புதுச்சேரி
ரோட்டில் மரங்களை வெட்டிப்போட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி.

மின் தடையை கண்டித்து ரோட்டில் மரங்களை வெட்டிப்போட்டு பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2022-09-29 11:15 GMT   |   Update On 2022-09-29 11:15 GMT
  • தண்ணீர் இல்லாமல் துத்திப்பட்டு மக்கள் அவதிப்பட்டனர்.
  • பொதுமக்கள் மின் துறை அதிகாரிகள், போலீசாருக்கு புகார் அளித்தும் மின் வினியோகம் இல்லை.

சேதராப்பட்டு:

புதுவையில் மின் துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து மின் துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இதனால் நேற்று பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டது. இதனை கண்டித்து பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுவை சேதராப்பட்டு அடுத்த துத்திப்பட்டு கிராமத்தில் நேற்று மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மின்சாரம் இல்லாமல் இருந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் தொண்டமாநத்தம் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்திற்கு திரண்டு சென்று மின்துறை ஊழியர்களிடம் புகார் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இரவு மின்சாரம் வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை சுமார் 5 மணி அளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தண்ணீர் இல்லாமல் துத்திப்பட்டு மக்கள் அவதிப்பட்டனர். பொதுமக்கள் மின் துறை அதிகாரிகள், போலீசாருக்கு புகார் அளித்தும் மின் வினியோகம் இல்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த துத்திப்பட்டு கிராம பொதுமக்கள் அங்குள்ள தேவாலயம் அருகே மெயின் ரோட்டில் மரங்களை வெட்டி சாலையில் போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் சேதராபட்டிலிருந்து பத்துகண்ணு செல்லும் சாலையிலும், கடப்பேரி குப்பத்திலிருந்து புதுவை செல்லும் சாலைகளிலும் நீண்ட தூரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டது.

சம்பவம் அறிந்து அங்கு சென்ற சேதராப்பட்டு போலீசார் சமரச முயற்சியில் ஈடுபட்டனர். மின் வினியோகம் கிடைக்கும் வரை மறியலை கைவிடமாட்டோம் என பொதுமக்கள் திட்டவட்டமாக கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News