புதுச்சேரி

வெடிகுண்டு வெடித்த இடத்தை போலீஸ் சூப்பிரண்டு தீபிகா பார்வையிட்ட காட்சி


null

புதுவையில் நள்ளிரவில் வைத்தியநாதன் எம்.எல்.ஏ. வீடு அருகே குண்டு வெடிப்பு- கொல்ல சதியா?

Published On 2022-07-20 11:58 IST   |   Update On 2022-07-20 14:51:00 IST
  • புதுவையில் கடந்த சில ஆண்டுகளாக வெடிகுண்டு கலாச்சாரம் பெருகி விட்டது.
  • புதுவையில் நடைபெறும் பெரும்பாலான கொலைகள் இந்த பாணியை பின்பற்றியே நடந்து வருகின்றன.

புதுச்சேரி:

லாஸ்பேட்டையில் நள்ளிரவில் வைத்தியநாதன் எம்.எல்.ஏ. வீடு அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுவையில் கடந்த சில ஆண்டுகளாக வெடிகுண்டு கலாச்சாரம் பெருகி விட்டது. ரவுடிகள் தங்களது எதிராளிகளை கொல்ல நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். முதலில் வெடிகுண்டு வீசி எதிராளிகளை நிலைகுலைய செய்து விட்டு பின்னர் அரிவாளால் வெட்டி கொல்லும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

புதுவையில் நடைபெறும் பெரும்பாலான கொலைகள் இந்த பாணியை பின்பற்றியே நடந்து வருகின்றன. புதுவை நகர பகுதிகள் மட்டுமின்றி கிராம புறங்களிலும் இளம் ரவுடிகள் நாட்டு வெடிகுண்டை தயாரித்து எதிராளிகளை மிரட்டி வருகின்றனர்.

சில நாட்களாக இதுபோன்ற சம்பவங்கள் புதுவையில் நடைபெறாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு லாஸ்பேட்டையில் அமைந்துள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ. வைத்தியநாதன் வீடு அருகே பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. இதனால் அப்பகுதி மக்கள் ஏதோ விபரீதம் நடந்ததாக கருதி வீட்டை விட்டு வெளியே வரவே பயந்தனர். சிலர் துணிந்து வெளியே வந்து பார்த்தனர்.

அப்போது வெடிகுண்டு வெடித்த இடத்தில் புகை மண்டலமாக காட்சியளித்தது. யாரோ மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசி சென்றது தெரியவந்தது.

வைத்தியநாதன் எம்.எல்.ஏ.வை கொல்லும் முயற்சியில் இந்த சம்பவம் நடந்ததா? அல்லது அவரை மிரட்டுவதற்காக வெடிகுண்டை வீசி சென்றார்களா? என்பது தெரிய வில்லை.

கடந்த சில நாட்களுக்கு லாஸ்பேட்டையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சரவணன் வேலூர் பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரை யாரோ கொலை செய்து விட்டதாக வைத்தியநாதன் எம்.எல்.ஏ. புகார் தெரிவித்தார். இந்த புகாரின் எதிரொலியாக வைத்தியநாதன் எம்.எல்.ஏ. வீடு அருகே வெடிகுண்டு வீசப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சம்பவ இடத்தில் இன்று காலை போலீஸ் சூப்பிரண்டு தீபிகா சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு கிடந்த வெடிகுண்டு சிதறல்களை சேகரித்து வருகின்றனர்.

தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வெடிகுண்டு வீசிய மர்ம நபர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

நள்ளிரவில் வைத்தியநாதன் எம்.எல்.ஏ. வீடு அருகே வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News