புதுச்சேரி

புதுவை மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

Published On 2022-09-28 12:40 IST   |   Update On 2022-09-28 12:40:00 IST
  • மின்துறையை தனியார் மயமாக்க அமைச்சரவை பரிந்துரை செய்ததாக தகவல் வெளியானதை தொடர்ந்து மீண்டும் மின் ஊழியர்கள் போராட்டத்தை தொடங்கினர்.
  • விதிப்படி வேலை, புதிய மின் இணைப்பு அளிப்பதில்லை, மின் கட்டணம் கணக்கிட்டு ரசீது வழங்குவதில்லை என அறிவித்து போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி:

யூனியன் பிரதேசங்களுக்கான மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

புதுவை மாநிலத்தில் அரசின் மின்துறையை தனியார் மயமாக்கும் பூர்வாங்க நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியது. இதை கண்டித்து புதுவை மின்துறை பொறியாளர்கள், ஊழியர்கள் இணைந்து தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு என்ற அமைப்பை உருவாக்கி போராட்டம் நடத்த தொடங்கினர்.

கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கு அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அதோடு சட்டமன்றத்தில் மின்துறையை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கும் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதிதாக பொறுப்பேற்ற என்ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணி அரசின் அமைச்சரவை கூட்டத்தில் மின்துறையை தனியார் மயமாக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மேலும், தனியார்மயம் தொடர்பான வரைவு அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து மின்துறை போராட்ட குழுவினர் பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்தத்தை கடந்த பிப்ரவரியில் தொடங்கினர்.

இதனால் மின்துறை பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது. இதனிடையே தொழிற்சங்கத்தை கலந்து ஆலோசிக்காமல் எவ்வித முடிவும் எடுக்க மாட்டோம் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி வாக்குறுதி அளித்தார். இதனை ஏற்று மின்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை திரும்ப பெற்றனர்.

இந்த நிலையில் மின்துறையை தனியார் மயமாக்க அமைச்சரவை பரிந்துரை செய்ததாக தகவல் வெளியானதை தொடர்ந்து மீண்டும் மின் ஊழியர்கள் போராட்டத்தை தொடங்கினர்.

விதிப்படி வேலை, புதிய மின் இணைப்பு அளிப்பதில்லை, மின் கட்டணம் கணக்கிட்டு ரசீது வழங்குவதில்லை என அறிவித்து போராட்டம் நடத்தினர். மீண்டும் அரசு தரப்பில் வாக்குறுதி அளித்ததால் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த நிலையில் மின்துறை தனியார் மயத்துக்கான டெண்டர் நேற்று வெளியிடப்பட்டது.

இதில். முன்மொழிவுக்கான கோரிக்கை வருகிற 30-ந் தேதி தொடங்கும். நவம்பர் 25-ந் தேதி விண்ணப்பிக்க இறுதிநாள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மின் ஊழியர்கள் மீண்டும் இன்று (புதன்கிழமை) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர். புதுவை முழுவதும் மின்துறை அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து வம்பாகீரப்பாளையத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் திரண்டனர்.

அங்கு அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு போராட்ட குழு தலைவர் அருள்மொழி தலைமை தாங்கினார். பொதுசெயலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார்.

போராட்டக்காரர்கள் தலைமை அலுவலகத்தின் நுழைவு வாயில் கதவை மூடினர். மாநிலம் முழுவதும் ஒட்டு மொத்தமாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் மின் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது. மின் கட்டண வசூல் மையங்களும் மூடப்படாததால் கட்டணம் செலுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

Tags:    

Similar News