்றவைலாட்டரி, பங்குச் சந்தை, உயில் மூலம் ஆதாயம் கிடைக்கும்.சகோதர, சகோதரிகள் அல்லது பிள்ளைகளின் திருமணத்தை முன் நின்று விமரிசையாக நடத்துவீர்கள். பாகப் பிரிவினைகள் சுமுகமாகும். எதிர்பாலின நட்பு கிடைக்கும். மகப்பேறு கிடைக்காதவர்களுக்கு குல தெய்வ அருளால் ஆண் குழந்தை பிறக்கும். வீடு, வாகன யோகம் கிட்டும். அவரவர் வயதிற்கும், தசா புக்திக்கும் ஏற்ற அனைத்து சுப நிகழ்வுகளும் நடக்கும்.

  குருவின் வக்ர பலன்:29.7.2022 முதல் 23.11.2022 வரை

  உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரமடையும் காலத்தில் உங்கள் ஆற்றலையும் திறமையையும் பார்த்து மற்றவர்கள் வியப்பார்கள். மனதை ஆட்டிப்படைத்த இனம் புரியாத வேதனைகள் மறையும்.உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களிடம் சில பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். பிறருக்கு பொறுப்பு கையெழுத்திட்ட ஜாமீன் தொகை வந்து சேரும். புதிய திருப்பங்கள் ஏற்படும். தாய், தந்தை உடன் பிறப்புகளின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் நிலவிய இன்னல்கள் அகலும் ராசிக்கு சனி பார்வையும் இருப்பதால் ஒரு சிலருக்கு முன்னோர்களின் பரம்பரை வியாதி வந்து மன சஞ்சலத்தை அதிகரிக்க செய்யும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.

  திருமணம்:குருப் பார்வை ராசிக்கு இருப்பதால் பல வருடங்களாக திருமணத்தடையை சந்தித்த கடக ராசியினருக்கு திருமணம் நடந்து முடியும். ஒரு சிலருக்கு சட்ட சிக்கலான இரண்டாம் திருமணமும் நடக்கும். 2023ல் அஷ்டமச் சனி ஆரம்பமாகப் போவதால் 2022க்குள் திருமணத்தை நடத்தி முடிப்பது நல்லது.

  பெண்கள்:குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் நிலவிய பற்றாக்குறை பட்ஜெட் உபரி பட்ஜெட்டாகும். உங்களை புரிந்து கொள்ளாத குடும்ப உறுப்பினர்கள் உங்கள் நல்ல குணம் அறிந்து சரணடைவார்கள்.

  பரிகாரம்: பொதுவாக கர்ம காரகன் சனி கடக ராசிக்கு அஷ்டமாதிபதி என்பதால் இயல்பிலேயே பித்ரு தோஷ தாக்கம் மிகுதியாக இருக்கும். கோட்சார குரு 9ல் ஆட்சி பலம் பெற்று இருக்கும் இந்த கால கட்டத்தில் முறையான முன்னோர் வழிபாடு செய்து வர 2023 ஜனவரியில் ஏற்படப் போகும் அஷ்டமச் சனியால் பெரிய பாதிப்பு இருக்காது.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×