என் மலர்tooltip icon

    மேஷம்

    2025 ஐப்பசி மாத ராசிபலன்

    மேஷ ராசி நேயர்களே!

    ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சூரியனும், சகாய ஸ்தானாதிபதி புதனும் இணைந்து சஞ்சரிப்பதால் மாதம் முழுவதும் மகிழ்ச்சி அதிகரிக்கும். தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

    உச்சம் பெற்ற குரு

    மாதத் தொடக்கத்தில் குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். அவரது பார்வை பலத்தால் பலவித நன்மைகள் கிடைக்கும். ஆரோக்கியத் தொல்லை அகலும். அடுக்கடுக்காக வந்த மருத்துவச் செலவு குறையும். இடமாற்றத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு அது கைகூடும். போட்டிகளுக்கு மத்தியில் தொழில் முன்னேற்றம் உண்டு. தொல்லை தந்த எதிரிகள் விலகும் சூழ்நிலை உருவாகும். பயணங்களால் பலன் கிடைக்கும். வெளிநாட்டு முயற்சி அனுகூலம் தருவதாக அமையும்.

    சனி-ராகு சேர்க்கை

    மாதம் முழுவதும் லாப ஸ்தானத்தில் சனி, ராகு சேர்க்கை பெற்று சஞ்சரிக்கிறார்கள். லாபாதிபதியான சனி லாப ஸ்தானத்தில் இருப்பது யோகம்தான். சனி வக்ரம் பெற்றிருப்பதால் பயப்பட தேவையில்லை. வருமானம் திருப்திகரமாக இருந்தாலும் செலவு கூடும். திட்டமிட்டுச் செலவு செய்ய இயலாது. திடீர் செலவுகள் மனக்கலக்கத்தை உருவாக்கும். கும்ப ராசியில் உள்ள சனி உங்களுக்கு நன்மைகளையே வழங்கும். கூட்டுத் தொழில் செய்வோர், ஏற்புடைய விதத்தில் லாபம் காண்பர்.

    விருச்சிக - செவ்வாய்

    ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிநாதனாகவும், அஷ்டமாதிபதியாகவும் விளங்குபவர், செவ்வாய். அவர் தன் சொந்த வீட்டிற்கு வரும் இந்த நேரத்தில் எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும். இலாகா மாற்றம், தொழில் வளர்ச்சிக்கான மூலதனம் கேட்ட இடத்தில் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த இடம், பூமி விற்பனை கைகூடும். கடமையைச் செவ்வனே செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். ஆயினும் அஷ்டமத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால், ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். மருத்துவச் செலவும், அதனால் மன வருத்தமும் உருவாகும். எக்காரணம் கொண்டும் தன்னம்பிக்கையை தளரவிட வேண்டாம்.

    துலாம் - சுக்ரன்

    ஐப்பசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. எனவே இக்காலத்தில் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கவில்லையே என்று கவலைப்பட்டவர் களுக்கு, நல்ல வேலை கிடைத்து உதிரி வருமானம் வரும். குடும்பத்தில் ஒருவருக்கு மேற்பட்டவர்கள் சம்பாதிக்கும் நேரம் இது. வருமானம் திருப்தி தரும் விதத்தில் அமைவதால் கொடுக்கல் - வாங்கல் ஒழுங்காகும். பெற்றோரின் உடல்நலனில் கவனம் தேவை.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் புதிய திருப்பங்கள் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், பாராட்டும் உண்டு. கலைஞர்களுக்கு மாதத்தின் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். மாணவ-மாணவிகளுக்கு கல்வி முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு வருமானம் திருப்தி தரும். இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும் வாய்ப்பு உண்டு.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    அக்டோபர்: 27, 28, நவம்பர்: 1, 2, 7, 8, 11, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

    ×