கோரக்கருக்கு காட்சி அளித்த அம்மை-அப்பன்
- கோரக்கரை சமாதி அடையும் இடத்திற்கு போகர் அழைத்து வந்தார்.
- சிவசக்தியின் திருவருளும், கோரக்கரின் குருவருளும் நிரம்பி வழிகின்றது.
நவபாஷண முருகன் சிலையை போகரும், கோரக்கரும் செய்து, அதனை தைப்பூச பவுர்ணமி நாளில் பழனியில் நிறுவினர். அதன் பின், ஆசிரமத்தையும், கோவிலையும் பராமரிக்கும் வேலையை புலிப்பாணி சித்தரிடம் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து, போகர், கோரக்கரை அழைத்து என்னை பழனியில் சமாதி வைத்த பின், நீ வடக்கு பொய்கைநல்லூர் சென்று அங்கேயே தவம் செய்து கொண்டிரு, நான் என் சமாதியில் இருந்து வெளிப்பட்டு அங்கு வந்து உன்னை சமாதியில் அடக்கம் செய்கிறேன் என்றார்.
ஐப்பசி பரணியில் சமாதி அடைவேன்
அதன்படி கோரக்கர், போகரை சமாதியில் அடக்கம் செய்துவிட்டு வடக்கு பொய்கைநல்லூர் வந்தார். அப்போது அவரது சீடர்கள் அனைவரும் மக்கள் பணிகளை சிறப்பாக செய்து கொண்டிருந்தனர். அதைக்கண்டு மகிழ்ந்த கோரக்கர், தான் ஐப்பசி மாதம் பரணி நட்சத்திரத்தன்று சமாதி அடைந்து விடுவேன் எனக்கூறி விட்டு ஈசனை நினைத்து தியானத்தில் ஆழ்ந்திருந்தார்.
அப்போது போகர் பழனியில் உள்ள தன்னுடைய சமாதியில் இருந்து வெளிப்பட்டு தன் சீடர்களுக்கு தெரியாத வண்ணம் வடக்கு பொய்கைநல்லூர் வந்து சேர்ந்தார். அந்நாளில் கோரக்கரின் ஆசிரமம் விழாக்கோலம் பூண்டிருந்தது. கோரக்கர் சமாதி நிலை அடைவதை காண சித்தர்கள், முனிவர்கள், ஞானிகள், அடியார்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் அங்கு கூடி இருந்தனர். அப்போது கோரக்கரை சமாதி அடையும் இடத்திற்கு போகர் அழைத்து வந்தார்.
அம்மை-அப்பன் காட்சி
அப்போது போகர், கோரக்கரை பார்த்து கலியுகம் முடியும் வரை நீ இங்கு இருந்து உன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் வழங்க வேண்டும் என்று கூறினார். மேலும், எதிர்காலத்தில் நடக்க போகும் பல அதிசயங்களை பற்றியும் எடுத்துரைத்தார். அதன்பின், கோரக்கர் அன்னை பராசக்தி- ஈசன் திருவடிகளை தியானித்த வண்ணம் சமாதியில் இறங்கினார்.
அப்போது வானவர்களும், சித்தர்களும், முனிவர்களும், ரிஷிகளும் கோரக்கருக்கு வாழ்த்துக்கள் கூறி பூமாரி பொழிந்தனர். அப்போது அம்மை- அப்பன் கோரக்கருக்கு நேரில் காட்சி அளித்தனர். போகர் கோரக்கரை சமாதியில் அடக்கம் செய்தார். அதன்பின், இருவரும் வெட்டவெளியில் சங்கமம் ஆனார்கள். எனவே, தான் இந்த இடத்தில் ஈசன் திருவடிக்கு அனைத்து பூஜைகளும் நடைபெறுகின்றன. மேலும், அந்த இடத்தில் சிவசக்தியின் திருவருளும், கோரக்கரின் குருவருளும் நிரம்பி வழிகின்றது.