என் மலர்
மேஷம்
2026 தை மாத ராசிபலன்
மேஷ ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய், தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். அவரோடு சூரியன், புதன், சுக்ரன் ஆகிய மூன்று கிரகங்களும் இணைந்திருக்கின்றன. பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சூரியனோடு செவ்வாய் சேர்க்கை இருப்பதால், இம்மாதம் ஒரு இனிமையான மாதமாக அமையும். பூர்வ புண்ணியத்தின் பலனால் கிடைக்க வேண்டிய அத்தனை யோகமும் உங்களுக்கு வரப்போகிறது. பொருளாதார நிலை உச்சம்பெறும். புனிதப் பயணம் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். லாப ஸ்தானத்தில் சனி இருப்பதால், லாபம் அதிகரிக்கும் மாதமாகவே இம்மாதம் இருக்கும்.
வக்ர குரு
மிதுன ராசியில் உள்ள குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர நிலையிலேயே இருக்கிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. பாக்கிய - விரயாதிபதியான குரு, வக்ரம் பெறுவதால் சுபவிரயம் அதிகரிக்கும். 'இல்லத்தில் சுப காரியங்கள் நடைபெறவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது சுபச்செய்திகள் வந்து மனதை மகிழ்விக்கும். அதேநேரத்தில் பூர்வீக சொத்துப் பிரச்சனை சம்பந்தமாக பாகப் பிரிவினை செய்துகொள்ள எடுத்த முயற்சி தாமதமாகும். சகோதரர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பஞ்சாயத்துக்கள் முடிவடையாமல் இழுபறி நிலையில் இருக்கும்.
குருவின் பார்வை 7, 9, 11 ஆகிய மூன்று இடங்களில் பதிவதால் அந்தந்த இடங்கள் புனிதமடைகின்றன. குடும்ப ஒற்றுமை கூடும். உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்களுக்கோ திருமணம் முடிவாக வாய்ப்புண்டு. வெளிநாட்டு முயற்சி அனுகூலம் தருவதாக அமையும். தந்தை வழி பிரச்சனைகள் மறையும். தனித்து இயங்க நினைத்தவர்களுக்கு இப்பொழுது நல்ல சந்தர்ப்பங்கள் வந்துசேரும். கூட்டுத்தொழிலை, தனித் தொழிலாக மாற்றும்போது லாபம் அதிகரிக்கும். வியாழக்கிழமை விரதமும், குரு வழிபாடும் வெற்றியை வழங்கும்.
கும்ப - புதன்
உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், 29.1.2026 அன்று கும்ப ராசிக்குச் செல்கிறார். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும் நேரம், நல்ல நேரம்தான். சகோதர ஒற்றுமை பலப்படும். படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் உடன்பிறப்புகளுக்கு வேலை கிடைக்கும். வியாபாரம் தொடங்க நினைத்தவர்களுக்கு அது கைகூடும். குடும்பத்தில் உதிரி வருமானங்களால், பணப்புழக்கம் அதிகரிக்கும். மாமன், மைத்துனர் வழியில் மகிழ்ச்சி தரும் சம்பவம் நடைபெறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும் நேரம் இது.
கும்ப - சுக்ரன்
மகரத்தில் சஞ்சரித்து வரும் சுக்ரன், 7.2.2026 அன்று கும்ப ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு தன - சப்தமாதிபதியானவர் சுக்ரன். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும்போது பணவரவு அதிகரிக்கும். பாராட்டும், புகழும் கூடும். மனதிற்கு இனிய சம்பவங்கள் ஏராளமாக நடைபெறும். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். வரும் அழைப்புகளை ஏற்றுக்கொள்வது நல்லது. இளைய சகோதரருடன் இருந்த பகை மறையும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்ற முயற்சிப்பீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் வெற்றிநடை போடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் அனுகூலம் கிடைக்கும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு இல்லம் கட்டிக் குடியேறும் வாய்ப்பும், சுபநிகழ்வுகளும் நடைபெறக்கூடும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 17, 18, 22, 23, 28, 29, பிப்ரவரி: 1, 2.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.






