என் மலர்
மேஷம்
2025 ஆனி மாத ராசிபலன்
பிறருக்கு உதவும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே!
ஆனிமாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். அவரது பார்வை சனி மற்றும் ராகு மீது பதிவதால் சொத்துக்களால் பிரச்சினையும், சொந்தங்களால் மனநிம்மதி இழப்பும் ஏற்படலாம். குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வதன் மூலமே அமைதி காண இயலும். கருத்து வேறுபாடுகளும், பணப் போராட்டமும், கடமையில் தொய்வும் ஏற்படும் நேரமிது. பிள்ளைகள் சம்பந்தமாகவும் விரயங்கள் ஏற்படலாம். இதுபோன்ற நேரங்களில் திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளைத் தேர்ந்தெடுத்து செய்வதன் மூலமே ஓரளவு நன்மைகளைக் காண இயலும்.
கடக - புதன்
ஆனி மாதம் 8-ந் தேதி கடக ராசிக்கு புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். சகாய ஸ்தானாதிபதி சுக ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் எதிர்பார்ப்புகள் படிப்படியாக நிறைவேறும். வசதியான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள நீங்கள் எடுத்த முயற்சி ஒவ்வொன்றாக வெற்றிபெறும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நிலை அகலும். வீடுகட்ட மற்றும் வாகனம் வாங்க கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தால் அதில் அனுகூலம் ஏற்படும். கேட்ட உதவிகள் கிடைக்கும். பழைய வாகனத்தை கொடுத்துவிட்டு புதிய வாகனத்தை வாங்கும் முயற்சி கைகூடும். கட்டிடப் பணி பாதியில் நிற்கிறதே என்று கவலைப்பட்டவர்களுக்கு இப்பொழுது அது நிறைவேறும். எதிர்மறைச் சிந்தனைகள் அலைமோதும். இந்த நேரத்தில் நேர்மறைச் சிந்தனைகளை வளர்த்துக் கொள்வது நல்லது.
ரிஷப - சுக்ரன்
ஆனி 15-ந் தேதி ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். தனாதிபதி தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் ஒரு பொன்னான நேரமாகும். பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். இனத்தார் பகை மாறும். எதில் ஈடுபட்டாலும், வெற்றி கிடைக்கும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்துமுடிக்க இயலும். நேசக்கரம் நீட்ட மாற்று இனத்தவர்கள் முன்வருவர். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. கல்யாண வயதடைந்த பிள்ளைகளுக்கு இதுவரை திருமணம் பேசியும் முடிவாகவில்லையே என்ற கவலை இப்பொழுது அகலும். அதே சமயம் சுக்ரனுக்குரிய சிறப்பு தலங்களுக்கு யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வந்தால் அக்கறை காட்டாத காரியங்களிலும் ஆதாயம் கிடைக்கும்.
செவ்வாய் - சனி பார்வை
மாதம் முழுவதும் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனியை சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய் பார்க்கின்றார். சனியோடு ராகுவும் கூட்டுக்கிரக சேர்க்கையாக இருக்கின்றது. எனவே உத்தியோகத்தில் பிரச்சினைகள் உருவாகும். புதிய வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு தாமதம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நிதி நெருக்கடியின் காரணமாக எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. பிறரை நம்பி ஒப்படைக்கும் பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். கடன் சுமையின் காரணமாக ஒருசிலருக்கு வாங்கிய சொத்துக்களை விற்கும் சூழ்நிலை ஏற்படலாம். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். இதுபோன்ற நேரங்களில் அங்காரகனுக்கும், சனிக்கும் உரிய ப்ரீதிகளை முறையாகச் செய்வது நல்லது.
பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்அதிகாரிகளின் ஆதரவு குறையும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ - மாணவியர்களுக்கு படிப்பில் கவனம் தேவை. பெண்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். செயல்பாட்டில் தாமதங்கள் ஏற்படும்.
இம்மாதம் சூரிய வழிபாடு சுகத்தை வழங்கும்.






