வழிபாடு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்

சித்ரா பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல அனுமதி: 15 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்ப்பு

Published On 2022-04-08 10:44 IST   |   Update On 2022-04-08 12:35:00 IST
கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு சித்ரா பவுர்ணமி கிரிவலத்துக்கு அனுமதியளித்து இருப்பதால் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், போக்குவரத்து, சுகாதார வசதிகளை முழுமையாக செய்து தருவது குறித்து துறை வாரியாக ஆலோசனை நடத்தப்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் வரும் பக்தர்கள் ஒவ்வொரு மாத பவுர்ணமி நாட்களிலும் கிரிவலம் செல்வது வழக்கம். பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

இதில் சித்ரா பவுர்ணமி வழிபாட்டுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள். வருகிற 15, 16-ந்தேதிகளில் சித்ரா பவுர்ணமி நடைபெறுகிறது.

இதனையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆலோசனை கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு சித்ரா பவுர்ணமி கிரிவலத்துக்கு அனுமதியளித்து இருப்பதால் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், போக்குவரத்து, சுகாதார வசதிகளை முழுமையாக செய்து தருவது குறித்து துறை வாரியாக ஆலோசனை நடத்தப்பட்டது.

சித்ரா பவுர்ணமி கிரிவலத்துக்கு சுமார் 15 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை அனைத்து துறையினரும் செய்து தர ஏற்பாடு செய்ய வேண்டும். நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க வேண்டும்.

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தேவையான எண்ணிக்கையில் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும். பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதியை நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஒருங்கிணைந்து செய்ய வேண்டும். நகரின் முக்கிய இடங்கள் மற்றும் கிரிவலப் பாதையில் முதலுதவி சிகிச்சை மையங்களை அமைக்க வேண்டும்.

தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் வரிசையை முறைப்படுத்தி நெரிசல் ஏற்படாமல் தரிசனம் செய்ய அனுப்ப வேண்டும். கொரோனா தொற்று முற்றிலுமாக குறையவில்லை. கட்டுப்பாடுகள் மட்டுமே தளர்த்தப்பட்டுள்ளது. எனவே பக்தர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி முககவசம் அணியவும், நெரிசலை தவிர்க்கவும் வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆன்மீக அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் சார்பில் அன்னதானம் வழங்க 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த இடத்தில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும்.

அன்னதானம் வழங்குபவர்கள் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் வரும் 14-ந்தேதிக்குள் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.

அனுமதிக்கப்படாத இடத்தில் அன்னதானம் வழங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாம்...திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவிலில் தோஷங்கள் விலக பரிகார பூஜை

Similar News