உளவு பலூன்
அட்லாண்டிக் பெருங்கடல் மீது பறந்த சீன பலூனை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா
- அமெரிக்க அணு ஆயுத ஏவுதளம் மீது பறந்த சீன உளவு பலூன் பெரிதாக இருந்தது.
- அட்லாண்டிக் பெருங்கடலின் மீது பறந்த சீன உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் மொன்டானா பகுதியில் அணுசக்தி ஏவுதளம் உள்ளது. இந்தப் பகுதி முழுவதும் ராணுவத்தின் முழு கண்காணிப்பில் இருக்கும்.
இதற்கிடையே, அமெரிக்க ரேடார்களின் பார்வையில் மொன்டானா ஏவுதளத்தின் மேல் பகுதியில் ஒரு மர்ம பலூன் பறப்பதை கண்டுபிடித்தனர்.
தகவலறிந்த ராணுவ அதிகாரிகள் அந்த பலூன் எங்கிருந்து வந்தது? எந்த நாட்டைச் சேர்ந்தது என்பது பற்றி ஆய்வு செய்தனர். இதில் அந்த பலூன் சீன நாட்டின் தயாரிப்பு என கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக பென்டகன் செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் பாட் ரைடர் கூறுகையில், அமெரிக்க அணு ஆயுத ஏவுதளம் மீது பறந்த சீன உளவு பலூன் 3 பேருந்துகளின் அளவுக்கு பெரிதாக இருந்தது. அதனுள் என்னென்ன இருந்தது என்பதை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம் என்றார்.
மேலும், லத்தீன் அமெரிக்கா பகுதியிலும் ஒரு சீன உளவு பலூன் பறந்து வருவதாக அமெரிக்க ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது.
இந்நிலையில், மொன்டானாவில் இருந்து தென் கரோலினா வரை வானத்தில் வட்டமிட்ட உளவு பலூன் அட்லாண்டிக் பெருங்கடலின் மீது பறந்தபோது அந்த பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது.
இதுகுறித்து பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் கூறுகையில், அதிபர் ஜோ பைடனின் வழிகாட்டுதலின் பேரில் அமெரிக்க போர் விமானம் தென் கரோலினா கடற்கரையில் உள்ள நீர் மீது சீன மக்கள் குடியரசால் ஏவப்பட்ட உயரமான கண்காணிப்பு பலூனை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியது என தெரிவித்தார்.