புதுச்சேரி

இந்தியா ஒற்றுமையாக இருப்பதற்கு காசி தமிழ் சங்கமம் மிகப்பெரிய வாய்ப்பை தந்துள்ளது- தமிழிசை

Published On 2022-11-26 06:16 GMT   |   Update On 2022-11-26 06:16 GMT
  • ராமேசுவரத்திற்கு வந்த பின் காசிக்கு சென்று வணங்க வேண்டும் என்ற இணைப்பை, கலாசார, ஆன்மிக பிணைப்பை பிரதமர் மோடி ஏற்படுத்தி தந்து இருக்கிறார்.
  • இந்தியா ஒற்றுமையாக இருப்பதற்கு காசி தமிழ் சங்கமம் மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறது.

புதுச்சேரி:

காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இருக்கும் பிணைப்பை பிரதமர் மோடி புதுப்பித்து இருப்பதாக புதுவை-தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

காசியில் நடைபெற்று வரும் தமிழ் சங்கமத்தில், புதுவை மற்றும் தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார். அங்கு நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் இருந்து காசிக்கு வருகை தந்து வணக்கம் சொல்லும் வாய்ப்பை அளித்த பிரதமருக்கு நன்றியை தெரிவிக்கிறேன். தமிழகத்தில் யாத்திரை செய்யும் எல்லோரும் காசி-ராமேசுவரம் என்ற சொற்றொடரை பயன்படுத்துவது மிகவும் பிரபலமானது.

ராமேசுவரத்திற்கு வந்த பின் காசிக்கு சென்று வணங்க வேண்டும் என்ற இணைப்பை, கலாசார, ஆன்மிக பிணைப்பை பிரதமர் மோடி ஏற்படுத்தி தந்து இருக்கிறார்.

காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான பிணைப்பு இன்று, நேற்றல்ல காலம் காலமாக இருந்து வருவது ஆகும். இந்த இணைப்பை பிரதமர் தற்போது புதுப்பித்து தந்து இருக்கிறார்.

இங்கு நடைபெறும் கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், நாதஸ்வரம் போன்ற கலாசார நிகழ்வுகளை பார்க்கும் போது கலை வடிவிலும்கூட தமிழ்நாட்டுக்கும், காசிக்கும் பிணைப்பு இருப்பது தெரிய வருகிறது.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பிரதமர், தமிழ் இருக்கை அமைத்து இருக்கிறார். கங்கையை தூய்மைப்படுத்த தமக்கு கிடைக்கும் பரிசுப் பொருட்களின் விற்பனையின் மூலம் பெறப்படும் தொகை செலவிடப்படுகிறது.

இந்தியா ஒற்றுமையாக இருப்பதற்கு காசி தமிழ் சங்கமம் மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறது. மகாகவி பாரதியின் பேரனை காசியில் சந்தித்தேன். காசி தமிழ் சங்கமம் குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அங்குள்ள பாரதி சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

Similar News