என் மலர்tooltip icon

    கும்பம் - Kumbam

    2025 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்

    ஜென்மத்தில் ராகு வருகிறார்! திடீர் பயணத்தைத் தருகிறார்!

    கும்ப ராசி நேயர்களே!

    இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் இருந்து வந்த ராகு பகவான், 26.4.2025 அன்று உங்கள் ராசியிலேயே பிரவேசிக்கப் போகிறார். அதே நேரத்தில் சப்தம ஸ்தானத்திற்கு கேது வருகிறார். சுமார் 1½ ஆண்டு காலம் ராகுவும், கேதுவும் இந்த இடத்தில் சஞ்சரித்து நட்சத்திர பாதசாரங்களில் பவனி வரும் போது அதற்கேற்ப பலன்களை வழங்குவார்கள்.

    உங்கள் ராசிக்கு 2-ம் இடமான குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான், இப்போது ஜென்ம ராசிக்கு மாறுகிறார். எனவே ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் ஏற்படலாம். உடன்பிறப்புகள் பகையாவர். குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கும். கொடுக்கல் - வாங்கலில் ஏமாற்றத்தை சந்திப்பீர்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்க வேண்டிய நேரம் இது.

    சப்தம ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் பிரச்சினை அதிகரிக்கும். கொள்கைப் பிடிப்போடு செயல்பட இயலாது. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வீடு மாற்றம், இட மாற்றம் உறுதியாகலாம். வாடகை வீட்டில் இருப்பவர்கள், சொந்த கட்டிடத்திற்கு மாறும் முயற்சி கைகூடும். வெளிநாடு செல்லும் முயற்சியும் நடந்தேறும்.

    குரு சாரத்தில் ராகு சஞ்சாரம் (26.4.2025 முதல் 31.10.2025 வரை)

    பூரட்டாதி நட்சத்திரக் காலில் குருவின் சாரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் பொழுது, பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். புதிய திருப்பங்கள் ஏற்படும். வெளிநாட்டு பணியில் சேரும் ஆசை நிறைவேறும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு லாபத்தை குவிப்பீர்கள். புதிய நண்பர்களால் பொருளாதார நிலை உயரும். வாழ்க்கைத் துணைக்கும், வாரிசுகளுக்கும் நல்ல வேலை அமையும். இளைய சகோதரருடன் இணக்கம் ஏற்படும்.

    சூரிய சாரத்தில் கேது சஞ்சாரம் (26.4.2025 முதல் 27.6.2025 வரை)

    உத்ரம் நட்சத்திரக் காலில் சூரிய சாரத்தில் கேது சஞ்சரிக்கும் போது, மிக மிக கவனமாக செயல்பட வேண்டும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. வருமான பற்றாக்குறையால் வாட்டம் ஏற்படும். எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும். எதிர்மறை சிந்தனை தலைதூக்கும்.

    கடன் வாங்கும் சூழல் உருவாகும். விலை உயர்ந்த பொருட்களை விற்க நேரிடும். உத்தியோகத்தில் சகப் பணி யாளர்களால் தொல்லை ஏற்படும். திருமணம் கைகூடுவதுபோல் வந்து, கை நழுவிச் செல்லும். வியாபாரப் போட்டி அதிகரிக்கும்.

    சுக்ர சாரத்தில் கேது சஞ்சாரம் (28.6.2025 முதல் 5.3.2026 வரை)

    பூரம் நட்சத்திரக் காலில் சுக்ர சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, ஆரோக்கியம் சீராகும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வருமானம் உயரும். வருங்காலம் பற்றிய பயம் அகலும்.

    வெளிநாட்டு முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். தந்தை வழி உறவில் இருந்த விரிசல் அகலும். தாயின் உடல்நலம் சீராகும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். புது வீட்டில் குடியேறும் யோகம் உண்டு. கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்.

    சனிப்பெயர்ச்சி காலம்

    6.3.2026 அன்று சனி பகவான், மீன ராசிக்கு பெயர்ச்சியாகி செல்கிறார். அந்த நேரத்தில் ஜென்மச் சனி விலகி, குடும்பச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகிறது. எனவே குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறும். வசதி வாய்ப்புகள் பெருகும். நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த திருமண முயற்சி கைகூடும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலகும் சனியை விரும்பிச் சென்று வழிபட்டு வந்தால், அதிக நன்மைகளைப் பெறலாம்.

    குருப்பெயர்ச்சி காலம்

    ராகு - கேது பெயர்ச்சி காலத்தில் குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. 11.5.2025 அன்று குரு பகவான், மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அவரது பார்வை உங்கள் ராசியில் பதிவது யோகம் தான். தாமதமான காரியங்கள், தடையின்றி நடைபெறும். சேமிப்பு உயரும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். முயற்சியால் முன்னேற்றம் காணும் நேரம் இது.

    உயர் அதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்வர். பொதுவாழ்வில் பெரிய பொறுப்புகள் தேடிவரும். அக்டோபர் 8-ந் தேதி குரு பகவான், அதிசாரமாக கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதன் விளைவாக குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும்.

    ×