உலகம்

கனடாவில் படிக்கும் இந்திய மாணவர்களின் பெற்றோர் கவலை: பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Published On 2023-09-25 09:12 GMT   |   Update On 2023-09-25 09:12 GMT
  • கொலையில் இந்திய ஏஜெண்டுகள் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டி உள்ளார்.
  • கனடாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஏராளமான இந்திய மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

ஒட்டாவா:

கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப்சிங் நிஜார் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் இந்தியா-கனடா இடையே மோதல் போக்கை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலையில் இந்திய ஏஜெண்டுகள் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டி உள்ளார். இந்த குற்றச்சாட்டை இந்தியா மறுத்து உள்ளது.

இந்த பிரச்சினையில் இரு நாடுகளுக்கு இடையே மோதல் வெடித்துள்ளதால் அங்குள்ள இந்திய வம்சாவளியினர் மத்தியில் பதற்றத்தை உருவாக்கி இருக்கிறது.

கனடாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஏராளமான இந்திய மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இரு நாடுகளுக்கு இடையே பகை அதிகரித்து வருவதால் சில மாணவர்கள் இனியும் கனடாவில் படிப்பை தொடரலாமா? என யோசித்து வருகின்றனர். இது இந்தியாவில் வசித்து வரும் அவர்களது பெற்றோர்களுக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

இது தொடர்பாக பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பல்விந்தர் சிங் கூறும்போது என்னுடைய மகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் கனடாவுக்கு படிக்க சென்றார்.

தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை அவளுக்கு கவலை அளித்து இருக்கிறது. படிப்பில் அவளால் சரிவர கவனம் செலுத்த முடியவில்லை என்று கூறினார்.

மற்றொரு மாணவியின் தந்தை குல்தீப்கவுர் கூறும்போது என்னுடைய 2 மகள்கள் கனடாவில் படித்து வருகிறார்கள்.அவர்களுக்கு ஏதாவது ஆகி விடுமோ? என்ற பதற்றத்தில் உள்ளேன். இந்த பிரச்சினைக்கு இருநாட்டு அரசும் உடனடியாக தீர்வு காண வேண்டும். அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.

பஞ்சாப் மாநில பா.ஜனதா தலைவர் சுனில் ஜக்காரி மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு அனுப்பியுள்ள மனுவில் கனடாவில் படித்து வரும் இந்திய மாணவர்கள் அங்குள்ள இந்திய தூதரகத்தை எளிதில் தொடர்பு கொள்ள உதவி மையம் அமைத்து அதற்கான தொலைபேசி எண்ணையும், வெளிநாடு செல்ல திட்டமிடும் மாணவர்கள் தேவைப்படும் பட்சத்தில் அதிகாரிகளை தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண்ணையும் வெளியிட வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ரவ்னீத் சிங் பிட்டு இந்த பிரச்சினையில் பிரதமர் மோடி தலையிட்டு மாணவர்களின் நலனை பாதுகாப்பதில் உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News