என் மலர்tooltip icon

    கும்பம் - Kumbam

    2026 தை மாத ராசிபலன்

    கும்ப ராசி நேயர்களே!

    தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அவரோடு ராகுவும் இணைந்திருக்கிறார். மிதுனத்தில் இருக்கும் குருவின் பார்வை உங்கள் ராசியில் இருப்பதால் இந்த மாதம் இனிய மாதமாகவே அமையும். எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி காண்பீர்கள். திடீர் முன்னேற்றம் வந்துசேரும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உற்சாகத்தோடு செயல்பட்டு எதிர்பார்த்த இலக்கை அடைவீர்கள். ஜென்மச் சனி நடைபெறுவதால் சிறுசிறு தொல்லைகள் உடல்நலத்தில் ஏற்படலாம்.

    வக்ர குரு

    மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை தன - லாபாதிபதியானவர் குரு. அவர் வக்ரம் பெற்றிருப்பதால் வருமானப் பற்றாக்குறை ஏற்படும். குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டே இருக்கும். வெளிநாடு சம்பந்தப்பட்ட வகையில் எடுத்த முயற்சி தாமதப்பட்டாலும் கடைசி நேரத்தில் கைகூடிவிடும். குடும்பத்தில் சில பிரச்சனைகள் உருவாகலாம். விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் அமைதி கிடைக்கும். குருவின் பார்வை உங்கள் ராசியில் மட்டுமல்லாமல் 9, 11 ஆகிய இடங்களிலும் பதிகிறது. எனவே பாக்கிய ஸ்தானம் பலம்பெறுகிறது. தந்தை வழி உறவில் இருந்த விரிசல்கள் அகலும். தடைக்கற்கள் எல்லாம் படிக்கற்களாக மாறும். எந்தவழியிலும் உங்களுக்கு வரவேண்டிய தொகை வந்துசேரும். இடம் வாங்குவது, பூமி வாங்குவது போன்றவற்றில் ஆர்வம் காட்டுவீர்கள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பழைய கூட்டாளிகள் மீண்டும் வந்து இணைந்து உங்கள் புதிய முயற்சிக்கு கைகொடுத்து உதவுவர். இந்நேரங்களில் குரு கவசம் பாடி குருவை வழிபடுவதன் மூலம் மேலும் நற்பலன்களைப் பெறலாம்.

    கும்ப - புதன்

    உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 29.1.2026 அன்று உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். பொதுவாக பஞ்சம ஸ்தானாதிபதி என்பதால் பிள்ளைகள் வழியில் மேன்மை உண்டு. அவர்களின் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கும். பெண் பிள்ளைகளின் கல்யாணத்தை முன்னிட்டு சீர்வரிசைப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்கள் முன்னேற்றத்திற்கு முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஒருசிலர் பழைய சொத்துக்களை விற்றுவிட்டு, புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு உண்டு. சென்ற மாதத்தில் நடைபெறாத சில காரியங்கள் இம்மாதம் நடைபெறும்.

    கும்ப - சுக்ரன்

    மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரன், 7.2.2026 அன்று கும்ப ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு சுக்ரன் 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். அவர் ஜென்மத்தில் சஞ்சரிக்கும் பொழுது, தாய்வழி ஆதரவு கிடைக்கும். படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். வாழ்க்கைத் தேவை படிப்படியாகப் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். வீடு வாங்கிக் குடியேறும் யோகம் உண்டு. தொழிலில் சேர்ந்த பணியாளர்கள் உங்கள் எண்ணங்களைப் புரிந்துகொண்டு செயல்படுவர். வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களுக்கு இப்பொழுது நல்ல தகவல் கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு தலைமைப் பதவிகள் தேடி வரலாம். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு அதை விரிவு செய்யும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பலன்கள் எளிதில் கிடைக்கும். கலைஞர்களுக்கு, சென்ற மாதத்தில் கைநழுவிச் சென்ற ஒப்பந்தங்கள் மீண்டும் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் வெற்றி உண்டு. பெண்களுக்கு சுபகாரியப் பேச்சுக்கள் முடிவிற்கு வரும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜனவரி: 17, 18, 23, 25, 28, 29, பிப்ரவரி: 7, 8.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.

    ×