புதுச்சேரி

புதுவை அருகே கஞ்சா விற்ற மருத்துவ மாணவர்- விளையாட்டு பயிற்சியாளர் கைது

Published On 2022-12-20 12:08 IST   |   Update On 2022-12-20 12:08:00 IST
  • முன்னாள் மருத்துவ மாணவர், பள்ளி விளையாட்டு பயிற்சியாளர் ஆகியோரிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • இருவரும் பயன்படுத்திய கஞ்சா புகைக்கும் குடுவைகள் பாங்கு பறிமுதல் செய்யப்பட்டது.

சேதராப்பட்டு:

புதுவை அருகே உள்ள கோட்டக்குப்பம் அடுத்த பெரியமுதலியார்சாவடி கந்தப்பு முதலியார் வீதியில் ஒரு வீட்டில் அடிக்கடி அடையாளம் தெரியாத ஒரு சிலர் வந்து செல்வதாகவும் அந்த வீட்டிலிருந்து கஞ்சா புகை வாசனை அடிக்கடி வருவதாகவும் கோட்டகுப்பம் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து கோட்டகுப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் ரகசியமாக சென்று வீட்டுக்குள் நுழைந்து பார்த்ததில் உள்ளே கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. அங்கு இருந்த ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் ஸ்டீபன்ராஜ் என்பதும் புதுவை சித்தானந்தா கோவில் அருகே உள்ள பள்ளியில் சாப்ட் பால் பயிற்சியாளராக இருந்து வருவதும் தெரியவந்தது.

இவரும் எல்லைப் பிள்ளை சாவடியைச் சேர்ந்த தனியார் மருத்துவக்கல்லூரியில் படித்து இடையில் படிப்பை நிறுத்திய ஆனந்தகுமாரும் சேர்ந்து வட மாநிலங்களில் இருந்து கஞ்சா வாங்கி கோட்டக்குப்பம் மற்றும் புதுவை பகுதியில் குறிப்பாக மருத்துவ மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதை தொடர்ந்து ஸ்டீபன்ராஜ், ஆனந்தகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இருவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இவர்கள் இருவரும் பயன்படுத்திய கஞ்சா புகைக்கும் குடுவைகள் பாங்கு பறிமுதல் செய்யப்பட்டது.

கோட்டக்குப்பம் அருகே சுற்றுலா பயணிகள், படிக்கும் மாணவர்கள் போல் வீடு வாடகைக்கு எடுத்து கஞ்சா விற்பனை செய்து வருபவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

தற்போது முன்னாள் மருத்துவ மாணவர், பள்ளி விளையாட்டு பயிற்சியாளர் ஆகியோரிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News