புதுச்சேரி

ஓடும் ரெயிலில் இருந்து தொழிலாளியை கீழே தள்ளிய கும்பல்- ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

Published On 2022-11-15 17:15 IST   |   Update On 2022-11-15 17:15:00 IST
  • புதுவை ரெயில் நிலையத்தில் இருந்து விழுப்புரம் சென்ற ரெயிலில் இளையராஜா பயணம் செய்தார்.
  • குடிபோதையில் ரகளை செய்ததை தட்டி கேட்டதால் ஆத்திரமடைந்த கும்பல் தொழிலாளியை ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளியதால் படுகாயமடைந்தார்.

புதுச்சேரி:

விழுப்புரம் அருகே தளவானூர் கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா (வயது39). கூலி தொழிலாளி. இவர் தினமும் புதுவைக்கு வேலைக்கு சென்று திரும்புவது வழக்கம்.

அதுபோல் நேற்று காலை இளையராஜா வேலைக்காக விழுப்புரத்தில் இருந்து பஸ்சில் புதுவை மூலக்குளம் வந்தார். மதியம் வேலை முடிந்ததும் புதுவை நகர பகுதிக்கு வந்த இளையராஜா பின்னர் ஊர் திரும்ப ரெயிலில் செல்ல விரும்பினார்.

அதன்படி புதுவை ரெயில் நிலையத்தில் இருந்து விழுப்புரம் சென்ற ரெயிலில் இளையராஜா பயணம் செய்தார். அவர் பயணம் செய்த ரெயில் பெட்டியில் 4 வாலிபர்கள் வந்தனர். குடிபோதையில் இருந்த அவர்கள் ரெயில் புறப்பட்டது முதலே ரகளை செய்து கொண்டு வந்தனர்.

வில்லியனூர் அருகே கோனேரிக்குப்பம் ஆற்று பாலத்தை ரெயில் கடந்த போது அந்த வாலிபர்களின் செயல்கள் எல்லை மீறியதால் அவர்களை இளையராஜா தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் இளையராஜாவிடம் தகராறு செய்தனர். மேலும் அவரை ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளி விட்டனர்.

இதில் இளையராஜா படுகாயமடைந்தார். மேலும் அவருக்கு கை மற்றும் காலில் முறிவு ஏற்பட்டு அந்த இடத்தில் துடிதுடித்துக்கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து மற்றொரு ரெயில் அந்த வழியாக வந்தது. அடிபட்டு கிடந்த இளையராஜாவை பார்த்ததும் ரெயில் என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தி இளையராஜாவை மீட்டு கண்டமங்கலம் ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தார்.

உடனே ரெயில்வே போலீசார் 108 ஆம்புலன்சை வரவழைத்து இளையராஜாவை சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News