search icon
என் மலர்tooltip icon

  மேஷம் - குருப்பெயர்ச்சி பலன்கள்

  மேஷம்

  குருபெயர்ச்சி பலன்-2024

  மேஷம்- தன குரு 70%

  பேராற்றல் நிறைந்த மேஷ ராசியினரே!

  இதுவரை ஜென்ம ராசியில் நின்று பல்வேறு பாக்கிய பலன்களை வழங்கிய குருபகவான் மே 1 முதல் ராசிக்கு 2ம்மிடமாகிய தனம் வாக்கு குடும்ப ஸ்தானம் செல்கிறார்.இந்த ஒரு வருடம் முழுவதும் சனி பகவான் உங்கள் ராசிக்கு 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுகிறார்.

  இந்த கால கட்டத்தில் ராகு பகவான் 12ம்மிடமான அயன, சயன, மோட்ச ஸ்தானத்திலும் கேது பகவான் 6ம்மிடமான ருண, ரோக. சத்ரு ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார்.

  தன குருவின் பொதுபலன்கள்

  மேஷ ராசிக்கு பாக்கியாதிபதி மற்றும் விரயாதிபதியான குருபகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது மிகமிக மேலான கிரக நிலை எனலாம். இது அபரிமிதமான வளர்ச்சிக்கு உரிய இடமாகும். இதில் பாக்கியாதிபதி குரு அமரும்போது வருமானம் பெருகும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

  அதே நேரத்தில் ஒரு மனிதனின் முன்னேற்றம் என்பது பணவரவு மட்டுமல்ல. நிலையான வாழ்வியல் முன்னேற்றத்திற்கு தேவையான தன்னம்பிக்கை, எதையும் சாதித்து முடித்து விடலாம் என்ற மனோதிடம், சிந்தனை மற்றும் செயல்பாட்டில் உத்வேகம், நேர்மறை எண்ணங்கள் போன்றவற்றை ஒருங்கே வழங்கப் போகிறார். எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு என்ற வாக்கிற்கு ஏற்ப துணிந்து எதிர்கால நலனுக்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

  உங்களை ஏளனம் செய்தவர்கள் வியக்கும் வகையில் பிரம்மாண்ட வளர்ச்சி ஏற்படப் போகிறது. நம் வாழ்க்கையில் என்றாவது விடிவு காலம் பிறக்காதா என்ற ஆவலுடன் வாழ்ந்தவர்களுக்கு விடியல் துவங்கிவிட்டது.

  குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள்

  தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் 5ம் பார்வை ருண, ரோக சத்ரு ஸ்தானத்தில் பதிகிறது. குருவின் பார்வைக்கு சுபத்துவம் அதிகம் என்பதால் முதலில் அடிப்படை தேவைகளில் மூன்றாவது தேவையான வீட்டை கடன் மூலம் ஏற்படுத்திக் கொடுப்பார்.

  ஏற்கனவே சொந்த வீட்டில் வசிப்பவர்கள் வீட்டை புதுப்பித்து விரிவாக்கம் செய்ய கடன் பெறலாம் அல்லது பழைய வாகனத்தை கொடுத்து விட்டு புதிய வாகனம் வாங்கலாம். அல்லது பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக கல்விக்கடன் பெறலாம். அல்லது திருமணம் போன்ற சுப விசேஷங்களுக்காக கடன் ஏற்படும். சிலர் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டும் கடனை அதிகரிப்பார்கள்.

  சிலருக்கு கடனுக்கு பயந்து வைத்தியச் செலவு வரும். சில அரசியல் பிரமுகர்கள் பதவி ஆசையில் தகுதிக்கு மீறி கடன் பட்டு எலக்சன் செலவு செய்து எதிரியையும் கடனையும் அதிகரிப்பார்கள். 6 ம்மிடம் கடன், எதிரி, நோய் ஸ்தானம் மட்டுமல்ல. உத்தியோக ஸ்தானமும் 6ம்மிடம்தான். இதுவரை நல்ல உத்தியோகம் இல்லாமல் மன உளைச்சலை சந்தித்தவர்களுக்கு நிம்மதியான மன நிறைவான வேலை கிடைக்கும். ஏற்கனவே நல்ல வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு என சிறப்பான உயர்வு உண்டு.

  குருவின் ஏழாம் பார்வை பலன்கள்

  குருவின் 7ம் பார்வை ராசிக்கு 8ம்மிடமான திடீர் அதிர்ஷ்டம் ஆயுள், நஷ்டம், அவமானம், அபகீர்த்தி ஸ்தானத்தை பார்க்கிறது. ஏற்கனவே சொன்னது போல் குருவின் பார்வை சுபமானது. பார்க்கும் இடத்தை விருத்தி செய்வார். ஆயுள், ஆரோக்கியம் சார்ந்த பயம் அகலும். படுக்கையில் இருந்தவர்களுக்கு கூட நாட்பட்ட வியாதிகளின் தன்மை புரியும். நோயை வெல்ல முடியும் என்ற மன தைரியம் கூடும். எந்த முறை வைத்தியம் சிறந்தது என்று புரியும். அறுவை சிகிச்சை வரை சென்ற நோய் வந்த சுவடு தெரியாது.

  குடிப்பழக்கம், போதைக்கு அடிமையானவர்கள் மருத்து உதவியில் சீராக வாய்ப்பு உள்ளது. காலத்தால் அவமானப்படுத்திய வழக்குகளிருந்து விடுபடுவீர்கள். திடீர் அதிர்ஷ்டம், உயில், காப்பீட்டு முதிர்வு தொகை போன்றவற்றின் மூலம் தன லாபங்கள் ஏற்படும்.

  சிலருக்கு நீச வழியில் பொருளும் பிறரின் சொத்தும் கிடைக்கும். சிலர் பெரும் பண ஆசையால் சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்து நீதிமன்றம் செல்ல நேரும் அல்லது சிறை தண்டனை அனுபவிப்பார்கள்.

  பெரும் தொழில் அதிபர்கள் அரசிற்கு முறையான வருமான வரி, விற்பனை வரி போன்றவற்றை தாக்கல் செய்வது நல்லது. சிலருக்கு புதிய எதிர்பாலின நட்பும் கிடைக்கும்.

  குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள்

  குருவின் 9ம் பார்வை ராசிக்கு 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் பதிகிறது. ஒரு மனிதனை சமுதாயத்தில் தலை நிமர்ந்து நிற்கச் செய்வது தொழில். இப்போது தொழில் ஸ்தானத்தை பார்க்கும் குரு தொழில் முன்னேற்றம் குறித்த கனவுகள் மற்றும் லட்சியங்களை நிறைவேற்றுவார்.

  தொழில் மூலம் புகழ் அந்தஸ்து, கவுரவம் உயரும். சமுதாயத்தில் தொழில் துறையில் முன்னிலையில் இருப்பவர்களின் நட்பு, அறிமுகம் கிடைக்கும். சிலர் கடன் பட்டு புதிய தொழில் துவங்கலாம்... சிறிய முயற்சியால் வெற்றியும்,சாதனையும் படைப்பீர்கள் தொழில் வளம் பெருகும். கூட்டுத் தொழிலில் நிலவிய சண்டை சச்சரவுகள் விலகும்.

  சோதனைகள் சாதனைகளாக மாறும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் புரிவர்களுக்கு தொழில் தொடர்பான வெளிநாட்டு பயணங்கள் அதிகரிக்கும். தொழில் எதிரிகள் விலகுவார்கள். தொழில் தொடர்பாக மனதில் இருந்த இனம் புரியாத பயம் விலகி எதையும் சமாளிக்கும் மன தைரியம் பெரும். குல, இஷ்ட தெய்வ கோவில்களுக்கு சென்றுவர நீங்கள் போட்ட திட்டங்கள் பலிதமாகும்.

  குருவின் கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள் (1.5.2024 - 13.6.2024 வரை)

  மேஷ ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் கவுரவப் பதவிகள், மந்திர உபதேசம் பங்குச் சந்தை ஆதாயம், புத்திர பிராப்தம், உழைப்பு இல்லாத வருமானம், புதிய நட்பால் காதல் உருவாகுதல், பிள்ளைகளின் சுப விசேஷங்கள், பூர்வீகச் சொத்தால் ஆதாயம் போன்ற மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும்.

  குருவின் ரோகிணி நட்சத்திர சஞ்சார பலன்கள் (14.6.2024 முதல் 20.8.2024. வரை)

  மேஷ ராசிக்கு 4ம் அதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் நில புலன்கள், உயர்ரக 2,4  சக்ர வாகனங்கள் சேரும். இது வரை சொந்த வீடு, வாகனம் இல்லாதவர்களுக்கு சொந்த வீடு, வாகனம் அமையும். விற்க முடியாமல் கிடந்த சொத்துகளுக்கு நல்ல விலை கிடைக்கும். சொத்துக்களுக்கு நல்ல வாடகைதாரர்கள் கிடைப்பார்கள். விவசாயிகளுக்கு அமோக விளைச்சல் உண்டாகும். தடைபட்ட குத்தகை வருமானம் வசூலாகும். தாயின் அன்பு ஆசீர்வாதத்தில் மனம் லயிக்கும்.

  குருவின் மிருகசீரிஷ நட்சத்திர சஞ்சார பலன்கள் 21.8.2024 முதல் 8.10.2024 வரை, 5.2.2025 முதல் 15. 5. 2025 வரை

  மேஷ ராசியின் அதிபதி மற்றும் அஷ்டமாதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சாரம் செய்யும் காலத்தில் கெளரவம் புகழ், அந்தஸ்து உயரும். ஆயுள் பயம் விலகும். நல்ல பழக்க வழக்கம் உண்டாகும். நன்மை, தீமையை பகுத்தாயும் திறன் மேம்படும். உடலும், மனமும் புத்துணர்வு அடையும். ஆன்ம பலம் பெருகும்.

  குருவின் வக்ர காலம்

  மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 9.10.2024 முதல் 28.11.2024 வரை வக்ரமடையும் காலத்தில் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.சிலருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம். வெளிநாட்டு பயணத்தில் மாற்றம் உண்டாகும்.

  உத்தியோகம், தொழில் போன்றவற்றில் புதிய மாற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும். வீண், வம்பு, வழக்கு போன்றவற்றில் ஈடுபடக்கூடாது. யாருக்கும் ஜாமீன் போடக்கூடாது. ரோகிணி நட்சத்திரத்தில் 29.11.2024 முதல் 4.2 2025 வரை குருபகவான் வக்ர மடையும் காலத்தில் புதிய சொத்து வாங்குதல். விற்றல் போன்றவைகளில் விழிப்புடன் இருக்க வேண்டும்.சொத்திற்காக தெரியாத நபரை நம்பி முன்பணம் கொடுக்க கூடாது. தாய் வழி உறவுகளிடம் அன்பாக பழக வேண்டும்.

  மாணவர்கள்

  ஒரு மனிதனிடம் உள்ள சொத்துக்களில் திருடப்பட முடியாத சொத்து கல்வி. 4ம்மிடமான கல்வி ஸ்தானத்தை எந்த கிரகமும் பார்க்கவில்லை என்பது மிகப் பெரிய நல்ல அமைப்பு. அதனால் கோட்சார கிரகங்களால் கல்விக்கு எந்த தடையும் இருக்காது. படிக்கும் ஆர்வம் கூடும். உயர் கல்விக்குத் தேவையான கடன் உதவி வங்கிகள் மூலம் கிடைக்கும். வெளியூர், வெளிநாடு சென்று கல்வி கற்றும் வாய்ப்பும் உள்ளது. 2025ல் பொதுத் தேர்வு எழுதும் மேஷ ராசி மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைவார்கள்.

  பெண்கள்

  மேஷ ராசிப் பெண்களுக்கு இது வாழ்வியல் மாற்றம் தரும் குருப்பெயர்ச்சியாகும். இதுவரை நிலையான உத்தியோகம், தொழில் இல்லாமல் கவலையடைந்த பெண்களுக்கு நிலையான நிரந்தரமான உத்தியோகம் கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு உங்களை உற்சாகப்படுத்தும். தொழில் வளர்ச்சி மற்றும் குடும்பத்திற்கு தேவையான பணம் கிடைக்கும். விண்ணப்பித்த கடன் தொகையும் வந்து சேரும். வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் நிலவிய குறைபாடுகள் அகலும். கணவர் மற்றும் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

   பரிகாரம்

  தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவினால் மேன்மையான பலன்களை அடைய வியாழக்கிழமை மாலை 5.30 - 6 மணிக்குள் குபேர லஷ்மியை வழிபட பலன்கள் இரட்டிப்பாகும்.

  மேஷம்

  குருபெயர்ச்சி பலன்கள் 2023

  வீரமான மேஷ ராசியினரே மேஷ ராசிக்கு குருபகவான் பாக்கியாதிபதி மற்றும் விரயாதிபதி. இதுவரை 12ம்மிடமான விரய ஸ்தானத்தில் சஞ்சரித்த குரு பகவான் ராசிக்குள் அடியெடுத்து வைக்கிறார். அக்டோபர் 30, 2023 வரை மேஷ ராசியில் உள்ள ராகுவுடன் இணைகிறார். இந்த குருப்பெயர்ச்சி முழுவதும் சனியின் மூன்றாம் பார்வை பெற்று பலன் தரப்போகிறார்.

  ஜென்ம குருவின் பலன்கள் :

  பாக்கியாதிபதியான குரு ராசியில் சஞ்சாரம் செய்வது சிறப்பு. அதுவும் 10, 11ம் அதிபதி சனியின் பார்வை பெறுவது தர்ம கர்மாதிபதியோகம். விரயாதிபதி குரு ராசியில் உள்ள ராகுவுடன் சேருவதால் செப்டம்பர் 30 வரைத் சுபத் தன்மை சற்று மட்டுப்படும். அதன் பிறகு பொறுமையும், திறமையும் மிளிரும். மனத் தடுமாற்றம் நீங்கும். விவேகத்துடன் செயல்படுவீர்கள்.

  நிதானம், தைரியம், தெம்பு குடிபுகும்.வெளியில் சொல்ல முடியாமல் தவித்த பல பிரச்சனைகள் குறையத் துவங்கும். கடந்த கால கசப்பான அனுபவங்கள், நிகழ்வுகளில் இருந்து விடுபடுவீர்கள். வங்கிகள், நிதி நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் நடத்துபவர்களுக்கு தொழில் வளர்ச்சி இரட்டிப்பாகும்.இதில் பணிபுரிபவர்களுக்கு தனித் திறமை வெளிப்பட்டு பொருளாதார முன்னேற்றம் உண்டாகும்.

  தந்தைவழி ஆதாயமும் அனுகூலமும், பூர்வீகச் சொத்தும், முன்னோர்களின் நல்லாசியும் நிரம்ப பெறுவீர்கள்.ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.கோவில் கட்டுதல், கும்பாபிசேகம் செய்தல், கல்வி நிறுவனம் துவங்குதல், தான தர்மம் செய்தல் போன்ற பாக்கிய காரியங்கள் செய்யும் ஆர்வம் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டு வாழ்க்கையில் விருப்பம் அதிகரிக்கும். இதுவரை சட்டத்திற்கு புறம்பாக வாழ்ந்தவர்கள் உண்மையையும், நேர்மையையும், சத்தியத்தையும் கடைப்பிடிப்பார்கள். மன சஞ்சலம் தீய எண்ணங்கள் குறைந்து நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

  குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள்:

  குருவின் 5ம் பார்வை ராசிக்கு 5ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பதிவதால் பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறுகிறது. இந்த இடத்திற்கு சனிப் பார்வையும் இருப்பதால் அதிர்ஷ்டத்தாலும், யோகத்தாலும், சுயமுயற்சியாலும் முன்னேற்றம் உண்டாகும். குலதெய்வ அனுகிரகம் உண்டு. குடும்ப பெரியோர்களின் வாழ்த்தும், ஆசிர்வாதமும் கிடைக்கும்.சாதாரண குடும்பமாக இருந்தாலும் இதுவரை எந்த வளர்ச்சியும் இல்லாதவர்களுக்கும் பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டாகும். பெரும் வாழ்வியல் மாற்றம் ஏற்படப்போகிறது. இதுவரை குழந்தையே பிறக்காது என்று மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்களுக்கும் குழந்தைப் பேறு உண்டாகும். குல கவுரவமும் சமுதாய அந்தஸ்தும் உயரும். பிள்ளைகளால் ஏற்பட்ட கெளரவ குறைச்சல் நீங்கும். பிள்ளைகளுக்கு முன்னேற்றமான வாழ்க்கை கிடைக்கும். தடைபட்ட சுப நிகழ்வுகள் ஒவ்வொன்றாக நடக்கத் துவங்கும்.

  குருவின் ஏழாம் பார்வை பலன்கள்:

  குருவின் 7ம் பார்வை ராசிக்கு ஏழாமிடத்தில் பதிகிறது. ஏழாமிடம் களத்திரம், நண்பர்கள், தொழில் பங்குதாரர் மற்றும் சம்பந்திகள் பற்றிக் கூறுமிடம். இதுவரை மகன், மகளுக்கு நல்ல வரன் அமையவில்லை என்று வருந்தியவர்களுக்கு பிள்ளைகளுக்கு திருமணம் நடத்திப் பார்க்கும் பாக்கியம் கிட்டும். உங்களை வேதனைப்படுத்திய சம்பந்தி இணக்கமாக பழகுவார்கள். சிலருக்கு சமுதாய அந்தஸ்து நிறைந்த நல்ல நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். சிலருக்கு புதிய கூட்டுத் தொழில் அல்லது தொழில் கிளைகள் துவங்கும் சந்தர்ப்பம் உருவாகும். கூட்டுத் தொழிலில் நிலவிய மனக்கசப்புகள் விலகி உற்சாகமும், நம்பிக்கையும் துளிர் விடும். நல்ல தகுதியும், திறமையும் நிறைந்த புதிய தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள்.தொழில், உத்தியோகத்திற்காக அல்லது கருத்து வேறுபாடு காரணமாக வெவ்வேறு இடங்களில் பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தம்பதிகள் இப்போது சேர்ந்து வாழத் துவங்குவார்கள். மனக்குழப்பங்கள் விலகி வாழ்க்கைப் பயணம் சுமூகமாகும்.

  குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள்:

  குருவின் 9ம் பார்வை ராசிக்கு ஒன்பதாமிடமான பாக்கிய ஸ்தானத்தில் பதிவதால் நடை, உடை, பாவனைகளில் கம்பீரம் உண்டாகும். தந்தையின் முழு ஆசிர்வாதமும், ஆதரவும் கிடைக்கும்.இதுவரை சொந்த வீடு, சொத்து இல்லாதவர்களுக்கு, வசதி இல்லாத வீட்டில் வசித்தவர்களுக்கு மன நிறைவான சொத்துக்கள் கிடைக்கும். வாகன வசதி மேம்படும். வயோதிகர்களுக்கு பேரன், பேத்தி பிறப்பார்கள். ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வரும் சந்தர்ப்பம் கிடைக்கும்.பெற்றவர்கள், உடன் பிறந்தவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்து பிறவிப்பயன் அடைவீர்கள். பூர்வீகச் சொத்துக்களை அனுபவிக்கும் பாக்கியம் கிட்டும். புனிதயாத்திரை, புனித நீராடல் மனதிற்கு ஆன்மாவிற்கும் புத்துணர்வு கொடுக்கும்.

  அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள் 22.4.2023 முதல் 21.6.2023 வரை

  கோட்சாரத்தில் ராசிக்கு ஏழில் சஞ்சரிக்கும் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் புதிய ஒப்பந்தங்கள் செயலாக்கம் பெறும். சமூக அந்தஸ்து அதிகமாகும். ஈடுபடும் காரியம் மனதிற்கு உத்வேகம் கொடுக்கும்.அடிவயிறு தொடர்பான உடல் உபாதைகள் சிகிச்சையில் பூரண குணமாகும். பகைவர்கள் விலகுவர்கள். வம்பு, வழக்குகளில் வெற்றி உண்டாகும். ஏழாமிட கேதுவால் விவகாரத்து வரை சென்ற தம்பதிகள் சேர்ந்து வாழத் துவங்குவார்கள். புதிய கடன்களைத் தவிர்ப்பது நல்லது.

  பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள் 22.6.2023 முதல் 17.4.2024 வரை

  மேஷ ராசிக்கு 2,7ம் அதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் போராட்டமே அன்றாட வாழ்க்கையாக இருந்த நிலை மாறி மனதில் குதூகலம் கூடும். உற்றார், உறவினர்கள், குடும்ப உறுப்பினர்களிடம் நிலவிய கருத்து வேற்றுமை விலகி ஒற்றுமை மேலோங்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு ஆதரவு மன மகிழ்ச்சியை தரும்.குடும்பத்தில் அமைதி நிலவும். ஆனந்தம் உண்டாகும். பணவரவில் நிலவிய தடை தாமதங்கள் விலகும். கொடுக்கல் வாங்கல் சுமூகமாகும். குடும்பத்திற்கு தேவையான ஆடை, ஆபரணங்கள் பொன், பொருள் சேர்க்கை மகிழ்ச்சியை அதிகரிக்கும். ராசியில் உள்ள ராகுவால் ஏற்பட்ட உடல் உபத்திரங்கள் நீங்கும்.

  கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள் 18.4.2024 முதல் 30.4.2024 வரை

  மேஷத்திற்கு பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதியான சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் பட்டது பூக்கும். தொட்டது துளிர் விடும். பங்குச்சந்தை, இன்சூரன்ஸ், தொழில் மூலம் அதிர்ஷ்ட வருமானம் கிடைக்கும். சிலருக்கு புதிய எதிர்பாலின நட்பு கிடைக்கும்.கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.முக்கிய விஷயங்களில் முடிவெடுக்க முடியாமல் இருந்து வந்த தயக்கம் நீங்கி தீர்க்கமான முடிவு எடுக்கும் மன உறுதி அதிகரிக்கும். சிலர் தங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணையை சந்திப்பார்கள்.

  குருவின் வக்ர பலன்கள்:

  4.9.2023 முதல் 26.11.2023 வரை பரணி நட்சத்திரத்திலும் 27.11.2023 முதல் 31.12.2023 வரை அசுவினி நட்சத்திரத்திலும் குரு பகவான் வக்ரம் அடையும் காலத்தில் சுய ஜாதகத்தில் ஒன்பதாமிடம் அசுப பலம் பெற்றால் பாரம்பரியத்தை கடைபிடிக்க தவறுவார்கள். முன்னோர்களின் நல்லாசி குறைவுபடும். தந்தை மற்றும் தந்தை வழி முன்னோர்களுடன் சண்டை சச்சரவு மிகுதியாக இருக்கும்.

  திருமணம் :

  திருமணமாகாதவர்களுக்கு திருமண நாள் நெருங்கி விட்டது. ராசிக்கு ஏழாம் இடத்திற்கு குருப் பார்வை கிடைப்பதால் கோட்சார ராகு, கேதுவால் ஏற்பட்ட திருமணத் தடை அகலும். பெற்றோர்கள், பெரியோர்கள் ஆசிர்வாதத்தால் குரு பலத்தாலும் திருமணம் நல்ல முறையில் நடக்கும். சிலருக்கு மறு திருமணமும் நடக்கும்.

  பெண்கள்:

  பெண்களுக்கு குடும்ப பொறுப்புகளால் வேலைப் பளு அதிகரிக்கும். உறவுகளுக்கு உங்கள் மேல் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். சில பெண்களுக்கு மாதர் சங்கங்களில் கவுரவப் பதவி கிடைக்கும். எங்கும், எதிலும் முன்னிலை வகிப்பீர்கள். உடல் எடை அதிகரிக்கும். வசீகரம் கூடும்.கணவன், மனைவி உறவில் நெருக்கம் கூடும். நீண்டகால ஆசைகள் நிறைவேறும்.

  மாணவர்கள்:

  போட்டி, பந்தயங்களில் ஜெயம் உண்டாகும். கல்வியில் அபாரமான முன்னேற்றமும், ஆர்வமும், திறமையும் அதிகரிக்கும். படிப்பிற்கு பெற்றோர்கள், ஆசிரியர்களின் உதவியும், ஆதரவும் திடைக்கும். 5,9மிடத்திற்கு குருப் பார்வை கிடைப்பதால் தடைபட்ட உயர் கல்வி முயற்சி இப்போது வெற்றி தரும்.

  உத்தியோகஸ்தர்கள் :

  உத்தியோகத்தில் உயர்வு கொடுப்பார். நிலையான வேலை, இல்லாதவர்களுக்கு நிரந்தரமான வேலை கிடைக்கும். அரசாங்க உத்தியோகம், அரச பதவி கிடைக்கும். எதிர்பாராத சலுகைகளும், கம்பெனி வாகன வசதியும், சம்பள உயர்வும் உண்டு. சக ஊழியர்களின் குற்றம் குறைகளை பெரிது படுத்தாமல் இருப்பது நல்லது.

  ராகு/கேது பெயர்ச்சி :

  அக்டோபர் 30, 2023ல் ராகு 12ம் மிடத்திற்கும் கேது 6ம்மிடத்திற்கும் செல்கிறார்கள்.இந்த காலகட்டத்தில் வெளியூர், வெளிநாட்டிலிருந்து வேலை வாய்ப்புகள் வந்து சேரும். தேவையில்லாத வீண் விரயங்கள் அதிகரிக்கும். புதிய முதலீடுகளுக்காக கடன் பெற வேண்டிய சூழ்நிலை உண்டாகும். சிலர் குடும்பத்தை விட்டு குறுகிய காலம் பிரிந்து வாழ்வார்கள்.

  பரிகாரம் : அனுபவ அறிவையும் தன்னைத்தானே உணரும் சக்தியையும் ஜென்ம குரு வழங்கப் போகிறார். பூர்வ புண்ணிய ஸ்தானமும், பாக்கிய ஸ்தானமும் ஒருங்கே பலம் பெறுவதால் அதிர்ஷ்டம் மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமையும்.மாதம் ஒரு முறை ஜென்ம நட்சத்திர நாளில் இயன்ற அன்னதானம் அல்லது அன்ன தானத்திற்கு சிறிய காணிக்கையை வழங்கவும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை அவல், வெல்லம் படைத்து மனதார வழிபட சகல பீடைகளும் அகலும்.

  பிரசன்ன ஜோதிடர்

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  மேஷம்

  குருப்பெயர்ச்சி பலன்கள் - 2023

  ஆற்றல் மிகுந்த மேஷராசியினரே ராசிக்கு 12 ல் குருபகவான் சஞ்சரிக்கிறார். ராசியில் ராகுவும் 7ல் கேதுவும், சனி பகவான் 10, 11ம் இடத்திலும் பயணிக்கிறார்கள்.

  12ம்மிட குருவின் பொதுபலன்கள்: மேஷத்திற்கு குரு 9,12ம் அதிபதி.9ம்மிடம் என்பது பாக்கிய ஸ்தானம்,12ம்மிடம் என்பது விரய ஸ்தானம், அயன, சயன ஸ்தானம். தூர தேச பயணத்தைக் குறிக்குமிடம். 12ம் இடத்திற்கு சனிப் பார்வை உள்ளது. 12ல் உள்ள குருவை சனி பார்ப்பது தர்ம கர்மாதிபதி யோகம்.

  சற்றேறக் குறைய இந்த யோகம் 17.1.2023 வரை உள்ளது. இது வரை உங்கள் முன்னோர்களும் நீங்களும் செய்ததர்மம் உங்களை காக்கும் நேரம். உழைப்பும் முயற்சியும் உங்களுக்கு வெற்றியை தரும். தொழில் சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். செய்யும் வேலையை சீரும் சிறப்புமாக செய்வீர்கள். செய்யும் தொழிலேதெய்வம் என்ற சிந்தனை இருக்கும். தொழில் ரீதியான புதிய நட்பு வட்டாரங்கள் கிடைக்கும். உயரிய சிந்தனை, செயல்திறன் இருக்கும். தொழிலுக்காக அடிக்கடி வெளியூர், வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ள நேரும்.

  வியாபாரத்தை முறையாக திட்டமிட்டு முழுமையாக செயல்படுத்தி வெற்றிக்கனியை சுவைப்பீர்கள். பொருளாதாரத்தில் சீரான சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தை தேடி அலைந்த கொண்டிருந்த உங்களுக்கு திறமை, முயற்சி, பொறுமை, உழைப்பு ஆகியவற்றை கற்றுக் கொடுத்து வெற்றியை தர குருவும், சனியும் தயாராகிவிட்டார்கள். உங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் பத்தாமிடசனியும், பனிரென்டாமிட குருவும், உழைப்புக்கேற்ற ஊதியத்தை நிச்சயம் வழங்குவார்கள். சனி தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால்இந்த கால கட்டத்தில் புதிய தொழில் துவங்கும் ஆர்வம் பலருக்கும் அதிகரிக்கும். இந்த குருப் பெயர்ச்சி முடியும் வரை புதிய தொழில் தொடங்குவதையும் பெரிய முதலீடுகள் செய்வதையும் தவிர்ப்பது நல்லது.

  பாக்கியாதிபதி விரய ஸ்தானம் செல்வதால் சிலர் பூர்வீகத்தை விட்டு ஜீவனத்திற்கு வெளியூர் அல்லது வெளிநாடு செல்லலாம். வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். சிலருக்கு சுப விரயம் ஏற்படலாம். சிலர் மன நிம்மதிக்காக பரவச நிலையை அடையச் செய்யும் பக்தி மார்க்க இயக்கத்தில் இணைந்து நிம்மதி தேடலாம். சிலர் இறைவனுக்கு தொண்டு செய்வதே என் கடமை என முழு நேர ஆன்மீகவாதியாக மாறலாம். சிலர் ஆன்மீகப் பணிகள், பொதுச் சேவை மற்றவர்களுக்கு உதவுதல் என நேரம் காலம் பார்க்காமல் தொண்டு செய்வீர்கள். சிலருக்கு சொத்து விற்பனையில் இழப்பு உண்டாகலாம். சிலர் ஒப்பந்த வேலைக்காக குறுகிய காலம் பூர்வீகத்தை விட்டு வெளியேறலாம். திருமண முயற்சிகள் இழுபறியாகும். ராசியில் ராகுவும் 7ல் கேதுவும் இருப்பது சிறப்பான பலன் அல்ல. கெட்ட சகவாசத்தை தவிர்ப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை வங்கி லாக்கரில் வைக்கவும்.

  5ம் பார்வை பலன்கள்:ராசிக்கு 4ம் இடத்திற்கு குரு மற்றும் சனியின் பார்வை உள்ளது. 4ம் இடம் என்பது சுகஸ்தானம், மாத்ரு ஸ்தானம். கல்வி, சொத்து சுகம் பற்றிக் கூறுமிடம். சனிப் பார்வையும் சேர்ந்து இருப்பதால் கல்வி சம்பந்தமான முயற்சிகள் கால தாமதத்திற்குப் பிறகு சித்திக்கும். வீட்டில் சுப நிகழ்வுகள் நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. தாயின் ஆசியும் உதவிகளும் கிடைக்கும். சனிப் பார்வை இருப்பதால் தாயின் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் இருந்தாலும் பாதகம் ஏற்படாது.

  தாய் வழிச் சொத்திற்காக தாய் மாமனுடன் நிலவிய கருத்து வேற்றுமை சீராகும். இதுவரை வாகன யோகம் இல்லாதவர்களுக்கு அசையும் சொத்து பிராப்தம் உண்டாகும். சிலர் செகண்ட் ஹேண்ட் வாகனம் வாங்கி பயன்படுத்துவார்கள். சிலர் கடன்பட்டு புதிய வீடு கட்டி குடியேறுவார்கள். சிலர் வாஸ்துப் படி வீட்டை திருத்தி அமைப்பார்கள். சிலர் வாடகை வியாபார ஸ்தலத்தை சொந்தமாக்கி கொள்வார்கள். சிலர் தொழிலுக்கு புதியதாக கட்டடம் கட்டும் யோகம் உண்டாகும். பூமி சம்பந்தமாக இருந்த வம்பு வழக்கு, தடை, தாமதங்கள் சீராகும். பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை சுமுகமாகும்.சிலர் பணத் தேவைக்கு சொத்துகளை விற்கும் வாய்ப்பும் உள்ளது. இந்த காலகட்டத்தில் பலர் குறைந்த முதலீட்டில் சில்லறை வணிகம் தொடங்குவார்கள் அல்லது சிலர் முதலீடு இல்லாத பேச்சை மூலதனமாக கொண்ட தொழில் துவங்கி புகழ், சம்பாத்தியம் கிடைக்கப் பெறுவார்கள்.

  7ம் பார்வை பலன்கள்:குருவின் 7ம் பார்வைராசிக்கு 6ம் இடத்திற்கு உள்ளது. 6ம் இடம் என்பது ருண, ரோக, சத்ரு ஸ்தானம். வாங்கிய கடனை திருப்பி செலுத்தக் கூடிய மார்க்கம் தென்படும். ஒருவரின் சம்பாத்தியத்தில் அடிப்படை தேவைக்கே சிரமப்பட்ட குடும்பங்களுக்கு பிள்ளைகளின் மூலம் உபரி வருமானம் வரலாம். சிலருக்கு கடன் வழங்க நிதி நிறுவனங்கள் போட்டி போட்டு வீட்டு வாசலுக்குச் வருவார்கள்.

  புதுக் கடன் வாங்கி பழைய கடனை அடைக்கலாம்.பணம் தொடர்பான வழக்குகள் தள்ளுபடியாகும். சிலருக்கு வேலைப் பளு மிகுதியால் மிகுதியான உடல் அசதிஇருக்கும். நோயின் தன்மை புரியாமல் பல நாட்களாக பல ஆஸ்பத்தரிக்கு அலைந்தவர்களுக்கு நோய்க்கான காரணம் புரியும். மிகக் குறைந்த செலவில் மாற்று வைத்தியத்தில் நோய் குணமாகும். சிலர் உடல் நல பாதிப்பிற்கு மருத்துவமனையில் தங்கிவைத்திய செலவு செய்ய நேரும். சிலர் நண்பர்களுக்கு ஜாமீன் பொறுப்பேற்று அசலையும், வட்டியையும் சேர்த்து கட்டுகிற நிலை ஏற்படும். ஜென்மத்தில் ராகு இருப்பதால் எளிதில் அண்டை, அயலார் மற்றும் நண்பர்கள் மூலம் பகை உண்டாகும். சிலருக்கு தொழில், உத்தியோக ரீதியாக புதிய எதிரிகள் உருவாகுவார்கள். எனினும் 6ம் இடத்திற்கு குருப் பார்வை இருப்பதால் அனைத்தும் தவிடு பொடியாகும்.

  9ம் பார்வை பலன்கள்:குருவின் 9ம் பார்வை ராசிக்கு 8ம் இடத்திற்கு பதிகிறது. 8ம்மிடம் என்பது வம்பு, வழக்கு , விபத்து அவமானம், அசிங்கம் போன்றவற்றைக் குறிக்குமிடம்.ஒரு மனிதனுக்கு ஏற்படும் பிரச்சனையை இரண்டாக வகைப்படுத்தலாம். முதல் வகை விதி வசத்தால் தானாக வருவது.

  இரண்டாவது ரகம் வம்பை விலை கொடுத்து வாங்குவது. முதல் வகைப்படி வழக்குகளில் சாதகமான தீர்ப்பு ஏற்படாது. மலைபோல் நம்பிய நபர்கள் ஏமாற்றலாம். உடன் பிறந்தவர்கள், நண்பர்கள், உறவுகள் ஏமாற்றலாம். அல்லது சூழ்நிலை கைதியாக யாரோ செய்த குற்றத்திற்கு தண்டனை அனுபவிக்கலாம்.

  குடும்பச் சொத்துக்கள் கைமாறிப் போகலாம். இரண்டாவது வகைப்படி பேசியே குடும்ப உறவுகளை வதைக்தலாம். தவறான உணவுப் பழக்கத்தால் கூடாத நட்பால், போதைப் பழக்கத்தால் தீராத நோயை வரவழைக்கலாம். சட்டத்திற்கு புறம்பான விசயத்தில் ஈடுபட்டு சட்டத்தின் பிடியில் சிக்கலாம். அதிர்ஷ்டத்தின் மேல் நம்பிக்கை வைத்து லாட்டாரி, ரேஸ் என பணத்தை இழக்கலாம்.

  கணவரின் ஆரோக்கிய குறைபாட்டால் கவலை அடைந்த பெண்களுக்கு நிம்மதி கிடைக்கும். ஆயுள் குறைபாடு நீங்கும். மாங்கல்ய தோஷம் நீங்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டில் வசித்த தந்தை சொந்த ஊர் திரும்புவார்.

  குருவின் வக்ர பலன்: 29.7.2022 முதல் 23.11.2022 வரை

  குருபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரம் அடையும் காலத்தில் காரிய அனுகூலம், பொருளாதார வளர்ச்சி, குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் தொழில் விருத்தியை ஏற்படுத்தி தருவார். மனம் பற்றற்ற நிலையை விரும்பும். எதிர்மறை எண்ணங்கள் சீராகும். தீய, கெட்ட சிந்தனைகள் நீங்கி தெளிவு பிறக்கும். அவமானங்கள், அவ நம்பிக்கைகள் விலகி குடும்ப பிரச்சனைகள் பேச்சு வார்த்தையின் மூலம் சுமூகமான முடிவிற்கு வரும். கடனுக்காக அல்லது குடும்ப பிரச்சனைக்காக தலைமறைவாக வாழ்ந்தவர்கள் வீடு திரும்புவார்கள்.

  சிலருக்கு தனிமையாக வாழ வேண்டும் என்ற உணர்வு சற்று மிகைப்படுத்தலாக இருக்கும்.மனம் எளிமையை விரும்பும்.ஓய்விற்காக வெளியூர், வெளிநாட்டில் வசிக்கும் மகன் அல்லது மகள் வீட்டிற்குச் சென்றவர்கள் வீடு திரும்பலாம்.சிலர் இரண்டாவது தொழில் தொடங்கும் எண்ணம்அதிகரிக்கும். பண விஷயத்தில் சற்று நெருக்கடி குறையும். பங்குச் சந்தை முதலீட்டில் ஆதாயம் உண்டாகும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். திருமண முயற்சிகள் பலிதமாகலாம்.

  பெண்கள்: பெண்கள் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் பெருமை சேர்ப்பீர்கள். வீட்டிலும் வேலை பார்க்கும் இடத்திலும் பணிச்சுமை மிகுதியாகும்.பொறுப்புகள் அதிகரிக்கும். பெண்கள் ஆடம்பரச் செலவைக் குறைத்து சிக்னமாக வாழ முயற்சிக்க வேண்டும். உற்றார் உறவினர்கள் மத்தியில் உங்கள் கவுரவம் உயரும். விலை உயர்ந்த பொருட்களை நண்பிகளுக்கு இரவல் கொடுப்பது, வாங்குவதை தவிர்க்கவும்.

  பரிகாரம்:தினமும் திருக்கோளற்றுப் பதிகம் பாராயணம் செய்யவும். நவகிரக குருவிற்கு நாட்டு சர்க்கரை வைத்து வழிபட்டு தானம் வழங்க விரயம் கட்டுப்படும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  மேஷம்

  2022 குருப்பெயர்ச்சி பலன்கள் : வீரமான மேஷராசியினரே.. இதுவரை ராசிக்கு பத்தாம் இடத்தில் சஞ்சாரம் செய்த குருபகவான் இனி

  வீரமான மேஷராசியினரே.. இதுவரை ராசிக்கு பத்தாம் இடத்தில் சஞ்சாரம் செய்த குருபகவான் இனி பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்திற்குச் செல்கிறார். சனி பகவான் பத்தாம் இடத்தில் ஆட்சி பலம் பெற்று இருக்கிறார். இரண்டாமிடத்தில் ராகுவும் எட்டாமிடத்தில் கேதுவும் சஞ்சாரம் செய்கிறார்கள்.

  மேஷ ராசிக்கு குரு ஒன்பது மற்றும் பனிரென்டாம் அதிபதி. அதாவது பாக்கியாதிபதி, விரயாதிபதி. லாப ஸ்தானத்தில் குரு சஞ்சாரம் செய்வது சுபித்துச் சொல்லக்கடிய பலன். ஆனால் விரையாதிபதியாகி லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பது சுபம் அல்ல. மேலும் லாப ஸ்தானமே பாதகஸ்தானமாக இருப்பதால் சாதகமும், பாதகமும் கலந்த பலனே உண்டு. குரு நின்ற இடத்தின் மூலம் கிடைக்கும் பலன்கள் மத்திமப்பட்டாலும் பார்வை பதியும் இடங்களான மூன்று, ஐந்து, ஏழாம் இடங்கள் மூலம் ஏற்றமான பலன்கள் உண்டு என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

  லாப குருவின் பலன்கள்: பாக்கியாதிபதி உப ஜெய ஸ்தானத்தில் அமர்வதால் பழம் நழுவி பாலில் விழுந்தது போல் அனைத்துவிதமான அதிர்ஷ்டங்களும் தேடி வரும். நேர்மறை எண்ணங்கள் தோன்றும். மனக் குழப்பம் விலகி நிம்மதியும் மகிழ்சியும் அதிகரிக்கும். மனதை வாட்டிய அனைத்துப் பிரச்சனைகளும் ஒவ்வொன்றாக தீரும். நினைத்ததெல்லாம் நிறைவேறும்.

  தந்தையின் ஆசியும், ஆஸ்தியும் கிடைக்கும். தந்தை எழுதும் உயில் உங்களுக்குச் சாதகமாக இருக்கும். தடையாக இருந்த மூத்த சகோதரர் விட்டுக் கொடுப்பார். உடன் பிறந்த சகோதர, சகோதரி வகையில் ஒத்துழைப்பும் சகாயமும் உண்டாகும். வயது முதிர்ந்தவர்களுக்கு பேரன், பேத்தி கிடைக்கும்.

  வேலை பளு அதிகம் இருந்தாலும் உழைத்த வருமானத்தைத் பார்த்த உடன் தெம்பு வரும். நிரந்தர வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். கொரோனாவால் வேலை இழந்த வர்களுக்கு மீண்டும் நல்ல வேலை கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை மகிழ்விக்கும் விதமாகவே இருக்கும். சிலருக்கு கம்பெனியின் மூலம் வெளிநாடு சென்று பணிபுரியும் சந்தர்ப்பம் கிடைக்கும். உடன் வேலை பார்ப்பவர்களிடையே நல்லிணக்கம் நீடிக்கும். அரசாங்க வேலையில் மெமோ வாங்கியவர்கள் மீண்டும் பணியில் சேர உத்தரவு வரும்.

  தொழிலில் சாதனை செய்யக் கூடிய புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். சீரான தொழில் வளர்ச்சியால் மன நிம்மதி ஏற்படும். தொழிலாளர்கள் ஒத்துழைப்பு நல்குவார்கள்.

  தொழிலதிபர்களுக்கு அரசின் மானியம் மற்றும் உதவி கிடைக்கும்.அதன் மூலம் அதிர்ஷ்ட வருமானம் கிடைக்கும். தொழில், பங்குச் சந்தை என வருமானம் வரும் வழியை கணக்கிட முடியாது வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். புதிய தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். பழைய கூட்டாளிகளிடமிருந்த மனக்கசப்பு மாறும்.

  நல்ல பணப்புழக்கம் ஏற்படும். பற்றாக்குறை பட்ஜெட் உபரி பட்ஜெட்டாகும். கடன் தொல்லை குறைய ஆரம்பிக்கும். கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் திணறியவர்களுக்கு இடைக்கால நிவாரணம் கிடைக்கும். பங்குச் சந்தை லாபம் மகிழ்ச்சி தரும்.

  குறுகிய காலத்தில் எதிர்பார்க்காத பல மாற்றமும், முன்னேற்றமும் தேடி வரும். வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களின் வாழ்க்கைத் தரம் உயரும். ஆடம்பர வெளிநாட்டுப் பொருட்களை வாங்கி வீட்டை விருப்பம் போல் அழகுபடுத்துவீர்கள்.

  விரயாதிபதியாகி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் 2.3.2022 முதல் 13.4.2021 வரை சிந்தித்து நிதானத்துடன் செயல்பட வேண்டும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் கிடைத்த ஆதாயம், சலுகைகள், முன்னேற்றம் தடைபடும். எதிர்பாராத இழப்புகள் துயரத்தில் ஆழ்த்தும். அண்டை அயலாருடன் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றி மன சஞ்சலத்தை மிகுதிப்படுத்தும். தந்தை வெளிநாடு செல்வார்.

  வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். சிலருக்கு மதம் மாறும் எண்ணம் மேலோங்கும். சுய ஜாதகத்தில் எட்டு, பனிரென்டாம் இடத்துடன் சம்பந்தம் பெறும் தசை, புத்தி அசுபத் தன்மையுடன் நடப்பவர்களுக்கு சிறை தண்டனை கிடைக்கலாம். கைகால், மூட்டு வலி போன்ற சிறு சிறு உடல் உபாதைகள் இருக்கும். கண் பார்வைக் குறைபாடு, புறை வளர்தல் போன்ற பாதிப்புகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய நேரிடும்.

  கோட்சாரத்தில் எட்டாமிடத்தில் சனியின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் கேதுவால் எதிர்பாராத புதிய கோர்ட், கேஸ் வம்பு வழக்கு உருவாகலாம். வயோதிகர்களுக்கு ஆயுள், ஆரோக்கியம் பற்றிய சிந்தனை பய உணர்வு இருக்கும்.

  வெகு சிலருக்கு விபரீத ராஜ யோகமாக திடீர் தனலாபம், உயில் சொத்து கிடைக்கும். லாப ஸ்தானத்தில் நின்று குரு கொடுக்கும் பலன்களை எட்டாமிட கேது தட்டிப் பறிக்க முயன்றாலும் வெற்றி உங்களுக்கே என்பதில் சிறிதும் ஐயமில்லை.

  ஐந்தாம் பார்வை பலன்கள்: உப ஜெய ஸ்தானமான மூன்றாம் இடத்திற்கு குருவின் ஐந்தாம் பார்வை இருப்பதால் சிறிய முயற்சியில் பெரிய வெற்றி கிடைக்கும். புகழ், அந்தஸ்தை, உயர்த்தக்கூடிய கவுரவப் பதவிகள் தேடிவரும். இதுவரை திருமணம் பற்றிய சிந்தனை இல்லாதவர்களுக்கும் திருமண ஆசை வரும். மேஷ ராசி குழந்தைகளுக்கு இளைய சகோதரம் பிறக்கும். நிலையான வேலையில்லாத இளைய சகோதரத்திற்கு நிரந்தர வேலை கிடைக்கும், திருமணம் நடக்கும்.

  தகவல் தொடர்பு, பத்திரிக்கை மற்றும் ஐடி துறையில் உள்ளவர்களுக்கு ஏற்றம் உண்டு. அலைச்சல் மிகுந்த பயணம் அதிகரிக்கும். சிலருக்கு வீடு மாற்றம், வேலை மாற்றம் உண்டாகும்.வெகு சிலருக்கு மாமனார் மூலம் தொழில் விருத்தி திடீர் அதிர்ஷ்டம் உண்டு. ஞாபக சக்தி அதிகரிக்கும். சொத்துப் பத்திரம், உயில் பத்திரம், ஜாமீன் பிரச்சனை, போன்றவற்றில் இருந்த சர்ச்சைகள் அகலும்.கண் மறைவாக இருந்த தொலைந்த ஆவணங்கள் கிடைக்கும்.

  அடகு வைத்த நகைகள் மீண்டு வரும். வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் சொந்த வீடு கட்டி குடியேறும் வாய்ப்பு கிடைக்கும். சிலர் பழைய வீட்டை நவீன வசதிகளுடன் மாற்றி கட்டுவீர்கள். காது, மூக்கு தொண்டையில் இருந்த குறைபாடுகள் வைத்தியத்தில் கட்டுப்படும். வெகு நாட்களாக இழுபறியாக இருந்த நீதிமன்ற வழக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக முடியும்.

  ஏழாம் பார்வை பலன்: குருவின் ஏழாம் பார்வை ஐந்தாம் இடத்தில் பதிவதால் பூர்வ புண்ணிய ஸ்தானம் வலிமை பெறும். உடலுக்கும் ஆன்மாவுக்கும் புத்துணர்வு கிடைக்கும்.

  இதுவரை ஆழ்மனதில் இருந்த நிறைவேறாத நியாயமான ஆசைகள் நிறைவேறும். திட்டங்கள் வெற்றியடையும். வீட்டில் பிள்ளைகளுக்கு திருமணம், வளைகாப்பு, பூப்புனித நீராட்டு விழா போன்ற சுப காரியங்கள் நடக்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் பெருமை அடைவீர்கள். இளம் தம்பதிகளுக்கு புத்திர பிராப்த்தி உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு அரசியலில் மிகப் பெரிய பதவிகளும் பொறுப்புகளும் தேடி வரும். பதவியுடன் பெரும் பணமும் கிடைக்கும். தேர்தல் காலத்தில் கொடுத்த நிறைவேற்ற முடியாத வாக்குறுதியால் பொதுமக்களின் அதிருப்தியையும் வம்பு வழக்கையும் சந்திக்க நேரும்.

  பூர்வீகச் சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். குல, இஷ்ட தெய்வப் பிரார்த்தனை நிறைவேறும். சிலருக்கு மத போதனையில் ஆர்வம் பிறக்கும். வெகு சிலர் நல்ல மடத்தில் போய் சந்தியாசியாக செட்டில் ஆகிவிடுவார்கள். ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். தர்ம காரியங்களில் நாட்டம் ஏற்படும். மாணவ மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்தி அதிக மதிப்பெண்ணையும் பாராட்டையும் பெறுவீர்கள்.பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவும் ஆலோசனையும் புத்துணர்வு தரும் விதமாக இருக்கும்.வேற்று மொழியை பிரதானமாக எடுத்து படிக்கும் மாணவர்களுக்கு பாராட்டு கிடைக்கும்.

  கல்லூரி மற்றும் முதுகலை பட்டப் படிப்பு, ஆராய்ச்சி கல்வி படிப்பவர்களுக்கு சாதகமான காலம். கலைத்துறையினருக்கு விரும்பிய வாய்ப்புகள் தேடி வரும்.

  ஒன்பதாம் பார்வை பலன்கள்: குருவின் ஒன்பதாம் பார்வை ஏழாம் இடத்தில் பதிகிறது. சனியின் பார்வையும் ஏழாம் இடத்திற்கு இருப்பதையும் மறக்க கூடாது. 2ல் ராகு 8ல் கேது இருப்பதால் திருமணத் தடை ஏற்படும். இரண்டாம் திருமணத்திற்கு முயற்சிப்பவர்களுக்கு திருமணம் நடக்கும். வேற்று மொழி பேசும் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

  குடும்பத்தை விட்டுப் பிரிந்த உறவுகள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். உறவினர்கள், சம்பந்திகள் வகையில் சந்தோஷமும், சகாயமும் ஏற்படும். கமிஷன் ஏஜென்சி, டிராவல்ஸ், ஷேர் டிரேட், வெளிநாட்டு வேலை வாங்கித் தரும் நிறுவனங்கள், வங்கிகள் ஏற்றம் பெறும்.

  இல் வாழ்க்கை இனிமையாகும். தம்பதிகளிடையே நிலவிய கருத்து வேறுபாடு குறையும். வேலை இல்லாமல் இருந்த வாழ்க்கை துணைக்கு விரும்பிய வேலை கிடைக்கும். தொழில் உத்தியோகம் காரணமாக வெளிநாடு அல்லது வெளி மாநிலம் செல்ல நேரும். தந்தையின் ஆரோக்கியம் சீராகும். தந்தையுடன் இருந்த கருத்து வேறுபாடு குறையும். பித்ருக்கள் தொடர்பான வழிபாட்டில் காரிய சித்தி கிடைக்கும். பல தலைமுறையாக தீர்க்கப்படாத பித்ருக்கள் தோஷத்தை சுய ஜாதக வலிமை பார்த்து தில ஹோமம் செய்து சரி செய்ய ஏற்ற நேரமாகும்.

  பெண்கள்: பிறந்த மற்றும் புகுந்த வீட்டின் ஆதரவு மகிழ்சியை தரும். நீண்ட நாள் சுய தொழில் கனவு பலிதாமாகும்.எதிர்பார்த்த பிறந்த வீட்டு சொத்து வந்து சேரும். காணாமல் போன பொருட்கள் கிடைக்கும். அடமானப் பொருட்கள் மீண்டு வரும். கணவர் தங்க ஆபரணங்கள் மற்றும் அழகு ஆடம்பர பொருட்கள் வாங்கிக் கொடுத்து மகிழ்விப்பார்.

  கணவரின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆக இந்த குருப்பெயர்ச்சியில் மேஷ ராசியினரின் வயதிற்கும், தகுதிக்கும், திறமைக்கும் ஏற்ப அபரிமிதமான சுபபலன்கள் உண்டு.

  பரிகாரம்: வீடு மற்றும் தொழில் நிறுவனத்தில் குல தெய்வத்தின் படம் வைத்து வழிபட வெற்றி வாய்ப்பு மற்றும் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். வியாழக்கிழமை பகல் 12 &- 1 வரையான சனி ஒரையில் சிவனடியார்களுக்கு இயன்ற உணவு தானம் செய்து வரவும். அதே நேரத்தில் அந்தணர்களுக்கு தானியங்கள் மற்றும் வஸ்திர தானம் தர மேன்மை உண்டாகும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×