செய்திகள்
ஆடிபெருக்கு

ஆடிபெருக்கு, ஆடி அமாவாசையில் மேட்டூர் காவிரி ஆற்றில் பொதுமக்கள் நீராட தடை

Published On 2021-07-31 10:27 IST   |   Update On 2021-07-31 13:46:00 IST
சுற்றுலாத்தலமான மேட்டூருக்கு ஆடி மாத விசே‌ஷ நாட்களில் சேலம் மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

ஆடி மாதம் 18-ந்தேதி ஆடிப்பெருக்கு பண்டிகை கொண்டாடப்படுகிறது. வருகிற 3-ந்தேதி ஆடிப்பெருக்கு பண்டிகை வருகிறது. இந்த நாளில் பக்தர்கள் காவிரியில் நீராடுவது வழக்கம். பெண்கள் காவிரியில் நீராடி புதுத்தாலி மாற்றிக்கொள்வார்கள். இதேபோல் வருகிற ஆகஸ்டு 8-ந்தேதி ஆடி அமாவாசை நாளில் ஏராளமானோர் காவிரியில் நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆடி மாதம் 28-ந்தேதியான ஆகஸ்டு 13-ந்தேதியும் பக்தர்கள் காவிரியில் நீராடுவார்கள்.

சுற்றுலாத்தலமான மேட்டூருக்கு ஆடி மாத விசே‌ஷ நாட்களில் சேலம் மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அவர்கள் மேட்டூர் காவிரி ஆற்றுக்கு வந்து நீராடி அணைக்கட்டு முனியப்பன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வார்கள்.

மேலும் மேட்டூர் அணைக்கட்டு முனியப்பன் கோயிலை ஒட்டி அமைந்துள்ள பூங்காவிலும் மக்கள் கூட்டம் அலைமோதும். இந்த 3 நாட்களுக்கும் மேட்டூருக்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். இதனிடையே கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டும், பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆடி 18, ஆடி அமாவாசை, ஆடி 28 ஆகிய 3 நாட்களில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை செய்ய பட்டுள்ளது.

மேட்டூர் காவிரி ஆற்றில் நீராடவும், அணைக்கட்டு முனியப்பன் கோவிலில் வழிபாடு செய்யவும், பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் போலீசார், வருவாய் துறையினர், பொதுப்பணித் துறையினர் இணைந்து பணியாற்றி பொதுமக்கள் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் செல்லாமல் கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதுமட்டுமின்றி மேட்டூர் பூங்காவிலும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது இந்த தகவலை மேட்டூர் சப்-கலெக்டர் வீர் பிரதாப் சிங் தெரிவித்து உள்ளார்.

Similar News