அரவிந்தர் ஆசிரமம் பள்ளியில் தீ விபத்து
- புதுவையில் இயங்கி வரும் அரவிந்தர் ஆசிரமத்துக்கு சொந்தமான பள்ளி உள்ளது.
- தீ விபத்தில் பள்ளி அறையில் இருந்த நாற்காலி, மேஜைகள் மற்றும் மேற்கூரை மரக்கட்டைகள் எரிந்து சேதமானது.
புதுச்சேரி:
புதுவையில் இயங்கி வரும் அரவிந்தர் ஆசிரமத்துக்கு சொந்தமான பள்ளி உள்ளது.
அரவிந்தர், அன்னையின் சமாதி அருகே உள்ள கட்டிடத்தில் இந்த பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இப்பள்ளியில் நேற்று நள்ளிரவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனை அறிந்த ஆசிரம நிர்வாகத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து தீயணைப்பு வாகனத்தில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
இரவு நேரம் என்பதால் பள்ளி கூடத்தில் யாரும் இல்லாததால் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை.
தொடர்ந்து தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் பெரிய கடை போலீசார் தீ எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது பள்ளி அறையில் வைக்கப்பட்டுள்ள வளர்ப்பு மீன்கள் தொட்டியில் உள்ள மின் வயரில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது.
இந்த தீ விபத்தில் பள்ளி அறையில் இருந்த நாற்காலி, மேஜைகள் மற்றும் மேற்கூரை மரக்கட்டைகள் எரிந்து சேதமானது.
இதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.