புதுவையில் அரசு பெண்கள் பள்ளியில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய 3 ஆசிரியர்கள் சஸ்பெண்டு
- ஆசிரியர்கள் தவறான கண்ணோட்டத்தில் அணுகுவதாகவும், அவர்களது செய்கை, பார்வை சரியில்லை என மாணவிகள் புகார் தெரிவித்தனர்.
- புகாரில் சிக்கிய 3 ஆசிரியர்களையும் சஸ்பெண்டு செய்தும், துறை ரீதியான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை நகர பகுதியில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைபள்ளியில் சமீபத்தில் பெற்றோர்-ஆசிரியர் கூட்டம் நடந்தது. அதில் 50-க்கும் மேற்பட்ட பெற்றோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பாதுகாப்பு குறித்து விவாதித்த போது பெரும்பாலான பெற்றோர் அச்சம் தெரிவித்தனர். பள்ளியில் 3 ஆசிரியர்கள், மாணவிகளிடம் தவறான கண்ணோட்டத்தில் அணுகுவதாகவும், ஆபாசமாக பேசுவதாக திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
புகாரை பள்ளி நிர்வாகம் மறுத்த நிலையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து 20-க்கும் மேற்பட்ட பெற்றோர், கல்வித்துறை செயலரை சந்தித்து, அரசு பள்ளியில் பயிலும் தங்கள் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என எழுத்து பூர்வமாக புகார் அளித்தனர்.
அதனைத்தொடர்ந்து கல்வித்துறை செயலர் உத்தரவின் பேரில், பள்ளி கல்வி அதிகாரிகள் அடங்கிய குழுவினர், பள்ளிக்கு சென்று பெற்றோர் மற்றும் மாணவிகளிடம் தனித்தனியே விசாரணை நடத்தினர்.
அதில் 3 ஆசிரியர்கள் தவறான கண்ணோட்டத்தில் அணுகுவதாகவும், அவர்களது செய்கை, பார்வை சரியில்லை என மாணவிகள் தெரிவித்தனர்.
அதன்பேரில் புகாரில் சிக்கிய 3 ஆசிரியர்களையும் சஸ்பெண்டு செய்தும், துறை ரீதியான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் இவ்விவகாரம் குறித்து அறிந்த குழந்தை நலக்குழு தலைவர் சிவகாமி, பள்ளியில் மாணவிகளிடம் நடந்த அத்துமீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.
இச்சம்பவம் பள்ளி கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.