search icon
என் மலர்tooltip icon

  மேஷம் - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்

  மேஷம்

  ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்8.10.2023 முதல் 25.4.2025 வரை

  மேஷ ராசி நேயர்களே!

  இதுவரை உங்கள் ராசியிலேயே சஞ்சரித்து வந்த ராகு பகவான் அக்டோபர் 8-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். அதே நேரத்தில் கேது 6-ம் இடத்திற்கு வருகிறார். ஜென்மத்தை விட்டுப் பாம்புக் கிரகம் விலகும்போது நல்ல பலன்களை வழங்கும் என்பது ஜோதிட நியதி. சுமார் ஒன்றரை ஆண்டு காலம் ராகுவும், கேதுவும் அந்த இடத்திலேயே சஞ்சரித்து அவை செல்லும் நட்சத்திரப் பாதசாரங்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குவார்கள்.

  உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தை 'பயண ஸ்தானம்' என்றும், 'விரய ஸ்தானம்' என்றும் சொல்வது வழக்கம். எனவே இடமாற்றம், வீடு மாற்றம், ஒரு சிலருக்கு உத்தியோகத்தில் இலாகா மாற்றம் ஏற்படலாம். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். சென்ற ராகு கேது பெயர்ச்சியில் உலுக்கி எடுத்த பிரச்சினைகள் இனி ஒவ்வொன்றாக மாறும். மனப்போராட்டம் அகல நண்பர்கள் வழிகாட்டுவர். பணப்பிரச்சினை தீரும். செலவிற்கேற்ற வரவு வந்து கொண்டேயிருக்கும். வாகன யோகம் உண்டு.

  6-ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் எதிரிகள் உதிரிகளாவர். உடல்நலம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மனதில் இடம் பிடிப்பீர்கள். சர்ப்ப தோஷ நிவர்த்திக்குரிய பரிகாரங்களை யோகபலம் பெற்ற நாளில் செய்து கொள்வது நல்லது.

  குரு மற்றும் சனி வக்ர காலம்

  8.10.2023 முதல் 20.12.2023 வரை மேஷ ராசியிலும், 25.9.2024 முதல் 22.1.2025 வரை ரிஷப ராசியிலும், குரு வக்ரம் பெறுகிறார். அவர் வக்ரம் பெறும் காலங்களில், உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. வீண் விரயங்கள் உண்டு. வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் திருப்தி தராது.

  8.10.2023 முதல் 24.10.2023 வரை மகர ராசியிலும், 10.7.2024 முதல் 5.11.2024 வரை கும்ப ராசியிலும் சனி வக்ரம் பெறுகிறார். அவர் வக்ரம் பெறும் காலங்களில், சஞ்சலங்கள் அதிகரிக்கும். எதிரிகளின் பலம் கூடும். மருத்துவச் செலவு பெருகும். பொதுவாழ்வில் வீண்பழி ஏற்படும். சொந்த பந்தங்களின் அரவணைப்பு குறையும்.

  சனிப்பெயர்ச்சி காலம்

  20.12.2023 அன்று கும்ப ராசிக்கு சனி பகவான் செல்கிறார். அவர் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்திற்கு வருவதால், பொருளாதாரத்தில் உச்சம் தொடுவீர்கள். நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்வீர்கள். வளர்ச்சியில் இருந்த குறுக்கீடு அகலும். தொழிலில் புதிய பங்குதாரர்களால் லாபம் பெருகும். கூட்டுத் தொழிலில் இருந்து விலகி தனித்து இயங்கும் வாய்ப்பு உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், வெளிநாட்டு அழைப்புகளை ஏற்கலாமா? என்று யோசிப்பீர்கள்.

  குருப்பெயர்ச்சி காலம்

  1.5.2024 அன்று ரிஷப ராசிக்கு குரு செல்கிறார். அப்போது குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 6, 8, 10 ஆகிய மூன்று இடங்களில் பதிகிறது. எனவே எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் அகலும். துடிப்போடு செயல்பட்டு அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் திட்டத்தை செயல்படுத்துவீர்கள்.

  பெண்களுக்கான பலன்கள்

  இந்த ராகு-கேது பெயர்ச்சியின் விளைவாக சுபச்செலவுகள் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறை ஏற்பட்டாலும், அதைச் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. கணவன் - மனைவி ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் வளர்ச்சி பெருமைப்படும் வகையில் அமையும். வீடு கட்டுவது, கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பதில் கவனம் செலுத்துவீர்கள்.

  வளர்ச்சி தரும் வழிபாடு

  விரய ராகுவாலும், 6-ம் இடத்து கேதுவாலும் விருப்பங்கள் நிறைவேறவும், நல்ல திருப்பங்கள் உருவாகவும், சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை மேற்கொள்வதோடு யோகபலம் பெற்ற நாளில் பைரவரை வழிபட்டு வாருங்கள்.

  மேஷம்

  ராகுகேது பெயர்ச்சி பலன்கள் - 2023

  12.4.2022 முதல் 30.10.2023 வரை

  ஜென்ம ராகு / ஏழில் கேது

  வீரம் மிகுந்த மேஷ ராசியினரே ராகு பகவான் ராசியிலும், கேது பகவான் 7ம் இடத்திலும் அடியெடுத்து வைக்கிறார்கள். குரு பகவான் 12, 1ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். சனி பகவான் 10, 11ம் இடத்தில் ஆட்சி பலம் பெறுகிறார்.

  ஜென்ம ராகுவின் பலன்கள்:ஒரு மனிதனின் வாழ்வில் மிகக் குறுகிய காலத்தில் நடைபெறும் சுப, அசுப நிகழ்விற்கு ராகுவே காரணம். ஒரு கணப் பொழுதில் உலகில் கண்காணாத மூலையில் இருப்பவரை உலகப் புகழ்பெறச் செய்வது, பெயர், புகழோடு வாழ்பவரை களங்கப்படுத்துவதும, அல்லது உயரிய நிலையில் இருப்பவரை இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகச் செய்வது, பணத்தையே பார்க்காதவனுக்கு பெரும் பணத்தை கொடுத்து பணக்காரர்களின் வரிசையில் உட்கார வைப்பது, பணத்தில் மிதந்தவர்களை சிங்கிள் டீக்காக தெருக்கோடியில் நிற்க வைப்பது போன்ற அனைத்தும் ராகு பகவானின் சித்து விளையாட்டுக்கள். ராசிக்குள் நுழையும் ராகு உங்களுக்கு பல்வேறு சுப பலன்களை வழங்கப் போகிறார். எதிர்பார்த்த, எதிர்பார்க்காத பல நல்ல பலன்களை நடத்தி காட்டி உங்களை வியப்பில் ஆழ்த்தப் போகிறார்.

  மேஷம் சர ராசி என்பதால் ஓரிடத்தில் நிற்க விடாமல் உங்களை பம்பரமாக சுற்ற விடுவார். உங்களின் தனித் திறமைகள் வெளிப்படும். இதுவரை வெளி உலகத்திற்கு தெரியாமல் இருந்த உங்களின் திறமைகளை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டப் போகிறார். புகழ், அந்தஸ்து கவுரவத்தை கொடுத்து கோபுரத்தின் உச்சிக்கு ஏற்றி விடப் போகிறார். எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெரும் தைரியத்தை தருவார்.

  தடைபட்ட உரிமைகள் துளிர் விடும். சுகபோக வாழ்க்கை கிடைக்கும். லௌ கீக நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு குறுக்கு வழியிலாவது பணம் சம்பாதித்து விட வேண்டும் என்ற பேராசை மேலோங்கும். எல்லாம் திட்டமிட்டபடி சரியாக நடந்தால் கூட ஜென்ம ராசியை ராகு கடப்பதால் இனம் புரியாத பய உணர்வும் இருந்து கொண்டே இருக்கும். கோட்சார ராகு கிருத்திகை 1, பரணி, அசுவினி ஆகிய நட்சத்திரங்களில் பயணிக்கிறார்.

  12.4.2022 முதல்14.6.2022 வரை ராகுவின் கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள்:கிருத்திகை சூரியனின் நட்சத்திரம். சூரியன் மேஷத்திற்கு 5ம் அதிபதி என்பதால் தீடீர் பதவி, புகழ், கவுரவம் கிடைக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மேன்மையான காலம். தொழில் அதிபர்களுக்கு அரசின் உதவி கிடைக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக உதவிக்கரம் நீட்டு வார்கள். நல்ல நம்பிக்கையான விசுவாசமான வேலையாட்கள் கிடைப்பார்கள்.

  இதுவரையில் யோசிக்காத வகையில் விவேகமாக சிந்தித்து செயல்பட்டு தொழிலை வளப்படுத்துவர்கள். பணப் புழக்கம் சரளமாக இருக்கும். பல வழிகளில் வருமானம் பெருகும். புதிய தொழில் கிளைகள் உருவாக்க ஏற்ற காலம். தடைபட்ட காதல் திருமண முயற்சிகள் கைகூடும். பலருக்கு வயது வித்தியாசம் இல்லாமல் காதல் உண்டாகும்.புத்திர பிராப்தம் உண்டாகும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டு. பிள்ளைகளுக்கு தொழில், உத்தியோகம், திருமணம், குழந்தை, வீடு வாகன யோகம் போன்ற அனைத்து விதமான பாக்கியங்களும் உண்டாகும்.

  15.6.2022 முதல் 20.2.2023 வரை ராகுவின் பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள்:பரணி சுக்ரனின் நட்சத்திரம். மேஷ ராசிக்கு சுக்ரன் 2,7ம் அதிபதி என்பதால் பொருளாதாரத்தில் நல்ல மாற்றமும் ஏற்றமும் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். சிலருக்கு கலப்பு திருமணம் நடைபெறும். சில தம்பதிகள் தொழில் அல்லது உத்தியோகத்திற்காக பிரிந்து வாழலாம். சில கணவன், மனைவிக்கு சம்பந்தம் இல்லாத 3ம் நபர்களின் தலையீடு அதிகமாகும். சிலருக்கு புதிய வெளிநாட்டு நண்பர்கள் அல்லது தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். சிலருக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சிலருக்கு வாடிக்கையாளர்களால் தேவையற்ற வம்பு வழக்கு உருவாகும்.

  21.2.2023 முதல் 30.10.2023 வரை ராகுவின் அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள்:அசுவினி கேதுவின் நட்சத்திரம். ராசிக்கு 7ல் சஞ்சரிக்கும் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் ராகு பயணிக்கிறார். கேது பிரிவினை மற்றும் மொத்த வம்பு, வழக்கின் குத்தகைதாரர். கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த அண்ணன், தம்பிகள் பிரிந்து தனிக் குடித்தனம் செல்லலாம். பாரம்பரியமாக கூட்டுத் தொழில் செய்து வந்த குடும்பங்களில் சில பங்காளிகள் தொழிலை விட்டு விலகலாம். கூட்டாளிகளிடம் பணப் பரிவர்த்தனையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். சிலருக்கு குலத் தொழிலில் இருந்து விடுபட்டு வேறு தொழில் செய்ய ஆர்வம் மிகும். சிலர் முறையற்ற பாகப் பிரிவினைக்கு நீதி மன்றத்தை அனுகலாம். சிலருக்கு சம்பந்திகளுடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். நட்பு வட்டாரங்கள் விலகிச் செல்வது போன்ற மன உணர்வு வாட்டும்.

  ஏழாமிட கேதுவின் பலன்கள்:ஏழாமிடம் என்பது வாழ்க்கைத் துணை, நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் ஆகியவற்றைப் பற்றிக் கூறுமிடம். ராகு கொடுக்கும் வள்ளல் என்றால் கேது கெடுப்பதில் வல்லவர். 7ல் வரும் கேது பிரிந்து வாழும் தம்பதிகளை சேர்த்து வைப்பார். ஒற்றுமையாக வாழும் தம்பதிகளைப் பிரிப்பார் அல்லது கருத்து வேறுபாட்டை மிகைப்படுத்துவார். சிலர் மனைவியை கொடுமைப்படுத்தி இன்பம் காண்பார்கள். சிலருக்கு திருமண வாழ்க்கையில் பிடிப்பு குறைந்து இல்லறத் துறவியாக வாழ்வார்கள். மத்திம வயதினரை இல் வாழ்க்கையில் இருந்து விடுபடுவார்கள். சிலர் தேவையற்ற கோபத்தால் அனைவரையும் பகைப்பார்கள். சிலரின் வாழ்க்கை துணைக்கு ஆரோக்கிய கேடு உண்டாகும். ராகு கொடுக்கும் பணத்தை கேது விரயமாக்குவார்

  தொழில் கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடு, உடன் பணிபுரிபவர்களிடம் மனக்கசப்பு, தவறான தொழில் ஒப்பந்தம் அல்லது பொருத்தமில்லாத கூட்டாளியை தேர்வு செய்தல் போன்ற அசௌகரி யங்கள் நிலவும். பிரிந்து வாழும் தம்பதிகளிடையே சட்ட ரீதியான பிரிவினையை செய்து வைப்பார். ராசிக்கு 7ல் சஞ்சரிக்கும் கேது விசாகம், சுவாதி, சித்திரை ஆகிய நட்சத்திரங்களில் பயணிக்கிறார்.

  12.4.2022 முதல் 17.10.2022 வரையான கேதுவின் விசாகம் நட்சத்திர சஞ்சார பலன்கள்:விசாகம் குருவின் நட்சத்திரம். குரு மேஷத்திற்கு 9,12ம் அதிபதி. ஆன்மீக குருமார்களின் நட்பும், ஆசியும் கிட்டும்.முன்னோர்களுக்கு முறையான திதி, தர்பணம் செய்து ஆசி பெற முயல்வீர்கள். இஷ்ட, குல, இஷ்ட உபாசனை தெய்வ வழிபாடு பலிதமாகும் காலம். நெடுந்தூர வெளிநாட்டு பயணம் அல்லது தீர்த்த யாத்திரை செய்ய ஏற்ற காலம். பூர்வ புண்ணிய பலத்தால் முறையான சர்ப்ப வழிபாடு செய்பவர்களுக்கு நெடுங்காலமாக முறைப்படுத்த முடியாத பூர்வீக சொத்துக்களுக்கு தீர்வு கிடைக்கும்.

  மிகக் குறிப்பாக பிரிக்க முடியாமல் உள்ள சொத்து, பாதை இல்லாத சொத்து, 18 வருடமாக கோர்ட், கேஸில் உள்ள சொத்துக்கு தீர்வு கிடைக்கும். சிலர் வெளி மாநிலம், வெளிநாட்டிற்கும் இடம் பெயரலாம். இந்த கால கட்டத்தில் கோட்சார குரு விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வீடு, வாகனம், பிள்ளைகளின் திருமணம், படிப்பு, நகை வாங்குவது என விரயத்தை சுப செலவாக முதலீடாக மாற்றுவது உங்கள் கைகளில் தான் உள்ளது. படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும்.

  18.10.2022 முதல் 26.6.2023 வரையான கேதுவின் சுவாதி நட்சத்திர சஞ்சார பலன்கள்: சுவாதி ராகுவின் நட்சத்திரம். ராசியில் சஞ்சரிக்கும் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது பயணிக்கிறார். ராகுவும் கேதுவும் தங்கள் நட்சத்திரங்களை பரிமாறிக் கொண்டு பயணிப்பதால் நம்பியவர்களே நம்பிக்கை துரோகம் செய்யலாம் அல்லது உறவுகளுக்காக சூழ்நிலை கைதியாக வாழ நேரலாம். உண்மையானவர்கள் யார் துரோகிகள் யார் என அடையலாம் காணும் காலம். அடிக்கடி மின் சாதனங்கள் பழுதாகி விரயம் உண்டாகும். அறிமுகம் இல்லாத நபர்களின் நட்பை தவிர்க்க வேண்டும். பணத்திற்கு ஆசைப்பட்டு சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

  27.6.2023 முதல் 30.10.2023 வரை கேதுவின் சித்திரை நட்சத்திர சஞ்சார பலன்கள்: சித்திரை செவ்வாயின் நட்சத்திரம். செவ்வாய் மேஷத்திற்கு ராசி அதிபதி மற்றும் எட்டாம் அதிபதி என்பதால் விபரீத ராஜ யோக அடிப்படையில் உங்களுக்கு எதிர்பாராத சட்டத்திற்கு புறம்பான தீடீர் பணவரவு உண்டாகும்.

  உங்களின் திடீர் வளர்ச்சியால் திருஷ்டி அதிகரிக்கும். உங்களின் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப் படுவார்கள். இந்த காலகட்டத்தில் பெண்கள் தாலியை கழட்டக் கூடாது. வாகனங்களில் பயணிக்கும் போதும், இயக்கும் போதும் கவனம் தேவை. வழக்குகளில் வெற்றி உண்டாகும்.

  ஜென்ம ராகுவால் ஏற்படும் சுப பலன்கள் சற்று அதிகமாகவும் ஏழாமிட கேதுவால் சில பாதகங்களும் இருக்கும். தர்மத்தை கடைபிடிக்க கேதுவால் பாதிதிப்பு ஏற்படாது.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  மேஷம்

  ராகுகேது பெயர்ச்சி பலன்கள் : மேஷ ராசிக்காரர்களுக்கு வரும் செப்டம்பர் மாதம் 23ம் தேதி நடைபெற இருக்கும் ராகு-கேது பெயர்ச்சி மூலம் சாயாகிரகங்களான ராகு-கேதுக்கள் 2, 8-ம் இடங்களுக்கு மாற இருக்கின்றன.

  1.9.2020 முதல் 20.3.2022 வரை

  மேஷ ராசிக்காரர்களுக்கு வரும் செப்டம்பர் மாதம் 23ம் தேதி நடைபெற இருக்கும் ராகு-கேது பெயர்ச்சி மூலம் சாயாகிரகங்களான ராகு-கேதுக்கள் 2, 8-ம் இடங்களுக்கு மாற இருக்கின்றன.

  ஏற்கனவே ராகு-கேதுக்கள் இருந்து வந்த 3, 9-ம் இடங்கள் அதிர்ஷ்டத்தைச் செய்கின்ற நல்ல இடங்கள் என்ற நிலையில் தற்போது மாற இருக்கும் 2, 8-ம் இடங்கள் சாதகமற்ற பலனை தரும் இடங்களாக ஜோதிட மூலநூல்களில் குறிப்பிடப் பட்டிருக்கின்றன.

  அதே நேரத்தில் தற்போது ராகு மாற இருக்கும் ரிஷப வீடு அவருக்கு மிகவும் பிடித்த ஒரு சுபரின் வீடு என்பதால் ரிஷபத்தில் அமரும் ராகு நன்மைகளை மட்டுமே செய்வார் எனும் விதிப்படி உங்களுக்கு அந்த பாவகத்தின் தன்மைகளான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தின் நல்லவைகளை செய்வார்.

  இன்னொரு கிரகமான கேது 8-மிடத்திற்கு மாறினாலும் அது உங்கள் ராசிநாதனின் இன்னொரு வீடு என்பதால், இருக்கும் வீட்டின் அதிபதியின் பலன்களை சர்ப்பக் கிரகங்கள் செய்யும் என்ற விதிப்படி உங்கள் ராசிநாதனான செவ்வாயின் பலன்களை மட்டுமே கேது எடுத்து செய்வார்.

  எனவே 8-ம் இடத்தில் அமரும் கேதுவால் கெடுதல்கள் எதுவும் நடக்குமோ என்றும் பயப்படத் தேவையில்லை. அதிலும் எட்டாமிடம் தூர இடங்களைக் குறிக்கும் என்பதால் இந்தப் பெயர்ச்சியினால் மேஷ ராசிக்காரர்களுக்கு வெளிநாடுகள், தூர இடங்கள் மூலமான வரவுகள் இருக்கும்.

  அதே நேரத்தில் 3, 6, 10, 11 ஆகிய உபசய ஸ்தானங்களை தவிர்த்து வேறு இடங்களில் அமரும் ராகு-கேதுக்கள் அந்த பாவகத்தை கெடுத்துத்தான் நன்மைகளை செய்வார்கள் என்ற விதிப்படி 2-ம் வீட்டில் அமரும் ராகுவால் இந்தப் பெயர்ச்சியின் முதல் ஆறு மாதங்களுக்கு பொருளாதார நெருக்கடிகள் இருக்கும்.

  எனவே எந்த ஒரு விஷயத்திலும் குறிப்பாக பண முதலீடு விஷயங்களில் அவசரப்பட்டு எதிலும் முதலீடு செய்ய வேண்டாம். இது போன்ற காலகட்டங்களில் முதலீடு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும் என்பதால் பணத்தை இரட்டிப்பாக்கி தருகிறோம் என்பது போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பியோ, அறிமுகம் இல்லாத நபர்களிடமோ, அனுபவம் இல்லாத கம்பெனிகளிடமோ பணத்தை போட வேண்டாம்.

  அதிக வட்டி தருவதாக சொல்லும் கம்பெனிகளில் பணம் போடுவது, அதிக வட்டி தருவதாக சொல்லும் நபர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாறுவது போன்ற செயல்களை செய்ய சொல்லி ராகு தூண்டுவார் என்பதால் பேராசை பெரும் நஷ்டம் என்பதை புரிந்து கொண்டு பண விஷயத்தில் மன அடக்கத்துடன் இருந்து கொண்டால் இந்தப் பெயர்ச்சி எந்தவித பாதிப்புகளையும் உங்களுக்கு தராது.

  அதேநேரத்தில் 8-ம் இடத்தில் அமரப் போகும் விருச்சிக கேது எதிர்பாராத அதிர்ஷ்டம், தனலாபம், பெரியதொகை ஒன்று கிடைப்பது போன்ற விஷயங்களை செய்வார் என்பதால் இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் ஏதேனும் ஒரு விஷயம் மூலமாக உங்களுக்கு நல்ல தனலாபம் கிடைக்கும்.

  ரியல் எஸ்டேட் போன்றவைகளில் வாங்குபவருக்கும், விற்பவருக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தி கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் மீடியேட்டர் போன்றவர்களுக்கும் கமிஷன், காண்ட்ராக்ட் போன்ற தொழில் அமைப்புகளில் இருப்பவர்களுக்கும் இந்த ராகு-கேது பெயர்ச்சி மிகுந்த நன்மைகளை தரும்.

  எட்டாமிடம் விருச்சிகமாகி அங்கே கேது அமர்வதால் எதிர்பாராத அதிர்ஷ்டம், ஒரு பெரிய தொகை திடீரென கிடைத்தல், உறவினர் சொத்து கிடைத்தல், வெளிநாட்டு நன்மை போன்ற பலன்கள் நடந்து ராகுவினால் ஏற்படும் சாதகமற்ற பலன்கள் சரிக்கட்டப்படும் என்பது உறுதி.

  இந்தப் பெயர்ச்சியினால் தொழில், வேலை, வியாபாரம் போன்ற அமைப்புக்கள் மூலம் உங்களுக்கு வேலைப்பளு அதிகம் வரும். வியாபாரிகள், விவசாயிகள், சொந்தத்தொழில் செய்பவர்கள் வேலைக்காரர்களை அதிகம் நம்ப வேண்டாம். உங்கள் உழைப்பும், லாபமும் திருடு போவதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே அதிகமான வட்டிக்கு கடன் வாங்காதீர்கள்.

  அஷ்டம கேதுவால் அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருக்கும். எனவே அதுபோன்ற வேலை அமையவும் வாய்ப்பு உள்ளது. வெளிமாநிலங்களுக்கு செல்வீர்கள். நீண்டதூரப் பயணங்களால் லாபங்கள் இருக்கும். இதுவரை வெளிநாடு போக முயற்சித்தவர்களுக்கு இப்போது வெற்றி கிடைக்கும். வயதானவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் குழந்தைகளை போய்ப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். இளம்பருவத்தினர் வெளிநாடு செல்வீர்கள்.

  பரிகாரங்கள்

  ஒரு கருப்புநிற விதவைப் பெண்மணி அல்லது ஒரு துப்புரவுத் தொழிலாளிக்கு கருப்புநிற ஆடை, நான்கு கிலோ கருப்பு உளுந்து, ஒரு தோல் பை அல்லது முற்றிலும் தோலினால் ஆன செருப்பு ஆகியவற்றை ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் தானம் கொடுங்கள்.

  ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

  (செல்: 8870 99 8888)

  ×