என் மலர்tooltip icon

    கும்பம் - Kumbam

    ஆங்கில புத்தாண்டு ராசிப்பலன் 2023

    புகழை விரும்பும் கும்ப ராசியினருக்கு ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உங்களின் கவுரவம், செல்வாக்கு உயரக்கூடிய ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும். ஜென்மச் சனியின் காலம் என்பதால் சில நேரங்களில் யோசிக்காமல் சில விசயங்களில் ஈடுபட்டு அதனால் சங்கடங்களை சந்திக்க நேரும். எத்தகைய இடைஞ்சல்கள் வந்தாலும் அவற்றை விரட்டிய டித்திடக்கூடிய வலிமை உண்டாகும். சிந்தித்து நிதானமாக செயல்பட்டால் உங்கள் முயற்சிகள் வெற்றி தரும் நல்ல ஆண்டாக அமையும் என்பதில் ஐயமில்லை.

    குருவின் சஞ்சார பலன்கள்:

    கும்ப ராசிக்கு 2, 11ம் அதிபதியான குரு பகவான் ஏப்ரல் 22, 2023 வரை மீனத்தில் ஆட்சி பலம் பெறுகிறார். அதன் பிறகு 3ம்மிடம் சென்று ராகுவுடன் இணைந்து சனி பார்வை பெறுகிறார்.மிகுதியான பொருள் வரவு இருக்கும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு தொட்டது துலங்கும். இரட்டிப்பு வருமானம் உண்டாகும். தொழிலில் நிலையான நிரந்தரமான வருமானம் கிடைக்கும். இதுவரை வேலைக்கு செல்லாமல் இருந்தவர்கள் கூட வேலைக்கு சென்று குடும்பத்தை கவனிப்பார்கள்.

    குடும்ப உறவுகளுடன் ஒட்டாமல் வாழ்ந்தவர்கள் உறவுகளின் அவசியத்தை புரிந்து கொள்வார்கள். அடிப்படை தேவைக்கு திணறியவர்கள் தாராள தன வரவால் தன்நிறைவு அடைவார்கள். தம்மைச் சார்ந்தவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வார்கள்.

    பொன், பொருள் ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். உற்றார், உறவினர், குடும்ப உறவுகள் அண்டை, அயலார் மத்தியில் உங்கள் பேச்சிற்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வாக்கு வன்மை பெறும். கண், பல் தொடர்பான பிரச்சனைக்கு வைத்தியம் செய்ய நேரும்.சுப காரியங்கள் நடக்கும். சிலருக்கு நேரத்திற்கு உண்ண முடியாமல் வேலைப்பளு மிகுதியாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

    சனியின் சஞ்சார பலன்கள்:

    கும்ப ராசி அதிபதி மற்றும் விரயாதிபதியாகிய சனி பகவான் ஜனவரி 17, 2023 முதல் ஜென்மச் சனியாக ராசியில் அமர்கிறார். ஜென்மச் சனி மிகவும் துயரமான காலம் தான். மனம் மற்றும் உடலை கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பது நல்லது. பூர்வீகம் தொடர்பாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வருவதில் சற்று கால தாமதம் ஏற்படும். பொருளாதார நிலையில் கடுமையான ஏற்றத்தாழ்வு இருக்கும். ஏற்றத் தாழ்வை சமாளிக்க கடன் பெறும் சூழல் உருவாகும். ராகு கேது மற்றும் குருவால் மறைமுக நெருக்கடிகள், கடன் தொடர்பான சர்ச்சைகள் முழுமையாக விலகி தொழிலில் பல்வேறு வெற்றிகளை அடைவீர்கள்.

    தொழிலில், நிலவி வந்த சிக்கல்கள் நீங்கும். அதிக முதலீடு கொண்ட செயல்களைத் தவிர்க்கவும். இயன்றவரை வேலையை மாற்றாமல் இருப்பது நல்லது. சுபச் செய்திகளால் சுபவிரயங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க நேரிடும். உடல் சோர்வால் எண்ணிய பணிகளை முடிப்பதில் காலதாமதம் ஏற்படும். தாய் மாமன் உறவுகளால் அனுகூலம் கிடைக்கும்.

    ராசி அதிபதி சனி ஏப்ரல் மாதத்திற்கு மேல் தனலாப அதிபதி குருவை பார்வையிடுவதால் தொழில் அபிவிருத்தி உண்டாகும். வர வேண்டிய தொகைகள் வந்து சேரும்.உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தொழில் மாற்றமும் .இட மாற்றமும் ஏற்படலாம். அரசுப் பணியாளர்கள் ஆதாயம் அடைவார்கள். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பு கூடி வரும். வீடு கட்டுதல், மற்றும் வாங்குதல் தொடர்பான பணிகள் தடையில்லாமல் நடந்து முடியும். வங்கியில் கடன் உதவி பெறுவதற்கு ஏற்ற காலம் .

    ராகு/கேதுவின் சஞ்சார பலன்கள்:

    அக்டோபர் 30, 2023 வரை ராசிக்கு 3ல் ராகுவும், 9ல் கேதுவும் நிற்கிறார்கள். அதன் பிறகு ராசிக்கு 2ல் ராகுவும், 8ல் கேதுவும் மாறுகிறார்கள்.வழக்கு வெற்றிகள் சாதகமாகும் அல்லது தள்ளிப்போகும். இடைக்கால நிவாரணம் கிடைக்கும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், புதையல் லாட்டரி , உயில் மூலம் எதிர்பாராத வகையில் பண வரவு வரும். தந்தை வழி சுற்றத்துடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு அதிகரிக்கும். தொழிலை தக்க வைத்துக்கொள்ள சில முதலீடுகள் செய்ய நேரிடும்.

    நண்பர்களுக்காக பணம் கடன் வாங்கி கொடுத்து அந்த கடனை நீங்களே ஏற்றுக் கொள்ள நேரும். பத்திர அடமானத்தின் மேல் கடன் பெற்று தவணை முறையில் அசலையும் , வட்டியையும் கட்டி அடமானப் பொருளை இழக்க நேரும என்பதால் அதிக கவனம் தேவை. யாருக்கும் ஜாமீன் போடக்கூடாது. கணவன் மனைவியர் தங்களின் பிரச்சனையை தாங்களே அடுத்தவர்களின் தலையீடு இல்லாமல் சரி செய்து கொள்வது உயர்வைத் தரும்.

    திருமணம்: ஜென்ம ராசியில் நிற்கும் சனியின் ஏழாம் பார்வை களத்திர ஸ்தானத்தில் பதிவதால் சுய ஜாதக கிரகங்களின் வலிமையை பொருத்தே திருமண வாய்ப்பு கூடி வரும்.காதல் விவகாரங்கள் ஒத்திப்போடுவது நல்லது.

    பெண்கள்: பெண்கள் நினைத்தால் சாதிக்க முடியாது எதுவுமே இல்லை. சோதனைகளை சாதனைகளாக மாற்றும் வலிமை பெற்றவர்கள் பெண்கள். பெண்களின் சுய தொழில் முயற்சி கைமேல் பலன் கிடைக்கும். விரயம் என்பது முடிவாகிவிட்ட ஒன்று என்பதால் வீடு, மனை,வாகனம், கல்யாணம், நகை என்று சுப விரயமாக மாற்றுவது உங்கள் கையில் தான் இருக்கிறது. அதனால் இந்த புத்தாண்டை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் உங்கள் கையில் தான் உள்ளது.

    மாணவர்கள்: ஜென்மச் சனியின் காலமாக இருந்தாலும் கல்வியில் எந்த தடங்களும், தடையும் இருக்காது என்பதால் பெற்றோர்களும், மாணவர்களும் பயப்படத் தேவையில்லை. கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். எதிர் காலத்தை நோக்கி உங்கள் சிந்தனை இருக்கும். தேர்வில் முழு கவனம் இருக்கும்.

    அவிட்டம் 3, 4: திட்டமிட்டு செயல்படுவீர்கள்.எதிர்காலத் தேவைக்கான இன்சூரன்ஸ் பாலிசி அல்லது நலத்திட்டங்களில் சேமிப்பு போன்ற சுப செலவுகள் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும்.

    உங்களின் தனித்துவம் மிகுந்த பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். அரசில்வாதிகள் தேர்தல் கால வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பேச்சை தொழிலாக கொண்டவர்களுக்கு அற்புதமான நல்ல நேரம். வருமானம் உயரும் . வேலை செய்யுமிடத்தில் விரும்பிய மாற்றங்கள் உண்டு. ஏழரைச் சனியின் தாக்கம் வெகுவாக அதிகரிக்கும்.. சகோதர்களால் வீண் விரயம் உண்டு. குழந்தைகளின் கல்வியில் அதிக கவனம் செலுத்துவீர்கள். கருத்து வேறுபாட்டால் இழந்த பழைய வேலை மீண்டும் கிடைக்கும்.

    அரசிடமிருந்து வீடு, வீட்டு மனை அல்லது வீடு கட்டத் தேவையான நிதியுதவி கிடைக்கும்.சில சமூக ஆர்வளர்க்களுக்கு அரச கவுரவம் கிடைக்கும்.வயது முதிர்ந்தவர்களுக்கு அரசின் உதவித் தொகை கிடைக்கும். விவசாய நிலத்திற்கு புதிய ஒப்பந்ததாரர், குத்தகைதாரர்கள் கிடைப்பார்கள்.

    பரிகாரம்: சஷ்டி திதியில் விநாயகருக்கு எருக்கம் பூ மாலை சாற்றி வழிபடவும்.

    சதயம்: சுப விரயங்கள் செய்ய உகந்த காலம். அரசியல் பிரமுகர்கள் அதிக நன்மை பெறுவார்கள்.. கடன் பெற்று சொந்த வீடு வாங்குவீர்கள். நிலைமை சீராகும் போது கடன் தானாக அடைபட்டு விடும். அலைச்சலும், அசதியுமான உள்ளுர், வெளியூர், வெளிநாட்டு தொழில் பயணங்கள் உண்டாகும். பிராயணங்களால் ஆதாயம் உண்டு.சிலருக்கு வீடு மாற்றம் அல்லது வேலை மாற்றம் உண்டாகும்.வாழ்க்கைக் துணையுடன் நல்ல புரிதல் உண்டாகும். உடல் நிலை மேம்படும். மறுமண முயற்சி சித்திக்கும். மாமனாரின் மூலம் உதவி கிடைக்கும்.எதிரிகளின் பலம் குறையும். தொழிலால், தொழில் கூட்டாளிகளால் நன்மை உண்டாகும். பெற்றோர்கள், உடன் பிறந்தவர்களின் ஆதரவு இருக்கும். குல தெய்வ வழிபாடு செய்வீர்கள். சுருக்கமாக பல விதமான நற்பலன்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

    பரிகாரம்: வாயில்லா ஜீவன்களுக்கு இயன்ற உணவு வழங்க நிதி நெருக்கடி குறையும்.

    பூரட்டாதி 1, 2, 3: சகாயமான வருடம். அடமானச் சொத்துக்கள் மீண்டு வரும்.பழைய வாகனத்தை கொடுத்து விட்டு புதிய வாகனம் வாங்கலாம். லஞ்சம் கொடுத்து அரசு வேலைக்கு முயற்சி செய்யும் சிந்தனை தோன்றும். குடும்பத்தில் இழந்த சந்தோஷம் மீண்டும் துளிர்விடும். புதிய தொழில் முயற்சிக்கு தேவையான நிதியுதவி கிடைக்கும்.தொழில் உத்தியோகம் நிமித்தமாக பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவார்கள். வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் சிறு சுணக்கம் உண்டாகும். அக்கம் பக்கத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை மாறும்.எடுக்கப்பட்ட முயற்சிக்கான முழு பலனும் அங்கீகாரமும், வெற்றியும் உண்டு. நாணயம் நீடிக்கும். அரசியல்வாதிகளுக்கு பொதுஜன ஆதரவு அதிகரிக்கும். பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சீதனம் மகிழ்சியைத் தரும்.

    பிள்ளைகளால் மகிழ்சியும் பெருமையும் உண்டாகும். அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும். வாழ்க்கையை நகர்த்துவதில் எந்தவித சிரமமும் இருக்காது. உங்களுடைய முயற்சியால் எல்லாவற்றையும் சரி செய்வீர்கள்.

    பரிகாரம்: வெள்ளிக்கிழமை விரதமிருந்து மகாலட்சுமியை வழிபட தன, தானிய விருத்தி உண்டாகும். குடும்ப ஒற்றுமை பலப்படும்.

    ஆங்கிலப் புத்தாண்டில் கும்ப ராசியினர் சென்று வழிபட வேண்டிய ஸ்தலம் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் சிவகங்கை மாவட்டத்திலுள்ள பிள்ளையார்பட்டி எனும் ஊரில் அமைந்துள்ளது. விநாயகருக்கு ஒரு கணபதி ஹோமமும், பால் அபிஷேகமும் செய்து வழிபட செல்வ வளம் பெருகும். பிரச்சனைகள் முற்றிலும் தீர்ந்து வாழ்வில் வசந்தம் வீசும். ஜென்மச் சனியின் பாதிப்பிலிருந்து விடுபட கும்ப ராசியினர் பிள்ளையார் பட்டி சென்று வருவது சிறப்பு.

    ×