ஆன்மிக களஞ்சியம்
null

படிகாசுப் புலவர் என்ற பெயர் வரக் காரணம் என்ன?

Published On 2025-08-19 16:45 IST   |   Update On 2025-08-19 17:20:00 IST
  • கிராம மக்களுக்கு நல்வழி காட்டி அறிவுரை சொல்லும் வழக்கத்தையும் வைத்திருந்தார்.
  • தில்லைவாழ் சிதம்பரனே என்று மனமுருகி பாடல்கள் பாடி நடராஜர் பெருமானிடம் தனது மனக் குறைகளை வெளியிட்டார்.

திருச்செந்தூர் முருகனால் ஆட்கொள்ளப்பட்ட புலவர்களில் ஒருவர் படிக்காசுப் புலவர். ஆதிகாலத்தில் தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்ட தமிழகத்தின் வட பகுதியில் தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் பொன்விளைந்த களத்தூர் என்ற ஊரில் பிறந்தார். ஆதிகாலத்தில் இந்த ஊர் பொற்களந்தை என்று அழைக்கப்பட்டது.

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இவர் திருவாரூர் வைத்தியநாத நாவலரிடம் இலக்கண இலக்கியம் கற்று தமிழில் மிகச்சிறந்த புலமை மிக்கவராக மாறினார். அவர் இயற்றிய "தொண்டை மண்டல சதகம்" மற்றும் "தண்டலையார் சதகம்" ஆகிய நூல்கள் மிகவும் புகழ் பெற்றவை.

இளம் வயதில் இவர் ஊர் ஊராக போய் ஆலயங்களை தொழுவதை வழக்கத்தில் வைத்திருந்தார். அதோடு கிராம மக்களுக்கு நல்வழி காட்டி அறிவுரை சொல்லும் வழக்கத்தையும் வைத்திருந்தார். சிலர் ஏற்றுக் கொண்டனர். பெரும்பாலானவர்கள் அவரை கிண்டல் செய்தனர். என்றாலும் படிக்காசுப் புலவர் மனம் தளர்ந்தது இல்லை.

"ஒளி வீசும் விளக்கை அணைத்து விட்டு இவர்கள் வெளிச்சத்தை தேடி அலைகிறார்கள்" என்று பதில் அளித்து விட்டு அடுத்த ஊருக்கு சென்று விடுவார். அப்படி ஊர் ஊராக சென்ற அவர் ஒருமுறை சிதம்பரத்துக்கு சென்றார். அங்கு தில்லைவாழ் சிதம்பரனே என்று மனமுருகி பாடல்கள் பாடி நடராஜர் பெருமானிடம் தனது மனக் குறைகளை வெளியிட்டார்.

அப்போது அருகில் இருந்த அன்னை சிவகாம சுந்தரியிடமும் தனது ஏழ்மை நிலையை சொல்லி வருந்தி வேண்டுகோள் விடுத்தார். முருகருக்கு வேல் கொடுத்தாய். திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்தாய். மன்மதனுக்கு செங்கோல் கொடுத்தாய். ஆனால் எனக்கு மட்டும் எதுவும் தரவில்லையே ஏன்? என்று உரிமையோடு அன்னையிடம் பாடல்களில் கேள்வி கேட்டார்.

அவர் பாடி முடித்த அடுத்த நிமிடம் சிதம்பரம் பஞ்சாட்சரப் படிகளில் 5 தங்க காசுகளை அன்னை சிவகாம சுந்தரி எடுத்து போட்டாள். இதை கண்டதும் புலவர் உள்பட அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். இந்த நிகழ்வுக்கு பிறகுதான் அவருக்கு படிகாசுப் புலவர் என்ற பெயர் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து அவர் தமிழகத்தில் உள்ள மற்ற தலங்களுக்கும் யாத்திரை சென்றார். அங்குள்ள மக்களுக்கு தனது அருட்கவியால் மகிழ்ச்சி அடைய செய்தார். அவரது பாடல்களையும் வாக்குகளையும் மக்கள் தெய்வ வாக்காக கருதி வரவேற்றனர்.

Tags:    

Similar News