search icon
என் மலர்tooltip icon

  கும்பம் - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்

  கும்பம்

  ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்8.10.2023 முதல் 25.4.2025 வரை

  கும்ப ராசி நேயர்களே!

  இதுவரை உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான், அக்டோபர் 8-ந் தேதி முதல் 2-ம் இடமான குடும்ப ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாகிறார். அதே நாளில் கேது பகவான் உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்திற்கு வருகிறார். சுமார் ஒன்றரை ஆண்டு காலம் ராகுவும், கேதுவும் அந்த இடத்தில் சஞ்சரித்து, அங்குள்ள நட்சத்திரப் பாதசார அடிப்படையில் பலன்களை வழங்குவார்கள்.

  உங்கள் ராசிக்கு 2-ம் இடமான தன ஸ்தானத்திற்கு வரும் ராகுவால், தன வரவு திருப்தியாக இருக்கும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். தொல்லை கொடுத்த எதிரிகள் விலகுவர். இல்லம் தேடி நல்ல தகவல்கள் வரலாம். கொடுக்கல் - வாங்கல்கள் சரளமாக இருக்கும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

  அஷ்டம ஸ்தானமான 8-ம் இடத்தில் கேது சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. குடும்பச்சுமை கூடும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. உடல்நலக் குறைபாடு ஏற்படும். வீண் விரயங்களில் இருந்து விடுபட சுப விரயங்களை மேற்கொள்ளலாம். தைரியமும், தன்னம்பிக்கையும் தக்க சமயத்தில் கைகொடுக்கும்.

  குரு மற்றும் சனி வக்ர காலம்

  8.10.2023 முதல் 20.12.2023 வரை மேஷ ராசியிலும், 25.9.2024 முதல் 22.1.2025 வரை ரிஷப ராசியிலும் குரு வக்ரம் பெறுகிறார். அவரது வக்ர காலத்தில் பணத்தேவை அதிகரிக்கும். குடும்பத்தில் குழப்பங்கள் தோன்றும். கொடுக்கல் - வாங்கல்களில் இருந்த சுமுகமான நிலை மாறும். உடன்பிறப்புகளின் வழியே மனக்கசப்பு உண்டாகக்கூடும். உத்தியோகத்தில் இடமாறுதல் திருப்தி தராது.

  8.10.2023 முதல் 24.10.2023 வரை மகர ராசியிலும், 10.7.2024 முதல் 5.11.2024 வரை கும்ப ராசியிலும் சனி வக்ரம் பெறுகிறார். அவரது வக்ர காலத்தில் விரயங்கள் அதிகரிக்கும். வீண்பழி வந்துசேரும். அசையாச் சொத்துக்களை வாங்குவதில் குறுக்கீடுகள் ஏற்படும். ஆரோக்கியப் பாதிப்பும் உண்டு. குடும்பப் பெரியவர்களைகலந்து பேசி முடிவெடுங்கள்.

  சனிப்பெயர்ச்சி காலம்

  20.12.2023 அன்று கும்ப ராசிக்கு சனி பகவான் செல்கிறார். இக்காலத்தில் உங்களுக்கு ஜென்மச் சனியின் ஆதிக்கம் உருவாகிறது. எனவே தடை, தாமதம் ஏற்படும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காது. அருகில் உள்ளவர்களின் ஆதரவு குறையும். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். வீண் செலவை தவிருங்கள்.

  குருப்பெயர்ச்சி காலம்

  1.5.2024 அன்று ரிஷப ராசிக்கு குரு செல்கிறார். உங்கள் ராசிப்படி அவர் அர்த்தாஷ்டம குருவாக இருந்தாலும், அவர் பார்வைபடும் 8, 10, 12 ஆகிய இடங்கள் புனிதமடைகின்றன. எனவே இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வந்துசேரும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் அகலும். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேருவர். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.

  பெண்களுக்கான பலன்கள்

  இந்த ராகு-கேது பெயர்ச்சியின் விளைவாக பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். அதே நேரம் விரயங்கள் ஏற்பட்டு சேமிக்க இயலாமல் போகலாம். எனவே சுபவிரயங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். கணவன் - மனைவிக்குள் அனுசரணை இருந்தால், குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் திருமண முயற்சி கைகூடும். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

  வளர்ச்சி தரும் வழிபாடு

  இரண்டாம் இடத்து ராகுவால் இனிய பலன் கிடைக்கவும், அஷ்டமத்து கேதுவால் ஆரோக்கியத் தொல்லை அகலவும், இல்லத்து பூஜையறையில் நாக கவசம் பாடி ராகு-கேதுக்களை வழிபாடு செய்யுங்கள்.

  கும்பம்

  ராகுகேது பெயர்ச்சி பலன்கள் - 2023

  12.4.2022 முதல் 30.10.2023 வரை

  மூன்றில் ராகு/ ஒன்பதில் கேது

  விவேகமான கும்ப ராசியினரே உங்கள் ராசிக்கு 3ல் ராகுவும் 9ல் கேதுவும் உள்ளார்கள். குருபகவான் 2 ,3ம் இடத்திலும், சனி பகவான் 12 , 1ம் இடத்தில் சஞ்சரிக்கிறார்.

  3மிட ராகுவின் பலன்கள்:மூன்றாமிடம் என்பது முயற்சி ஸ்தானம், சகாய ஸ்தானம், இளைய சகோதர ஸ்தானம், உப ஜெய ஸ்தானம், வெற்றி ஸ்தானம். வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும். அதை வாங்கித் தந்த பெருமை ராகுவைச் சேரும். எந்த செயலிலும் விரைந்து செயல்பட்டு தெளிவாக முடிவு எடுப்பீர்கள். உங்களுடைய அனைத்து முயற்சிகளும் வெற்றியடையும் காலம்.

  தைரியம், தெம்பு , ஞாபக சக்தி அதிகரிக்கும். இது வரை அனுபவித்து வந்த சங்கடங்கள் தீரும். நோயற்ற வாழ்வையும், குறைவற்ற செல்வத்தையும் பெற்று வாழ்வீர்கள்.உடல் ஆரோக்கியம் அதிகரித்தும். நன்மைகள் அதிக அளவில் நடக்கும். குடும்ப தேவைகள் நிறைவேறும். குடும்பத்தில் நிம்மதி நீடிக்கும். அனைத்தையும் சமாளிக்கும் ஆற்றல் பெருகும். உங்கள் சொத்தை சகோதர, சகோதரிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவார். சிலருக்கு சொத்து தொடர்பாக இளைய சகோதரத்துடன் கருத்து வேறுபாடு அதிகரிக்கும். ஆடை ,ஆபரணச் சேர்க்கை உண்டாகும். செய்தி, தகவல்தொடர்பு, அச்சுத் துறை நூலகத்தில் வேலை செய்பவர்களுக்கு , எழுத்தாளர்களுக்கு ஏற்றம் உண்டாகும். சிலருக்கு செவித்திறன் குறைபாடு வரலாம்.

  ராகு மேஷ ராசியில் உள்ள நட்சத்திரப் பாதங்களான கிருத்திகை, பரணி, அசுவினி நட்சத்திரங்களில் மூலம் ராசியை கடக்கிறார்.

  12.4.2022 முதல்14.6.2022 வரை ராகுவின் கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள்:கிருத்திகை நட்சத்திர அதிபதி. சூரியன் கும்பத்திற்கு ஏழாம் அதிபதி. ராசிக்கு 3ல் பயணிக்கும் ராகு ஏழாமதிபதியின் நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். புதிய நண்பர்கள், தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. நல்ல புதிய வாடிக்கையாளர்கள் உருவாகுவார்கள். தொழில் கூட்டாளிகளிடையே நல்லிணக்கம். நீடிக்கும். தகுதியும் திறமையும் நிறைந்த புதிய தொழில் பங்குதாரர் கிடைப்பார்கள். நீண்ட நாட்களாக தொடர்பில்லாத பள்ளி, கல்லுரி மற்றும் அக்கம் பக்க பால்ய நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியைத் தரும். கணவன் மனைவி உறவு மகிழ்வை தரும் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும்.

  15.6.2022 முதல் 20.2.2023 வரை ராகுவின் பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள்:சுக்ரனின் நட்சத்திரமான பரணி கும்பத்திற்கு 4,9ம் அதிபதி. பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைக்கும் காலம். தங்களின் தோற்றம் மற்றும் செயல்களில் மாற்றம் ஏற்படும். பொது நலமான சிந்தனை தோன்றி அதன் படி செயல்பட்டு நற்பெயர் பெறுவீர்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதை ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆசி கிட்டும். உங்களின் தனித் திறமை வெளிஉலகத்திற்கு தெரிய வரும். எண்ணிய எண்ணம் பலிதமாகும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். கனவாக இருந்த சொந்த வீட்டு ஆசை நினைவாகும். தனம், தான்யம், புகழ், செல்வாக்கு, வீரம், அறிவு இவற்றுடன் அஷ்ட ஐஸ்வரியமும் கிடைக்கும்.

  21.2.2023 முதல் 30.10.2023 வரை ராகுவின் அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள்:கோட்சாரத்தில் ராசிக்கு 9ல் சஞ்சரிக்கும் கேதுவின் நட்சத்திரத்தில் கோட்சார ராகு பயணிக்கும் காலம்.மனோபலம், தேகபலம், பணபலம் ஆகிய மூன்றும் குடிபுகும். பெற்றோர்களின் ஆரோக்கியம் சிறப்படையும். சாஸ்திர ஈடுபாடு ஆன்மீக நாட்டம் ஏற்படும். புகழ் பரவும். பணிபுரியும் துறையில் சாதனை செய்து புகழ் அடைவீர்கள். அரசு அதிகாரிகள் மெமோ வாங்குவீர்கள் அல்லது இடமாற்றம் செய்யப்படுவீர்கள். உடன் பிறந்தவர்கள் மற்றும் தந்தை வழி உறவினர்களால் முன்னோர்களின் சொத்தை பிரிப்பதில் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

  9 மிட கேதுவின் பொது பலன்கள்:ஒன்பதாமிடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவான் நீதி, நேர்மை, நியாயம் போன்றவற்றை போதிப்பவர். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எப்படி எல்லாம் வாழ்ந்தால் முன் ஜென்ம கர்மாவை கழித்து ஆன்மாவை சுத்தப்படுத்தி பிறவியற்ற நிலையை அடையலாம் என்பதை புரிய வைப்பவர். தந்தையின் அருமை, பெருமைகளை உணர்வீர்கள். தந்தை இல்லாமல் ஒரு மனிதனுக்கு பிறவி என்பதே கிடையாது என்ற உண்மை மனதை வாட்டும். லௌகீக நாட்டம் குறையும். தந்தை ஆன்மீக வாதியாக மாறுவார்.தந்தை மகன் உறவில் ஏற்பட்ட விரிசல் சீராகும்.

  பூர்வீக சொத்து தொடர்பான பேச்சு வார்த்தையில் தந்தை வழி உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு அதிகமாகும். பித்ருக்கள் தொடர்பான வழிபாட்டின் மூலம் காரிய சித்தி அடைய முயற்சிப்பீர்கள். சிலருக்கு ஆரோக்கியத்தை அதிகரிக்கும் யோகா, தியானம் போன்ற வற்றில் ஆர்வம் அதிகரிக்கும். ஒன்பதில் நிற்கும் கேது பகவான் இழந்த பாக்கிய பலன்களை மீண்டும் வழங்க தயராக இருக்கிறார். அதை பயன்படுத்த கும்ப ராசியினர் தயாராக வேண்டும். கேது துலாம் ராசியில் உள்ள விசாகம், சுவாதி, சித்திரை நட்சத்திரங்கள் மூலம் தன் பயணத்தை செலுத்துகிறார்.

  12.4.2022 முதல் 17.10.2022 வரையான கேதுவின் விசாகம் நட்சத்திர சஞ்சார பலன்கள்:விசாகம் குருவின் நட்சத்திரம்.குரு கும்பத்திற்கு தன லாபாதிபதி. கோட்சார குரு குடும்ப ஸ்தானத்தில் ஆட்சி பலம் குடும்ப வாழ்க்கை மனநிறைவு தரும். உற்றார் உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, சண்டை சச்சரவு அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் போகும். திருமண வயதில் உள்ள மகள், மகனின் திருமணத்தை தடபுடலாக நடத்துவார்கள். தொழிலில் பல வருடமாக உழைத்த உழைப்பிற்கு பலன் கிடைக்கும் நேரம். உங்கள் பிரார்த்தனை மற்றும் வேண்டுதலுக்கு கடவுளின் அருள் கிடைக்கும் காலம். லாபம் வீடு தேடி வந்து கதவை தட்டும். ஜனன கால ஜாதகத்தில் சனி சுப வலு பெற்றவர்களுக்கு அதிக முயற்சி இல்லாமலே கமிஷன், தரகு போன்றவைகள் மூலம் பெரிய தொகை கிடைக்கும். மனைவிக்கு தாய் வழி சொத்து கிடைக்கும்.

  18.10.2022 முதல் 26.6.2023 வரையான கேதுவின் சுவாதி நட்சத்திர சஞ்சார பலன்கள்:கோட்சாரத்தில் ராசிக்கு 3ல் பயணிக்கும் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது பயணிக்கும் காலம். பாக்கியஸ்தானத்தில் நிற்கும் கேது உங்களுக்கு பாடம் புகட்ட தயார் நிலையில் உள்ளதால் சுபமும் அசுபமும் கலந்தே நடக்கும்.

  உயர் கல்வி முயற்சி சிறு தடைக்குப் பின் சீராகும். தந்தைக்கும் சகோதரருக்கும் கருத்து வேறுபாடு அதிகரிக்கும்.அண்டை, அயலாருடன் கருத்து வேறுபாடு உண்டாகும். உங்களின் பூர்வீக மற்றும் சுய சம்பாத்திய சொத்துகளின் ஆவணங்கள் தொடர்பான குழப்பம் உங்களை கவலையில் ஆழ்த்தும்.பத்திர பதிவு அலுவலகத்திற்கு நடந்தே அழுத்துவிடுவீர்கள் .அதாவது கேதுவின் டார்கெட் நிம்மதியின்மை கொடுத்து முக்திக்கு அழைப்பது.

  27.6.2023 முதல் 30.10.2023 வரை கேதுவின் சித்திரை நட்சத்திர சஞ்சார பலன்கள்:சித்திரை செவ்வாயின் நட்சத்திரம். செவ்வாய் கும்பத்திற்கு 3,10ம் அதிபதி. சிலர் வேலையை விட்டு விடுவார்கள் அல்லது வேலையிலிருந்து நிறுத்திவிடுவார்கள். சிலர் வீடு அல்லது வியாபர நிறுவனத்தை மாற்றலாம். சிலர் தொழிற்சாலையை இட மாற்றம் செய்ய நேரும். தொழில் தர்மத்தை கடைபிடித்து நியாயமான முறையில் சம்பாதித்து புகழடைவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு அபாரமான தொழில் வளர்ச்சி ஏற்படும். சிலர் உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுடன் இணைந்து புதிய தொழில் தொடங்கலாம். சிலர் தங்களின் மறைமுக வருமானத்தைக் கொண்டு புதிய தொழில் கிளைகளை உருவாக்கலாம். அதிக பொருள் ஈட்டும் ஆசையால் சட்டத்திற்கு புறம்பான தொழிலை செய்பவர்களுக்கு அசுப விளைவுகளை தந்து தவறை சுட்டிக் காட்டும்.

  திருமணம்:ஜென்மச் சனியின் காலத்தில் திருமண முயற்சியில் தடை தாமதங்கள், மனம் வருந்தும் நிலை ஏற்படும். பெண்ணை மாப்பிள்ளை வீட்டாரிடம் காண்பிக்கும் முன்பு பல முறை யோசிக்கவும். அதிக கவனத்துடன் வரனை தேர்வு செய்ய வேண்டும். தவறான சுய விருப்ப விவாகம் தோல்வியை ஏற்படுத்தலாம்.

  பெண்கள்:திருமணமான பெண்கள் கணவருடன் ஒற்றுமையும் அன்னியோன்யமாக இருப்பீர்கள். மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்தும் அற்புதமான நல்ல நேரம் . வீடு , வாகனம், நிலம், ஆபரணம், அந்தஸ்து, பதவி சமுதாய அங்கீகாரம் என உங்கள் வாழ்நாள் கனவுகள் அனைத்தும் ஈடேறும்.

  உத்தியோகஸ்தர்கள்:தற்காலிக வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஏற்படும். அரசாங்க வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும். மேலதிகாரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சக ஊழியர்களிடையே நல்லிணக்கம் ஏற்படும்.உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

  கும்பராசியினருக்கு குருவின் சஞ்சாரம் மிகச் சாதக மாக உள்ளது. ஏழரைச் சனி மற்றும் ராகு/கேதுவின் தாக்கம் உங்களை பாதிக்காது.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×