என் மலர்
மேஷம் - சோபகிருது வருட பலன்
மேஷம்
சோபகிருது வருட பலன் 2023
தொட்டது துலங்கும்!
முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் மேஷ ராசியினருக்கு தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.இந்த சோப கிருது வருட தமிழ் புத்தாண்டில் அனைத்து வருட கிரகங்களும் மேஷ ராசிக்கு சாதகமாக உள்ளது. திருக்கணித பஞ்சாங்கப்படி ஏப்ரல் 22ல்நடக்கப் போகும்
குருப்பெயர்ச்சியில் குருபகவான் ராசிக்குள் நுழைகிறார்.ஜனவரி 17ல் நடந்த சனிப்பெயர்ச்சியில்சனிபகவான்லாப ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுகிறார்.அக்டோபர் 30, 2023 வரை ராசி ஏழாமிடத்தில் நிற்கும் ராகு/கேதுக்கள் அதன் பின் 12, 6ம்மிடம் செல்கிறார்கள். எந்த செயலையும் தள்ளி வைக்காமல் உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். நினைத்ததை சாதித்துவெற்றியடைவீர்கள். அடுத்தவரின் தயவை எதிர்பார்க்காமல் எல்லா செயல்களிலும் நேரடியாக செயல்பட்டு உங்களுக்கு என்று தனி முத்திரை பதிப்பீர்கள்.எந்த இடத்திலும் உங்கள் தனித்தன்மை மிளிரும் படி செயல்படுவீர்கள்.
எவராலும் அடக்க முடியாத சக்தி கொண்டவர்களாக எதிரியை வெல்வீர்கள். புத்திர பிராப்பதம், அதிர்ஷ்டம், குல தெய்வ அனுகிரகம் கிடைக்கும். பித்ரு தோஷம் நிவர்த்தியாகும்.கடன், நோய் நிவர்த்தி, சுப விரயம் வெளிநாட்டு பயணம் ஏற்படும்.
தொழில் உத்தியோகத்தில் ஸ்திர தன்மை உண்டாகும். தொழில் வியாபார ரீதியான போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் வர வேண்டிய வாய்ப்புகள் தடைபடாது.
இது மேஷ ராசிக்கு வாழ்வியல் மாற்றத்தை வழங்கக் கூடிய சுப ஆண்டாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
குடும்பம், பொருளாதார நிலை: கொடுத்த வாக்கையும் ,நாணயத்தையும் காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் தீர்க்க முடியாது நிலவிய பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.தந்தை மகள் ஒற்றுமை பலப்படும். உங்கள் குடும்ப விவகாரங்களில் தலையிட்டவர்கள் தாமாக விலகுவார்கள்.நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கால் சொல்வாக்கு எடுபடும்.உறவுகளின் பகை மறையும்.உடல் நிலையில் முன்னேற்றம், மன நிலையில் மகிழ்ச்சி உண்டாகப் போகிறது.
கடந்த கால மனக்கசப்புகள் விலகி நிம்மதி பிறக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உள்ளது. ஒரு பெரும் பணம் சொத்து விற்பனையில் கிடைக்கும். பற்றாக்குறை வருமானத்தால் கவலை அடைந்தவர்களுக்கு உபரி வருமானம் உண்டாகும்.நிலையான தொழில் வளர்ச்சியால் கணிசமான பணம் கைகளில் புரளும்.கடன் சுமை தீரும். பூர்வீகச் சொத்துக்கள் உங்களுக்கு சுமூகமான பாகப்பிரிவினையில் கிடைக்கும்.திருமண வயதில் இருக்கும் பிள்ளைகளின் திருமண முயற்சி சாதகமாகும்.வழக்குகளில் வெற்றி உண்டாகும். திருமணத் தடை அகலும்.
பெண்கள்: பெண்களுக்கு பொருளாதாரப் பற்றாக்குறை அகலும்.விலை உயர்ந்த ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேறு வேறுஊர்களில் பணிபுரிந்த தம்பதிகள் ஒரே இடத்தில் பணிபுரியும் வகையில் இடமாறுதல் கிடைக்கும். பணிபுரியும் பெண்களின் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். உங்களின் முயற்சிக்கு கணவரின் ஆதரவும், உதவியும் கிடைக்கும்.ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
அசுவினி: காரிய சித்தி உண்டாகும் காலம் உடலும், மனமும் பொலிவு பெறும். ராசியில் குருபகவான் சஞ்சரிப்பதால் ஆன்ம பலம் பெருகி உடலும், மனமும் பொலிவு பெறும். தைரியம், தெம்பு அதிகமாகும். பிள்ளைகளால் நன்மையும், பெருமையும் உண்டாகும். அவர்களின் எதிர்காலம் பற்றிய பய உணர்வு அகலும். குடும்பத்தேவையைநிறைவேற்றுவீர்கள். தொழிலில் அபிவிருத்தி உண்டாகும்.பணவரவு தாராளமாக இருக்கும். கடன் பிரச்சனைகள் தீரும். பொன், பொருள் வாங்கும் பாக்கியம் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் தந்தையால் பொருள் இழப்பு உண்டாகலாம். முன்னோர்கள் வழிபாட்டிற்கு உரிய பலன் கிடைக்கும் காலம். அரசு வழி ஆதாயம் கிடைப்பதில் நிலவியதடை, தாமதம் அகலும்.தினமும் விநாயகர் அகவல் படிக்கவும்.
பரணி: எதிர்பார்த்த முன்னேற்றம் எளிதில் கிடைக்கும் காலம். ராசியை விட்டு ராகு நகர்ந்த பிறகு உங்கள் செயல்பாட்டில் மற்றவர்களின் குறிக்கீடு இருக்காது. தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதமாகும். தாயின் உடல் நலம் சீராகும். உயர் கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். வாழ்க்கைத் துணையின் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கும். உடன் பிறந்தவர்களுடன் நல்லுறவு ஏற்படும். இடமாற்றம், ஊர் மாற்றம், வேலை மாற்றம் என நிம்மதியைத் தரும் மாற்றங்கள் உண்டு. ஒரு சிலருக்கு கவுரவப் பதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிலருக்கு தொழில் செய்யும் எண்ணம் உருவாகும்.
பூர்வீகச் சொத்தை கொடுத்து விட்டு புதிய வீடு வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் ரீதியான அனுகூலம் உண்டாகும். தினமும் மகாலட்சுமி அஷ்டகம் படிக்கவும்.
கிருத்திகை 1 : நிம்மதியான காலம்.நினைத்ததை நினைத்தபடியே முடிப்பீர்கள். லட்சியங்களும் கனவுகளும்நிறைவேறும். தன்னம்பிக்கையும்தைரியமும் அதிகரிக்கும். அனைத்து தடைகளும் விலகி நல்ல வாழ்வியல் மாற்றங்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். சகோதரரின் ஆதரவு மகிழ்ச்சியை அதிகரிக்கும். பிள்ளைகளால் நிம்மதி உண்டாகும். எதிர்பார்த்த நல்ல வேலை கிடைக்கும். வாழ்க்கை துணைக்கு தாய் வீட்டுச் சீதனமாக பெரும் சொத்து கிடைக்கும். இழந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.
பெற்றோர் வழியில் இருந்த எதிர்ப்புகள் அகலும். சிலருக்கு வெளியூர் அல்லது வெளிநாட்டில் சென்று பிழைக்கும் எண்ணம் தோன்றும். தாயின் ஆரோக்கியம் சீராகும். தினமும் ஆதித்ய ஹ்ருதயம் கேட்கவும்.
பரிகாரம்:திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஸ்ரீ வாஞ்சியம், வாஞ்சிநாதர் கோவில் சென்று ஸ்ரீ வாஞ்சிநாதரையும், ஸ்ரீ மங்களாம்பிகையையையும் வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
சுபகிருது வருட பலன் - 2023
வீரமான மேஷராசியினரை இந்த தமிழ் புத்தாண்டு உங்கள் வாழ்க்கையை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்ல நல்வாழ்த்துக்கள்.
குரு பகவான் ஆண்டு முழுவதும் 12ம் இடமான விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ராகு பகவான் ஜென்ம ராசியிலும் கேது பகவான் ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். 17.1.2023 வரை தொழில் காரகன் சனி 10ல் ஆட்சி பலம் பெறுகிறார்கள். இதனால் எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெரும் தைரியம் உண்டாகும்.சுகபோக வாழ்க்கை கிடைக்கும்.உங்களின் தனித் திறமைகள் வெளிப்படும். லௌகீக நாட்டம் அதிகரிக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மேன்மையான காலம். சிலர் வெளி மாநிலம் , வெளிநாட்டிற்கும் இடம் பெயரலாம். படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும் அற்புதமான தமிழ்புத்தாண்டாக இந்த வருடம் அமையும்.
குடும்பம்: இரண்டாமான குடும்ப ஸ்தானத்திற்கு கோட்சார கிரகங்கள் சாதமான நிலையில் இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். பெற்றோர்களுக்கு பிள்ளைகளின் அனுசரணை உண்டு. புத்திர பிராப்தம்உண்டாகும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டு. பிள்ளைகளுக்கு தொழில், உத்தியோகம், திருமணம், குழந்தை, வீடு வாகன யோகம்போன்ற அனைத்து விதமான பாக்கியங்களும் உண்டாகும். பிள்ளைகளின் சுப காரியங்கள் கோலாகலமாக நடைபெறும்.
விரயாதிபதி குரு 12ல் ஆட்சி பலம் பெற்று இருப்பதால் வீட்டிற்கு அழகு, ஆடம்பர பொருட்களின் சேர்க்கை உண்டாகும். வீடு, வாகனம் போன்றவைகள் மூலம் சுப விரயம் உண்டாகும். கேது ராசிக்கு 7ல் சஞ்சரிப்பதால் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த அண்ணன், தம்பிகள் பிரிந்து தனிக் குடித்தனம் செல்லலாம். கூட்டுத் தொழில் செய்து வந்த குடும்பங்களில் சில பங்காளிகள் தொழிலை விட்டு விலகலாம். பாகப்பிரிவினையில் கருத்து வேறுபாடு உண்டாகலாம். நட்பு வட்டாரங்கள் விலகிச் செல்வது போன்ற மன உணர்வு வாட்டும்.
ஆரோக்கியம்:6,8ம் இடத்திற்கு குருப் பார்வை இருப்பதால் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாதிகளால் ஏற்பட்ட தாக்கம் குறையும்.ஆயுள் பயம் அகலும்.
திருமணம்:தற்போது ராசியில் நிற்கும் ராகுவும் 7ல் நிற்கும் கேதுவும் கோட்சார ரீதியான சர்ப்ப தோஷத்தை ஏற்படுத்துவதுடன் 7ம் இடத்திற்கு 17.1.2023 வரை சனிப் பார்வையும் இருப்பதால் திருமண முயற்சியில் சில தடை, தாமதங்கள் நிலவ வாய்ப்பு உள்ளது. 4ம் இடமான சுக ஸ்தானத்திற்கும், 8ம் இடமான மாங்கல்ய ஸ்தானத்திற்கும் குருப்பார்வை இருப்பதால் ஜனவரி 2023 க்கு மேல் திருமணம் கை கூடும்.
பெண்கள்:லௌகீக வாழ்வின் அனைத்து இன்பங்களையும் அனுபவிக்க தேவையான வசதி வாய்ப்புகளை ராகு கொடுப்பார். ராகு கொடுக்கும் பணவசதியை அனுபவிக்க விடாமல் தொழில் நிமித்தமாக தம்பதிகள் ஆளுக்கொரு ஊரில் அல்லது நாட்டில் வாழ வேண்டிய சூழலை கேது கொடுப்பார்.வேலைக்கு செல்லும் பெண்களின் வாழ்வாதாரம் உயரும். பல புதிய பெண் தொழில் முனைவோர்கள் உருவாகுவார்கள். குடும்ப உறவுகளின் ஒற்றுமை நிம்மதியை அதிகரிக்கும். வாழ்க்கையில் செட்டிலாகும் காலம்.பூர்வீகச் சொத்து,தாய்வழிச் சொத்து போன்றவற்றில் பாகப் பிரிவினை நடக்கும். ஆரோக்கியம் சீராகும். கடன் சுமை குறையும்.
மாணவர்கள்:4ம் இடத்திற்கு குருப் பார்வை இருப்பதால் சுமாராக படித்தவர்கள் கூட நல்ல மதிப்பெண் பெறுவார்கள். காலத்தின் அருமை உணர்ந்து பெற்றோர்கள் மற்றும்ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்று படிப்பில் கவனம் செலுத்த வெற்றி உங்களுக்கு கரம் கொடுக்கும். கல்வியில் தடை ஏற்பட்ட மாணவர்கள் மீண்டும் படிப்பைத் தொடர சாதகமான காலமாகும். உங்கள் லட்சியத்தை அடைய நவகிரகங்கள் உதவும்.
முதலீட்டாளர்கள்:சனி 10ல் ஆட்சி பலம் பெற்று இருக்கும் வரை முன்னேற்றம் இருக்கும். இதுவரையில் யோசிக்காத வகையில் விவேகமாக சிந்தனை செய்து தொழிலை வளப்படுத்துவர்கள். பல புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். புதிய கூட்டாளிகளை நம்பி அதிக முதலீடு செய்வதை தவிர்க்கவும். தொழில் அதிபர்களுக்கு அரசின் உதவி கிடைக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக உதவிக்கரம் நீட்டுவார்கள். நல்ல நம்பிக்கையானவிசுவாசமான வேலையாட்கள் கிடைப்பார்கள். பொதுவாக மேஷத்திற்கு குருவிரயாதிபதி என்பதால் ஆட்சி பலம் பெறுவது சிறப்பல்ல. கடுமையாக உழைக்க நேரும். பணம் கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. தொழிலை விரிவுபடுத்துவதை தவிர்க்க வேண்டும். தொழில் சிறப்பாக நடந்தாலும் பெரிய லாபம் கையில் நிற்காது என்பது தான் கிளைமாக்ஸ்.
அரசியல்வாதிகள்:அதிகாரப் பதிவுகள் தேடி வரும். கட்சி மேலிடம் உங்களுக்கு முக்கியத்துவம், பதவியும் கொடுக்கும். 7ல் கேது இருப்பதால் யாரையும் நம்பி ரகசியத்தை பகிரக்கூடாது. கூட்டணி கட்சிகள், நண்பர்கள் உங்களை எப்பொழுது வேண்டுமென்றாலும் கவிழ்த்தி விடலாம்.எதிர் கட்சியினருக்கு சாதகமானகாலம். பதவியை தக்க வைக்க ஊர் ஊராக அலைந்து விரயம் அதிகமாகும். சிலர் விரயம் என்றால் பொருள் விரயம் என்று தவறாக புரிந்து கொள்கிறார்கள். கவுரவம் குறைந்தாலும் விரையம் தான்.
கலைஞர்கள்:இதுவரை சமுதாய வெளியுலகத்திற்கு தெரியாமல் இருந்த உங்கள் திறமை பாராட்டப்படும் காலம். பல வருடங்களாக நீங்கள் எதிர்பார்த்த ஒரு அற்புத சந்தர்ப்பம் உங்களை தேடி வரும். அந்த வாய்ப்பு உங்களுக்கு பெரிய வாழ்வியல் மாற்றத்தை தரப் போகிறது. சிலர் காலத்தால் அழியாத படைப்புகளைப் படைத்து சாதனை படைப்பீர்கள்.வெளிநாட்டிற்கு சென்று படப்பில் கலந்து கொள்வீர்கள். அதிக அலைச்சல் இருக்கும்.போட்டி பொறாமைகள் அதிகமாக இருக்கும்.
விவசாயிகள்:விவசாயம் வெகு சிறப்பாக நடைபெறும். உற்பத்தி அதிக அளவில் இருக்கும். பயிர் விளைச்சல் அமோகமாக இருக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியம் உண்டு. 7ல் கேது இருப்பதால் பங்குதாரர் இல்லாத விவசாயமாக இருப்பது நல்லது பயிருடன் பணமும் வீடு வந்து சேரும்.உங்கள் விளைச்சலுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கும். பண வரவு சிறப்பாக இருந்தாலும் 12ல் குரு இருப்பதால்ஏராளமான செலவும் வரும். சிந்தித்து செயல்பட்டால் விரயத்தை குறைக்க முடியும்.
கவனமாக செயல்பட வேண்டிய காலம்
ராகு/கேது: 21.2.2023 முதல் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் ராகு பயணிக்கிறார்.18.10.2022 முதல் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது சஞ்சரிக்கிறார்.ராகுவும் கேதுவும் தங்கள் நட்சத்திரங்களை பரிமாறிக் கொண்டு பயணிக்கிறார்கள். இந்த கால கட்டத்தில் ராசி மற்றும் 7ம் இடத்தின் பாதிப்பு சற்று மிகைப்படுதலாக இருக்கும். நம்பியவர்களே நம்பிக்கை துரோகம் செய்யலாம் அல்லது உறவுகளுக்காக சூழ்நிலை கைதியாக வாழ நேரலாம். உண்மையானவர்கள் யார் துரோகிகள் யார் என அடையலாம் காணும் காலம். அடிக்கடி மின் சாதனங்கள் பழுதாகி விரயம் உண்டாகும்.
குரு:29.7.2022 முதல் 23.11. 2022 வரை கோட்சாரத்தில் ராசிக்கு 10ல் சஞ்சரிக்கும் சனியின் உத்திராடம் நட்சத்திரத்தில் குருபகவான்வக்ரம் அடையும் காலத்தில் தொழில் தொடர்பான தடாலடியானமுக்கிய முடிவுகளை தவிர்க்க வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களின் நட்பை தவிர்க்க வேண்டும். பணத்திற்கு ஆசைப்பட்டு சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.
பரிகாரம்:வயதான தம்பதிகளுக்கு இயன்ற உதவிகளைச் செய்து வர அனைத்து விதமான சுப பலன்களும் தேடி வரும்.
பொருளாதாரத்தில் ஏற்றம்
மேஷ ராசிக்கு சுக்ரன் 2,7ம் அதிபதி என்பதால் கோட்சார ராகு 15.6.2022 முதல் 20.2.2023 வரை ராகு சுக்ரனின் பரணி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் காலத்தில் பொருளாதாரத்தில் நல்ல மாற்றமும் ஏற்றமும் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். 6ம் இடத்திற்கும் குருப் பார்வை இருப்பதால் கடன் தொகை, எதிர்பார்த்த நபர்களிடம் இருந்து பண வரவு உண்டாகும். 8ம் இடத்திற்கும் குருப் பார்வை இருப்பதால் அதிர்ஷ்டத்தின் மூலமும் பொருள் வரவு ஏற்படும்.தொழில் மூலம் பணவரவு, லாபம் கிடைக்கும். ஆனால் விரய ஸ்தானத்தில் குரு ஆட்சி பலம் பெற்று இருப்பதால் கையில் பணம் தங்காது. சேமிப்புகள் கரையும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
பிலவ ஆண்டு பலன் :
பொருளாதார நிலை உயரும்
(அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்)
வளர்ச்சி தரும் வழிபாடு
சதுர்த்தியன்று விரதமிருந்து விநாயகப்பெருமானை வழிபடுங்கள். குறிப்பாக யோகபலம் பெற்ற நாளில், பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் வழிபாட்டை முறையாக செய்து வந்தால் முன்னேற்றம் கூடும். முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.
மேஷ ராசி நேயர்களே!
பிறக்கும் தமிழ்ப் புத்தாண்டு, பெருமைகளைக் குவிக்கும் ஆண்டாக அமையப் போகின்றது. ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய், தன ஸ்தானத்தில் சுக்ரன் வீட்டில் பரிவர்த்தனை யோகம் பெற்று இருக்கின்றார். 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு பகவான், லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். எனவே இந்த ஆண்டு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். மதிநுட்பத்துடன் செயல்பட்டு மக்கள் செல்வாக்கை பெறப்போகிறீர்கள்.
புத்தாண்டின் தொடக்கத்தில் கிரகங்கள் நிலைபெற்றிருக்கும் இடம் மற்றும் அவை பலமாக இருக்கின்றனவா? என்பதை முதலில் அறிந்து செயல்படுவது நல்லது. சுய ஜாதகம் பலம் பெற்றிருக்குமேயானால் கோட்சார ரீதியாக வரும் குறுக்கீடுகள் எதுவும் பாதிக்காது. நடைபெறும் திசாபுத்தி பலம் இழந்து இருக்குமேயானால் மனக்கசப்புகளும், மாற்றங்களும் வந்துசேரும். அதுபோன்ற அமைப்பு உள்ளவர்கள், யோகபலம் பெற்ற நாளில் அதற்குரிய தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள். இந்த அடிப்படையில் உங்கள் ராசியில் சூரியன், புதன், சுக்ரன், சந்திரன் ஆகிய 4 கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் இருந்து சர்ப்ப தோஷத்தை உருவாக்குகிறார்கள். தொழில் ஸ்தானத்தில் சொந்த வீட்டில் சனிபகவான் பலம்பெற்றிருக்கிறார். எனவே தொழில் வளம் சிறப்பாக இருக்கும். தொல்லை தந்த எதிரிகளின் பலம் குறையும். புதிய ஒப்பந்தங்கள் வந்து பொருளாதார நிலையை உயர்த்தும்.
2-ல் ராகு இருப்பதால் வருமானம் திருப்திகரமாகவே இருக்கும். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டி, குடும்ப உறுப்பினர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவீர்கள். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. இயல்பான வாழ்க்கையில் சில குறுக்கீடுகள் வரலாம். அதற்கு அஷ்டமத்தில் கேது சஞ்சரிப்பதே காரணம். எனவே, கணவன்-மனைவி இருவரும் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். ஆரோக்கியத் தொல்லைகள் இடையிடையே வந்து கொண்டே இருக்கும். ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவதன் மூலம் அதில் இருந்து விடுபட இயலும்.
குருவின் வக்ர இயக்கம்
புத்தாண்டு தொடக்கம் முதல் 13.9.2021 வரை, கும்ப ராசியில் அதிசார கதியில் குருபகவான் சஞ்சரிக்கின்றார். அதோடு 16.6.2021 முதல் வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். 14.9.2021 முதல் 12.10.2021 வரை, மகர ராசியில் குருபகவான் வக்ரம் பெறுகின்றார். எனவே, இந்த காலகட்டங்களில் நிதானமும், பொறுமையும் அதிகம் தேவைப்படும். எதிர்மறை சிந்தனைகள் அடிக்கடி வந்து அலைமோதும். அதைத் தவிர்த்து நேர்மறை சிந்தனைகளை வரவழைத்துக் கொள்ளுங்கள். பிடிவாத குணத்தால் சில பிரச்சினைகள் ஏற்படலாம். வருமானப் பற்றாக்குறையால், சேமிப்புகள் கரையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவிகள் அல்லது இடமாற்றங்கள் கைநழுவிச் செல்லலாம்.
குருப்பெயா்ச்சி காலம்
ஆண்டின் தொடக்கத்தில் கும்ப ராசியில் அதிசார கதியில் சஞ்சரிக்கும் குருபகவான், மீண்டும் வக்ர கதியில் மகர ராசிக்கு வந்து, அதன் பிறகு 13.11.2021 அன்று முறையாக கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதன்பிறகு 13.4.2022-ல் மீன ராசிக்குப் பெயர்ச்சியாகிச் செல்கின்றார். கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது அதன் பார்வை உங்கள் ராசிக்கு 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிகின்றது. குருவின் பார்வை 3-ம் இடத்தில் பதிவதால், வெற்றிகள் ஸ்தானம் புனிதமடைகின்றது. எனவே, வழக்குகளில் இருந்த தேக்கநிலை மாறும். தெளிவு பிறக்கும். பொதுநலத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
குருவின் பார்வை 7-ம் இடத்தில் பதிவதால், மனையில் மங்கல ஓசை கேட்கும். வாசல்வரை வந்து கைவிட்டுப் போன வரன்கள், மீண்டும் வந்து கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். வீடு கட்டும் முயற்சி, வெளிநாட்டு அனுகூலம், வாகன சேர்க்கை போன்றவை உருவாகும். 14-4-2022 அன்று குரு பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். உங்கள் ராசிக்கு விரயாதிபதியாக விளங்கும் குரு, விரய ஸ்தானத்திலேயே பலம் பெறுவதால் வரவைக் காட்டிலும் செலவு கூடும். சுப விரயங்களை மேற்கொள்வதன் மூலம் வீண் விரயங்களில் இருந்து விடுபடலாம்.
ராகு-கேது பெயர்ச்சி காலம்
21.3.2022 அன்று மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். உங்கள் ராசியைப் பொறுத்தவரை ஜென்ம ராகுவும், சப்தம கேதுவுமாக விளங்குவதால், மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். தைரியமும், தன்னம்பிக்கையும் குறையும். எதையும் துணிந்து செய்ய இயலாது. ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துவச் செலவு வரலாம். ஒரு சிலருக்கு இடமாற்றம், வீடுமாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை உண்டாகும்.
சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை, மகர ராசியில் சனி பகவான் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியானவர் சனி என்பதால், இக்காலத்தில் மிகுந்த விழிப்புணர்ச்சி தேவை. சூடுபிடித்த வியாபாரத்தில் பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்காது.
கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்
14.4.2021 முதல் 3.6.2021 வரை, 4.6.2021 முதல் 21.7.2021 வரை மற்றும் 24.10.2021 முதல் 7.12.2021 வரை, செவ்வாய் -சனி பார்வை உள்ளது. இக்காலத்தில் எதையும் துணிந்து செய்ய இயலாது. அனைவருமே கவனமுடன் இருக்க வேண்டிய நேரம் இது. நோய் தொற்று, இயற்கை சீற்றம் போன்றவற்றை சந்திக்க நேரிடும். உங்களைப் பொறுத்தவரை ராசிநாதனாக செவ்வாய் இருப்பதால், ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காது. குடும்பத்தில் அமைதி குறையும். 'செலவு அதிகரிக்கின்றதே' என்று கவலைப்படுவீர்கள். உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
பெண்களுக்கான பலன்கள்
இந்தப் புத்தாண்டு உங்களுக்கு யோக வாய்ப்புகளை அள்ளித் தரும். ஆனால் தேக நலனில் கவனம் அவசியம். குரு பார்வையால் கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் முன்னேற்றம் திருப்தி தரும். தாய், தந்தை மற்றும் சகோதரர்களின் ஆதரவோடு இல்லறத்தை நல்லறமாக அமைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகளின் திருமண முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும். மறுக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் வழங்கப்படலாம். சனியின் வக்ர காலத்தில் விழிப்புணர்ச்சி தேவை. செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை வழிபாடு செய்து வாருங்கள். வாழ்க்கை வளமாகும்.