தமிழக ரவுடிகள் பதுங்கலா?- புதுவை லாட்ஜூகளில் போலீசார் அதிரடி சோதனை
- கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ரவுடிகள் புதுவை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் புகுந்து இருப்பதாக கூறப்படுகிறது.
- புதுவை மாநில போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுகுமார் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு லாட்ஜூகள், ஓட்டல்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
தமிழக போலீசார் ரவுடிகள், பழைய குற்றவாளிகள், தலைமறைவு ரவுடிகளை கைது செய்ய ஒரே நாளில் அனைத்து மாவட்டங்களிலும் மின்னல் ரவுடி வேட்டை என்ற திட்டத்தை செயல்படுத்தினர்.
இதில் தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 95 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழக போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் அச்சமடைந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் அண்டை மாநிலங்களுக்கு தப்பி சென்று பதுங்கியுள்ளதாக தமிழக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. குறிப்பாக கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ரவுடிகள் புதுவை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் புகுந்து இருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து புதுவை மாநில போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுகுமார் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு லாட்ஜூகள், ஓட்டல்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் 2-வது நாளாக நேற்று இரவு 9 மணி முதல் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு வம்சித ரெட்டி, இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் சிறப்பு அதிரடி படை போலீசார் புதுவையில் புதிய பஸ் நிலையம் பகுதிகளில் உள்ள லாட்ஜூகள் மற்றும் ஓட்டல்களில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள பதிவேட்டை பார்வையிட்டு யார்? யார்? தங்கியுள்ளனர் என்று விசாரணை நடத்தினர்.
பின்னர் அங்குள்ள அறைகளுக்கு சென்று தங்கியிருந்தவர்களிடம் அடையாள அட்டை மற்றும் ஆவணங்களை சோதனை செய்தனர். இந்த சோதனையில் போது தமிழக ரவுடிகள் யாரும் சிக்கவில்லை.
இதுகுறித்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா கூறும் போது, தமிழகத்தில் இருந்து தப்பிய குற்றவாளிகள் பட்டியலை அந்த மாநில போலீசார் எங்களுக்கு கொடுத்துள்ளனர். இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றார்.