என் மலர்tooltip icon

    கும்பம் - Kumbam

    2025 மாசி மாத ராசிபலன்

    எதிர்கால திட்டங்களைப் பற்றி சிந்திக்கும் கும்ப ராசி நேயர்களே!

    மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அவரோடு பகைக் கிரகமான சூரியனும் உடன் இணைந்திருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இரண்டில் இருக்கும் ராகுவால் பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். என்றாலும் மனக்குழப்பம் அதிகரிக்கும்.

    திடீர் திடீரெனக் குணங்களில் மாற்றம் ஏற்படும். கொடுக்கல் - வாங்கல்களில் தடுமாற்றம் வரலாம். எதிர்மறை சிந்தனைகள் உருவாகும். சனி மற்றும் சூரியனுக்குரிய வழிபாடுகளோடு, குலதெய்வம், இஷ்டதெய்வம் வழிபாடுகளையும் மேற்கொள்வது நல்லது.

    சூரியன் - சனி சேர்க்கை

    இந்த மாதம் முழுவதும் கும்ப ராசியில் சூரியன் - சனி சேர்க்கை ஏற்படுகிறது. உங்கள் ராசிக்கு அதிபதியான சனி சப்தமாதிபதி சூரியனுடன் இணைந்திருப்பது அவ்வளவு நல்லதல்ல. வாழ்க்கைத் துணையோடு பிரச்சினை அதிகரிக்கும். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வருமானம் பலவழிகளிலும் செலவாகும். குடும்பச்சுமை கூடும்.

    பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் திடீரென மாற்றப்படலாம். அனுபவஸ்தர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் அன்றாட வாழ்க்கையை நன்றாக அமைத்துக் கொள்ள இயலும். ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கலாம். ஜீரண உறுப்புகள் சம்பந்தப்பட்ட தொல்லைகள் ஏற்படலாம். கவனம் தேவை.

    செவ்வாய் வக்ர நிவர்த்தி

    மிதுன ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய், மாசி 9-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு சகாய ஸ்தானாதிபதியான செவ்வாய், தொழில் ஸ்தானாதிபதியாகவும் விளங்குபவர். அவர் பலம்பெறும் இந்த நேரம் ஒரு பொன்னான நேரமாகும். புதிய திருப்பங்கள் பலவும் எற்படும். புனிதப் பயணங்கள் செல்லும் வாய்ப்பு உண்டு. வழக்குகள் சாதகமாக அமையும்.

    வருமானப் பற்றாக்குறை அகலும். நினைத்த நேரத்தில் நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். நிகழ்காலத் தேவைகள் படிப்படியாகப் பூர்த்தியாகும். புதிய ஒப்பந்தங்கள் அடிக்கடி வந்து சேரும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து பல நல்ல காரியங்களை முடித்துக் கொடுப்பார்கள்.

    மீன - புதன் சஞ்சாரம்

    மாசி 14-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம - அஷ்டமாதிபதியானவர் புதன். அஷ்டமாதிபதி நீச்சம் பெறுவது நன்மைதான். என்றாலும் பஞ்சமாதிபதியாகவும் அல்லவா புதன் விளங்குகிறார். எனவே நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும் நேரம் இது. பிள்ளைகள் வழியில் பெருமைக்குரிய தகவல் கிடைக்கும்.

    அவர்கள் தானாகவே சில முடிவுகளை எடுத்து, உங்களுக்கு மனக்கவலை தரும்விதம் நடந்துகொள்வர். பூர்வீக சொத்துக்களை விற்பதில் சில பிரச்சினைகள் வரலாம். எதையும் எளிதில் செய்ய இயலாது. பெரும் பிரயாசை எடுத்தே செய்ய முடியும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு நீண்ட தூரத்திற்கான மாறுதல் கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு நினைத்த இலக்கை அடைய முடியும். பெண்களுக்கு எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    பிப்ரவரி: 19, 20, 23, 24, மார்ச்: 2, 3, 6, 7.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.

    ×