என் மலர்tooltip icon

    கும்பம் - Kumbam

    புத்தாண்டு ராசிபலன்கள்-2024

    உழைப்பில் ஆர்வம் மிகுந்த கும்ப ராசியினருக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    இந்த ஆங்கிலப் புத்தாண்டில் ராசி அதிபதி சனி பகவான் ராசியில் ஆட்சி. தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் ராகு. அஷ்டம ஸ்தானத்தில் கேது. ஏப்ரல் வரை முயற்சி ஸ்தான குரு. ஏப்ரலுக்குப் பிறகு சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். எனவே முயற்சிகள் வெற்றியாகும். மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வீர்கள். 2024ம் ஆண்டு மனக்கவலைகள் விலகும் மகத்தான ஆண்டாக அமையப்போகிறது.

    குருவின் சஞ்சார பலன்கள்

    கும்ப ராசிக்கு 2,11ம் அதிபதியான குரு பகவான் ஏப்ரல் 21 வரை முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆவணங்கள் தொடர்பான பிரச்சனைகள் அகலும். தொலைந்த பொருள்கள் தென்படும். குருப் பெயர்ச்சிக்குப் பிறகு சுக ஸ்தானத்திற்கு மாறும் குரு பகவான் தனது 5ம் பார்வையால் அஷ்டம ஸ்தானத்தையும், 7ம் பார்வையால் தொழில் ஸ்தானத்தையும் 9-ம் பார்வையால் விரய ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். குடும்பத்தில் நிலவிய கூச்சல் குழப்பம் மறைந்து அமைதியான சூழல் நிலவும். வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும். இலாகா மாற்றம் மற்றும் இடமாற்றம் கவலையைத் தரும்.

    அரசியலில் ஈடுபட்டோருக்கு விபரீத ராஜ யோகம் தரும் காலமாகும். சிலர் பூர்வீக சொத்து தொடர்பான வழக்குகளை சந்திக்க நேரும். வெளிநாட்டு வேலை, பயணம் திட்டமிட்டபடி நடக்கும். செயற்கை முறை கருத்தரிப்பு வெற்றி தரும்.தம்பதிகள் ஒருவர் விஷயங்களில் பிறர் குறிக்கிடாமல் இருப்பது நல்லது. கண்களில் சிறு உபாதைகள் இருந்தால் உரிய சிகிச்சையை பெற வேண்டும். திருமண முயற்சி வெற்றியாகும். ஆரோக்கியம் சீராகும். சொத்து வாங்கும், விற்கும் முயற்சி ஈடேறும் வாழ்க்கை துணையின் வைத்தியச் செலவு குறையும்.

    சனியின் சஞ்சார பலன்கள்

    கும்ப ராசிக்கு ராசி அதிபதி மற்றும் விரயாதிபதியான சனி பகவான் ராசியில் நின்று ஜென்மச் சனியாக பலன் தருகிறார். ராசியில் நின்று 3-ம் பார்வையால் சகாய ஸ்தானத்தையும் 7ம் பார்வையால் களத்திர ஸ்தானத்தையும் 10ம் பார்வையால் கர்ம ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். புதிய தொழில் முயற்சிகள் ஒப்பந்தங்களில் சிந்தித்து செயல்பட வேண்டும். தொழில் உத்தியோக அனுகூலம் நல்ல விதமாக இருந்தாலும் பணிச்சுமை மிகைப்படுத்தலாக இருக்கும். விரயங்கள் சற்று கூடுதலாக இருக்கும்.எனவே இந்த காலகட்டத்தில் நகை வாங்குவது, வீடு கட்டுவது, பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு சேமிப்பது என உங்கள் விரயத்தை சுபமாக மாற்றுவது உங்கள் கையில்தான் உள்ளது.

    அவசியம் அநாவசியம் எது என பகுத்துணர்ந்து செயல்பட்டால் விரயத்தை தவிர்க்கலாம். அத்துடன் தொழில், வேலைக்காக பலர் குடும்பத்தை பிரிந்து வெளியூர், வெளிநாடு செல்ல நேரும். சிலருக்கு கால் அல்லது கண் பிரச்சனைக்காக வைத்தியம் செய்ய நேரும். வேற்று மொழி பேசுபவர்களுடன் அந்நிய தேசத்தில் குடிபுகும் நிலை ஏற்படும். சிலர் மதம் மாறி வேறு மத வழிபாடு செய்வார்கள். பாதங்களில் எரிச்சல் இருக்கும்.

    ராகு-கேதுவின் சஞ்சார பலன்கள்

    ஆண்டு முழுவதும் ராசிக்கு 2ல் ராகுவும், 8ல் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். 2ம்மிடமான குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து குரு பகவானைப் போலவே செயல்படப்போகிறார். திடீர் தன வரவை ஏற்படுத்தும் சக்தி ராகுவிற்கு உண்டு என்பதால் பொருளாதார வசதி அதிகரிக்கும் பல வழிகளில் இருந்தும் பணம் வரும். வெளிநாட்டுப் பணம் கையில் பணம் புரளும். பொன்னும், பொருளும் சேரும். துன்பங்கள் பொசுங்கி விடும். நல்ல மாற்றங்கள், திடீர் திருப்பங்கள் ஏற்படும். இழந்த அனைத்தையும் திரும்பப்பெறப் போகிறீர்கள்.

    நீங்கள் செய்யும் அனைத்து முயற்சிகளும் வெற்றி தரும். அஷ்டம கேதுவால் குபேர யோகம் கிடைக்கப்போகிறது. கேது பகவான் அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்து விபரீத ராஜ யோகத்தை கொடுக்கப்போகிறார். ஒரு சிலருக்கு விபத்து, கண்டம், சர்ஜரி, அவமானம், வம்பு, வழக்கு போன்ற அசுப பலன்களும் ஏற்படும்.பெரிய அளவில் முதலீடு செய்து அகலக்கால் வைக்க வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டு பணத்தை கடனாக வாங்கித்தர வேண்டாம் இருப்பதை தக்கவைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு மனபாரம் இருந்தாலும் படுத்த அடுத்த நொடி நிம்மதியாக கவலை மறந்து நிம்மதியாக தூங்கி விடுவீர்கள்.

    அவிட்டம் 3,4

    முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் வருடம். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும்.புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். சமுதாயத்தில் கவுரவமான நிலையை அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் உங்களுக்கு என்று தனி முத்திரை பதிப்பீர்கள்.வெளியே சொல்லமுடியாமல் தவித்த பிரச்சனையிலிருந்து மீள்வீர்கள். ஜாமீன் வழக்கு சாதகமாகும். கொடுக்கல், வாங்கல் சீராகும். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மதிப்பு மரியாதை கூடும். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் உற்சாகமாக இருப்பீர்கள்.

    நோய்கள் நீங்கும். தன வரவு அதிகரிப்பதால் மன அழுத்தங்கள் நீங்கும். அவசரப்படாமல் பொறுமையோடும் நிதானத்தோடும் செயல்பட்டால் இந்த வருடம் பொற்காலமாக இருக்கும்.தொட்டது துலங்க விரயத்தை சுபமாக்க மஞ்சள் அபிசேகம் செய்து முருகனை வழிபடவும்.

    சதயம்

    உண்மையான உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும் வருடம்.பேச்சில் தைரியம், தன் நம்பிக்கை உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி சந்தோசம் பெருகும்.சொல் வலிமை, வாக்குப் பலிதம் ஏற்படும். எவராலும் சாதிக்க முடியாத செயல்களை செய்து முடிப்பீர்கள். போட்டி பொறாமை குறையும். கடன் பிரச்சினைகள் தீரும். வெளியில் தெரியாமல் புதைந்து கிடந்த அனைத்து திறமைகளும் வெளிப்படும்.

    அஞ்சாமல் தைரியமாக எல்லா முயற்சியிலும் ஈடுபடுவீர்கள். உடன் பிறப்புகளிடையே ஒற்றுமை உண்டாகும். தொழிலில் புதுமை புகுத்தி வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். சிலருக்கு அரசு உத்தியோக வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும். வீடு, வாகனயோகம், குழந்தைப்பேறு, திருமணம் போன்ற பாக்கிய பலன்கள் கைகூடும்.தெய்வ பிரார்த்தனைகள் நிறைவேறும். ராகு காலத்தில் துர்க்கை, காளியை வழிபடவும்.

    பூரட்டாதி 1,2,3

    நெருக்கடி நிலை மாறும் வருடம் யாரும் செய்யத் தயங்கும் செயல்களை துணிச்சலுடன் செய்து முடிக்கும் வல்லமை உண்டாகும். உத்தியோகத்தில் பணி நிரந்தரமாகும். புத்திர பாக்கியம் உண்டாகும். பங்கு சந்தை ஆதாயம் மனதை மகிழ்விக்கும். மாணவர்களுக்கு நல்ல கல்லூரியில் இணைந்து படிக்கும் வாய்ப்பு உள்ளது. சிலருக்கு நெருங்கிய ரத்த பந்த உறவில் திருமணம் நடக்கும். சம்பந்திகள் சண்டை முடிவிற்கு வரும். புதிய சொத்துக்கள், உயர்ரக வாகனங்கள் சேரும்.

    வங்கி கடன் மூலம் புதிய வாகனம் வாங்குதல் அல்லது நிலத்தில் முதலீடு செய்தல் போன்ற அமைப்பு உருவாகும்.வீட்டில் மேளச் சத்தம் கேட்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் திருமணத்தை நடத்தி ஆனந்தம் அடைவீர்கள்.கவுரவப் பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் ஒற்றுமை நிம்மதி ஏற்படும். சிலர் குடியிருப்பை மாற்றம் செய்யலாம்.பூர்வீகம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். குல தெய்வ, இஷ்ட, தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்ற ஏற்ற காலம். சர்க்கரை பொங்கல் படைத்து அம்பிகையை வழிபடவும்

    திருமணம்

    குடும்ப ஸ்தானத்தில் ராகு எட்டில் கேது என்பதால் கோட்சார ரீதியான சர்ப்ப தோஷத்தால் திருமணம் தடைபட வாய்ப்பு உள்ளது. எட்டாமிடம் என்பது பெண்ணிற்கு மாங்கல்ய ஸ்தானம் என்பதால் சுய ஜாதக வலிமைக்கு ஏற்ப திருமணத்தை நடத்துவது நல்லது

    பெண்கள்

    கடன் தொல்லை குறையும். ஆரோக்கியம் சீராகும்.பிரிந்த கணவன், மனைவியர் ஒன்று சேர்ந்து வாழ்வர். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குழந்தை பாக்கியம் உண்டாடாகும். பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டு மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிறருடன் பழகுவதில் உங்களுக்கென்று தனித்துவத்தை ஏற்படுத்துவீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட பெரிய செயல்களைக் கூட எளிதாக செய்து முடித்து வெற்றியைக் கொண்டாடுவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்களும் வேதனைகளும், துயரங்களும் விலகும். ஜென்மச் சனியின் காலம் என்பதால் வீட்டிற்கு தெரியாமல் நகைச் சீட்டு, ஏலச்சீட்டு கட்டுவதை தவிர்த்து அரசுடைமை வங்கிகளில் சேமிக்கவும்.

    வியாபாரிகள்

    தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். புதிய வாடிக்கை யாளர்க கள் உருவாகுவார்கள். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. வாய்ப்புகள் வாசல் கதவை தட்டும்.பேச்சை தொழிலாக கொண்டவர்களான வக்கீல்கள், ஆசிரியர்கள், சொற்பொழி வாளர்கள் , ஜோதிடர்களின் தொழில் வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கும். ஜென்மச் சனியின் தாக்கம் இருப்பதால் புதிய தொழில் ஒப்பந்தம், முதலீடுகளை தவிர்த்தல் நலம்.

    உத்தியோகஸ்தர்கள்

    உத்தியோகஸ்தர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் உருவாகும். தகுதி திறமைக்கு ஏற்ற உயர்வு கிடைக்கும். இடமாற்றங்கள் ஏற்படும்.வாக்கு வன்மையால் புகழ் பெறுவீர்கள்.அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லது. பணி நிமித்தமாக வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படலாம். வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றிதரும்.வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் உறவினர்கள் பெயரில் சொத்துக்கள் வாங்குவதை தவிர்க்கவும். தேவையற்ற பயத்தைத் தவிர்த்து சுய ஜாதக தசா புத்திக்கு தகுந்த வழிபாட்டு முறைகளை கடைபிடித்து பயன் பெற வாழ்த்துக்கள்.

    அரசியல்வாதிகள்

    வாக்கு ஸ்தானத்தில் ராகு அஷ்டம ஸ்தானத்தில் கேது. எனவே வாக்குறுதியில் மிகுந்த கவனம் தேவை. உங்களின் வாக்கே உங்களை கட்டம் கட்டி கூண்டில் ஏற்றும் .யாரிடம் பேசினாலும் வார்த்தைப்பிரயோகம் சரியாக இருக்க வேண்டும்.நிதானம் தவறினால் உங்களின் பல ஆண்டு கால உழைப்பை இழக்க நேரும்.புத்தியை பயன்படுத்த வேண்டிய நேரம்.ஒரு சிலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு வேறு கட்சிக்கு மாறவும் வாய்ப்புள்ளது.

    பரிகாரம்

    வெற்றிலையில், பாக்குடன் தயிர் சாதம் வைத்து சனிக்கிழமை இஷ்ட குலதெய்வம், பைரவரை வழிப்பட்டால் கவலை தீரும்.

    ×