புதுச்சேரி

மாநில அந்தஸ்து விவகாரம்: புதுவை அரசியல் கட்சிகள் மோதல்- முதல்-அமைச்சர் ரங்கசாமி மீது கடும் விமர்சனம்

Published On 2022-12-20 11:51 IST   |   Update On 2022-12-20 11:51:00 IST
  • தேர்தல் சமயத்தில் அனைத்து அரசியல்கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் மாநில அந்தஸ்து கோஷம் நிச்சயம் இடம்பெறும்.
  • மாநில அந்தஸ்து கோரிக்கை அரசியல் கட்சிகளிடையே காரசார விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி:

புதுவைக்கு மாநில அந்தஸ்து என்ற கோஷம் அரை நூற்றாண்டுகாலமாக நிலவி வருகிறது.

கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை போல திடீரென வலுப்பெற்றும், திடீரென கரைந்து காணாமல் போவதும் வழக்கம். தேர்தல் சமயத்தில் அனைத்து அரசியல்கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் மாநில அந்தஸ்து கோஷம் நிச்சயம் இடம்பெறும்.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போதும், மாநில அந்தஸ்துக்காக தேர்தலையும் புறக்கணிக்க தயார் என தற்போதைய முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

மாநில அந்தஸ்து தரும் கட்சியுடன்தான் கூட்டணி எனவும் தெரிவித்தார். தேர்தலுக்கு பிறகு 1 ½ ஆண்டாக மாநில அந்தஸ்து பிரச்சினை மக்கள் மத்தியில் கொண்டு வரப்படவில்லை. தற்போது மீண்டும் மாநில அந்தஸ்து விவகாரம் சூடுபிடித்துள்து. அதிலும் முதல்-அமைச்சர் ரங்கசாமி, தனக்கு அதிகாரம் இல்லாததால், மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியாத மன உளைச்சலில் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், மாநில அந்தஸ்து பெற சட்டப்படி செய்ய வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம் எனவும் தெரிவித்தார்.

இதனால், மாநில அந்தஸ்து விவகாரம் மாநிலம் முழுவதும் மீண்டும் பரபரப்பானது. இதனையடுத்து முதல்-அமைச்சர் ரங்கசாமியின் கருத்துக்கு கூட்டணி கட்சியான பா.ஜனதா, அ.தி.மு.க. எதிர்கட்சிகளான தி.மு.க., காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளன.

பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் கூறும்போது, மாநில அந்தஸ்து பெற நம்மிடம் வருவாய் இருக்க வேண்டும். இயற்கை வளம் இல்லாத புதுவையில் வருவாயை பெருக்கும் வழிமுறைகள் இல்லாதபோது மாநில அந்தஸ்து பெறுவதில் என்ன பயன்? என கேள்வி எழுப்பினார்.

அ.தி.மு.க. மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் கூறும்போது, தனக்கு ஆபத்து வரும்போதெல்லாம் மாநில அந்தஸ்து கோரிக்கையை கையில் எடுப்பதை முதல்-அமைச்சர் ரங்கசாமி வாடிக்கையாக வைத்துள்ளார்.

காங்கிரஸ், என்.ஆர். காங்கிரசில் முதல்- அமைச்சராக இருந்தபோது மாநில அந்தஸ்துபெற ரங்கசாமி என்ன முயற்சியை எடுத்தார்? தற்போது மதுபான ஆலை விவகாரத்தை மூடி மறைக்க அரசியல் நாடகமாடுகிறார் என கூறினார்.

எதிர்கட்சி தலைவர் சிவா கூறும்போது, மதுபான தொழிற்சாலை, மதுபார்கள் அமைக்க அரசு அனுமதி கிடைக்கிறது. மின்துறை தனியார்மயத்திற்கு அனுமதி கிடைக்கிறது. ஆனால் மக்கள் நலத்திட்டங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லையா? இதற்கு மாநில அந்தஸ்து வேண்டுமா? மேலிருந்து சமிக்ஞை வந்தால் அதை நிறைவேற்றும் முதல்-அமைச்சராக ரங்கசாமி திகழ்கிறார். மீண்டும் மாநில அந்தஸ்து விவகாரத்தில் ரங்கசாமி அரசியல் நாடகத்தை அரங்கேற்றுகிறார் என குற்றம்சாட்டினார்.

காங்கிரஸ் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறும்போது, மத்திய அரசு பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் எழுப்பிய கேள்விக்கு, புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க முடியாது என பதிலளித்துள்ளது. வெறுமனே புலம்பினால் மாநில அந்தஸ்து கிடைத்துவிடாது. மாநில அந்தஸ்து பெற ரங்கசாமி என்ன முயற்சி செய்தார்? மத்திய அரசை எதிர்த்து அவர் போராட தயாரா? என கேள்வி எழுப்பினார்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் லட்சுமிநாராயணன் கூறும்போது, மாநில அந்தஸ்து என்ற நோக்கத்தோடுதான் முதல்- அமைச்சர் ரங்கசாமி என்.ஆர்.காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். மாநில அந்தஸ்து பெற தொடர்ந்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி வருகிறார். பிரதமரை சந்தித்த போதும் மாநில அந்தஸ்து கேட்டு வலியுறுத்தினார். தொடர்ந்து மாநில அந்தஸ்து பெறும் அனைத்து முயற்சிகளையும் அரசு எடுக்கும் என கூறினார்.

மாநில அந்தஸ்து விவகாரம் புதுவையில் அரசியல் கட்சிகளிடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது. முதல்- அமைச்சர் ரங்கசாமி மீது விமர்சனங்கள் கடுமையாக எழுந்துள்ளது. இந்த நிலையில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறும்போது, புதுவைக்கு எது நல்லதோ? அதை மத்திய அரசு நிச்சயம் செய்யும் என்று மட்டும் தெரிவித்தார்.

இதேபோல கவர்னர் தமிழிசை கூறும்போது, மாநில அந்தஸ்து இருந்தால் என்னென்ன நடக்குமோ? அவையெல்லாம் தற்போது நடந்து வருவதாகவும், எந்த திட்டத்திற்கும் அனுமதி வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதில்லை. ஒரு சில அதிகாரிகள் காலதாமதம் செய்தால் அவர்களை அழைத்து பேசுவதாகவும், ரங்கசாமியின் மன உளைச்சளை போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மாநில அந்தஸ்து கோரிக்கை அரசியல் கட்சிகளிடையே காரசார விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News