புதுச்சேரி

மின்தடையால் புதுவை இருளில் மூழ்கியது- நள்ளிரவு வரை நீடித்த மறியல் போராட்டம்

Published On 2022-10-02 04:14 GMT   |   Update On 2022-10-02 04:14 GMT
  • கடற்கரை சாலையில் உள்ள தலைமை செயலகத்தை எம்.எல்.ஏ.க்கள் நேரு, பிரகாஷ்குமார் ஆகியோர் பொதுமக்களுடன் வந்து முற்றுகையிட்டு தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தினார்கள்.
  • லாஸ்பேட்டையில் வைத்தியநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் பொதுமக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி:

புதுவையில் மின்துறை தனியார் மயமாக்கத்தை கண்டித்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 5-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் புதுவையில் மின் தடை தொடர்கதையாக இருந்து வருகிறது.

புதுவையில் நகர் மற்றும் கிராமப் புறங்களில் நேற்றும் பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டது. மாலை 5.30 மணி அளவில் நகர், கிராமங்கள் உள்பட மாநிலம் முழுவதும் மின்தடை ஏற்பட்டது.

இரவு வெகுநேரமாகியும் மின் வினியோகம் சீராகவில்லை. இ்தனால் பஜார் பகுதியான நேரு வீதி, அண்ணாசாலை, காமராஜர் சாலை, புஸ்சி வீதி மற்றும் பஸ் நிலையம், முத்தியால்பேட்டை, வெங்கட்டாநகர், முதலியார்பேட்டை, ஒயிட் டவுன், கடற்கரை சாலை, உப்பளம் ஆகிய பகுதிகளும், கிராமங்களும் இருளில் மூழ்கின.

இதற்கிடையே கடற்கரை சாலையில் உள்ள தலைமை செயலகத்தை எம்.எல்.ஏ.க்கள் நேரு, பிரகாஷ்குமார் ஆகியோர் பொதுமக்களுடன் வந்து முற்றுகையிட்டு தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தினார்கள். லாஸ்பேட்டையில் வைத்தியநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் பொதுமக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

ராஜா தியேட்டர் சந்திப்பு நெல்லித்தோப்பு தொகுதி, காமராஜர் நகர், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் சாலை மறியல் நடைபெற்றது. கிராமபுற பகுதிகளான திருக்கனூர் கடை வீதி, கொடாத்தூர், சோரப்பட்டு, வாதானூர், விநாயகம் பட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் சாலை மறியல் நடைபெற்றது.

மாநிலம் முழுவதும் நகர் மற்றும் கிராம புறங்களில் நடந்த திடீர் மறியலால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இந்த நிலையில் இரவு 9 மணிக்கு மேல் ஒவ்வொரு பகுதியாக மின் விநியோகம் செய்யப்பட்டதால் சகஜ நிலை திரும்பியது. ஆனாலும் வேறு சில இடங்களில் இரவு 11 மணிக்கு பிறகும் மின் விநியோகம் சீராகவில்லை. கிருமாம்பாக்கம், புதுநகர், கன்னியக்கோவில், முள்ளோடை பகுதிகளில் மின் வெட்டு தொடர்ந்ததால் இரு சக்கர வாகனங்கள் கூட நுழைய முடியாத அளவுக்கு தடுப்புகள் வைத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அங்கு அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன் ஆகியோர் வந்து மின் விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். ஆனாலும், பொதுமக்கள் இரவு 11 மணிக்கு பிறகும் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்தனர்.

Tags:    

Similar News