புதுச்சேரி

யானை லட்சுமிக்கு 16-ம் நாள் நினைவேந்தல்

Published On 2022-12-15 08:17 GMT   |   Update On 2022-12-15 08:17 GMT
  • யானை லட்சுமியின் 16-ம் நாள் நினைவேந்தல் இன்று அனுசரிக்கப்பட்டது.
  • ஈஸ்வரன் கோவில் பின்புறம் யானை லட்சுமி வசித்த கொட்டிலில் நினைவேந்தல் நிகழ்வு நடந்தது.

புதுச்சேரி:

புதுவையின் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் லட்சுமி என்ற 33 வயது யானை இருந்தது.

யானை லட்சுமி கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் அன்பை பெற்றிருந்தது. கடந்த 30-ந்தேதி யானை லட்சுமி நடைபயிற்சிக்கு சென்றபோது திடீரென மயங்கி விழுந்து இறந்தது.

யானையின் இறுதி சடங்கில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். யானை லட்சுமிக்கு நினைவிடம் அமைக்க வேண்டும், கோவிலுக்கு புதிய யானை வாங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் யானை லட்சுமியின் 16-ம் நாள் நினைவேந்தல் இன்று அனுசரிக்கப்பட்டது. ஈஸ்வரன் கோவில் பின்புறம் யானை லட்சுமி வசித்த கொட்டிலில் நினைவேந்தல் நிகழ்வு நடந்தது.

மணக்குள விநாயகர் கோவில் நிர்வாகிகள் சார்பில் படம், கும்பம் வைத்து, பழம் வைத்து பூஜை செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் பலரும் விளக்கேற்றியும், மலர் தூவியும் வழிபட்டனர்.

யானை லட்சுமியின் பாகன் சக்திவேல் தொடர்ந்து சோகமாக இருந்து வருகிறார். அவரின் குடும்பத்தினர் நினைவேந்தலுக்காக அங்கு தங்கியுள்ளனர். நேற்று இரவு யானையின் சாண வாசம் அடித்ததாக சக்திவேல் கூறினார். மேலும் யானையின் கால்தடம் 2 இடத்தில் இருந்ததாகவும் தெரிவித்தார். இந்த இடத்திலும் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

Tags:    

Similar News