உலகம்

பிரதமர் மோடி 56 அங்குல மார்பு கொண்டவர் என்பது வரலாறாகி விட்டது... ராகுல் காந்தி மீண்டும் தாக்கு

Published On 2024-09-10 10:51 IST   |   Update On 2024-09-10 10:51:00 IST
  • பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து இந்தியாவில் நிச்சயமாக ஏதோ மாறிவிட்டது.
  • பா.ஜ.க.வும், பிரதமரும் ஊடகங்கள் மற்றும் ஏஜென்சிகளின் அழுத்தம் உள்பட பல பயத்தை பரப்பினர்.

வாஷிங்டன்:

காங்கிரஸ் மூத்த தலைவரும், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் புலம்பெயர்ந்த இந்தியர்கள் மத்தியில் அவர் பேசிய போது, பிரதமர் மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ். குறித்து விமர்சித்து பேசினார்.

மேலும் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் பற்றியும் அவர் குறிப்பிட்டு பேசினார். அவரது பேச்சுக்கு பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்தது. வெளிநாட்டு மண்ணில் ராகுல் காந்தி இந்தியாவை திட்டமிட்டு அவமதிப்பதாக குற்றம் சாட்டியது.

இந்நிலையில் அமெரிக்காவில் வர்ஜீனியாவின் ஹெர்ண்டன் நகரில் புலம்பெயர்ந்த இந்தியர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசும் போது, பிரதமர் மோடி, பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சை மீண்டும் கடுமையாக சாடினார். அப்போது அவர் பேசியதாவது:-

பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து இந்தியாவில் நிச்சயமாக ஏதோ மாறிவிட்டது. பா.ஜ.க.வும், பிரதமரும் ஊடகங்கள் மற்றும் ஏஜென்சிகளின் அழுத்தம் உள்பட பல பயத்தை பரப்பினர். ஆனால் அனைத்தும் சில நொடிகளில் மறைந்து விட்டன. நிறைய திட்டமிடல் மற்றும் பணத்துடன் இந்த அச்சத்தை பரப்ப அவர்களுக்கு பல ஆண்டு ஆனது. ஆனால் அதை முடிவுக்கு கொண்டு வர ஒரு நொடி மட்டுமே ஆனது.

பாராளுமன்றத்தில் நான் பிரதமரை நேரில் பார்க்கிறேன். 56 அங்குல மார்பு கொண்ட பிரதமர் மோடியின் எண்ணத்தை என்னால் உங்களுக்கு சொல்ல முடியும். அவர் கடவுளுடன் நேரடி தொடர்பு கொண்டவர் என்பதெல்லாம் போய்விட்டது. அது இப்போது வரலாறாகி விட்டது.

சில மாநிலங்கள் மற்ற மாநிலங்களை விட தாழ்ந்தவை, சில மொழிகள் மற்ற மொழிகளை விட தாழ்ந்தவை, சில மதங்கள் மற்ற மதங்களை விட தாழ்ந்தவை, சில சமூகங்கள் மற்ற சமூகங்களை விட தாழ்ந்தவை என்று ஆர்.எஸ்.எஸ். சொல்கிறது. நீங்கள் பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவராக இருந்தாலும் சரி உங்கள் அனைவருக்கும் வரலாறு, பாரம்பரியம், மொழி உள்ளது.

அவை ஒவ்வொன்றும் மற்றொன்றை போலவே முக்கியமானது. ஆனால் தமிழ், மணிப்பூரி, மராத்தி, பெங்காலி எல்லாமே தாழ்ந்த மொழிகள் என்பது தான் ஆர்.எஸ்.எஸ்.சின் சித்தாந்தம்.

இந்தியாவை அவர்கள் புரிந்து கொள்ளாதது தான் இவர்களின் பிரச்சனை. இந்தியா அனைவருக்கும் சொந்தமானது என்பதை பா.ஜ.க. புரிந்து கொள்ள தவறிவிட்டது. இந்தியா ஒரு ஒன்றியம் என்பதை நமது அரசியலமைப்பில் தெளிவாக கோடிட்டு காட்டப்பட்டுள்ளது.

இந்தியா அல்லது பாரதம் மாநிலங்களில் ஒன்றியம் என்று அது கூறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News