என் மலர்
மேஷம்
2025 கார்த்திகை மாத ராசிபலன்
மேஷ ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி வக்ர நிவர்த்தியாகி பலம்பெறுகின்றார். எனவே பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய திட்டங்கள் வெற்றி பெறும். அருளாளர்களின் ஆசியும், அன்பு நண்பர்களின் ஆதரவும் திருப்தி தரும். ராசிநாதன் செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியுடன் இணைந்து விருச்சிக ராசியில் தன் சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் எடுத்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். இளைய சகோதரத்தோடு இருந்த பகைமாறும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குருபகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடம் எனப்படும் சுக ஸ்தானத்தில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். அவர் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குருபகவான். எனவே இந்த வக்ர காலத்தில் வளர்ச்சியும் உண்டு, தளர்ச்சியும் உண்டு. நினைத்தது நிறைவேறாமலும் போகலாம். நடக்காது என்று நினைத்த காரியம் நடைபெற்று மகிழச்சியை வழங்கலாம். இருப்பினும் இக்காலத்தில் குரு வழிபாடு அவசியம் தேவை.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் வருகின்றார். அவர் உங்களுக்கு யோகத்தை வழங்கப்போகிறார். அங்குள்ள சூரியன், செவ்வாயோடு இணைகின்றார். எனவே 'சுக்ர மங்கள யோகம்' உருவாகிறது. இதனால் கல்யாணக் கனவுகள் நனவாகும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கையும் உண்டு. உடன்பிறப்புகள் மூலம் ஒரு நல்ல தகவல் கிடைக்கும். அரசு வழியில் வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, இப்பொழுது நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைத்து, வேலையும் கிடைத்து மகிழ்ச்சி அதிகரிக்கும்.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி தனுசு ராசிக்குச் செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிநாதனாகவும், அஷ்டமாதிபதியாகவும் விளங்கும் செவ்வாய், தற்சமயம் 9-ம் இடத்திற்கு வரும்பொழுது பாக்கிய ஸ்தானம் பலம்பெறுகின்றது. எனவே கேட்டது கிடைக்கும். நினைத்தது நடக்கும். இதுவரை சேமித்த சேமிப்பை இப்பொழுது அசையா சொத்தாக மாற்ற முயற்சிப்பீர்கள். பத்திரப்பதிவில் இருந்த தடைகள் அகலும். மூடிக்கிடந்த தொழிலுக்கு திறப்பு விழா நடத்துவீர்கள். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்க சகோதரர்கள் உதவுவர்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் இந்தநேரம், ஒரு அற்புதமான நேரமாகும். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப படிப்படியாக தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். அடிப்படை வசதிகள் பெருகும். ஆனந்த வாழ்க்கை மலரும். குழந்தைகள் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகள் யாவிலும் வெற்றி கிடைக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் உண்டு. வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு விடிவு காலம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வு உண்டு. கலைஞர்களுக்கு நினைத்தது நடக்கும். மாணவ - மாணவியர்களுக்கு படிப்பில் கவனம் தேவை. பெண்களுக்கு கடன் என்ற மூன்றெழுத்து தீரும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 23, 24, 27, 28, டிசம்பர்: 4, 5, 8, 9.
மகிழ்ச்சி் தரும் வண்ணம்:- ஆரஞ்சு.






